மோனலிசா
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஈராண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டின் புனித ரமலான் மாத நோன்பு நடவடிக்கைகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.
சென்ற வியாழக்கிழமை இரவு 7.16 மணிக்கு முதல் நாள் நோன்பு துறக்கப்பட்டது. சிங்கப்பூர் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் உற்சாகத்துடன் தொழுகையில் கலந்துகொண்டனர்.
ஈராண்டுகளுக்குமுன் தொழுகைக்கான அழைப்பில் ‘வீட்டிலேயே தொழுதிடுங்கள்’ என்று குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருந்ததை நினைவுகூர்ந்தார் டன்லப் ஸ்திரீட்டில் உள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் மூத்த இமாம் அஸீஸுல்லாஹ் ஹசானி.
“பின்னர் கொவிட்-19 தொற்றின் வீரியம் குறைந்தபோதிலும் வழிபாட்டு நடைமுறைகளைக் குறுகிய காலத்திலேயே முடிக்க வேண்டிய சூழல் நிலவியது. ‘பயான்’ சொற்பொழிவை விரைவாக முடிப்பது, குறைவான எண்ணிக்கையில் தொழுகை, தொழுவதற்கான விரிப்பை அவரவரே கொண்டுவருவது போன்ற கட்டுப்பாடுகள் பலருக்கும் முழுமையான திருப்தியை அளிக்கவில்லை,” என்றார் அவர்.
“இவ்வாண்டு மக்கள் இஃப்தார் செய்வதற்கான அனுமதி முழுமையாகக் கிடைத்துள்ளது. நோன்புக் கஞ்சி உள்பட, இஃப்தாருக்குத் தேவையான வசதிகளையும் நிறைவான முறையில் வழங்கிவருகிறோம், ” என்று அவர் கூறினார்.
ஒரே நேரத்தில் 500க்கு மேற்பட்டோர் நோன்பு துறப்பதற்கான ஏற்பாடு குறித்தும் திருக்குர்-ஆனை முழுமையாக ஓதித் தொழும் வழக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது குறித்தும் அவர் கூறினார்.
இப்பள்ளிவாசலில் அன்றாடம் இரவு 8.45 மணிக்கு இஷா தொழுகை, இரவு 9 மணிக்கு தராவீஹ் சிறப்புத் தொழுகை ஆகியவை நடைபெறும்.
பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகக் குழுத் தலைவர் முகமது ரஃபீக், “இவ்வாண்டு முகக்கவசம் அணியாமலும் முன்பதிவு இல்லாமலும் பள்ளிவாசலுக்கு வருவதில் மக்களிடையே உற்சாகத்தைக் காண முடிகிறது. கடந்த சில ஆண்டுகளைவிட ஒவ்வொரு தொழுகைக்கும் 30 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் கலந்துகொள்வது வழக்கநிலை வாழ்க்கைக்கு நாம் திரும்பியுள்ளதை உணர்த்துகிறது,” என்று கூறினார்.
இப்பள்ளிவாசலில் ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை 400க்கு மேற்பட்ட நோன்புக் கஞ்சிப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இறுதித் தொழுகைக்குப் பிறகு இரவு 10.15 மணி முதல் இமாமின் சிறப்பு ‘பயான்’ சொற்பொழிவு இடம்பெறும்.
அதிகமானோர் கூடுவதை முன்னிட்டு தொண்டூழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார் சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் நிர்வாகக் குழுத் தலைவர் ரஷீத் ஸமான்.
“பொதுவாக ஒவ்வொரு தொழுகைக்கும் 1,000 முதல் 1,200 பேர் கூடும் இப்பள்ளிவாசலில், தற்போது மறுசீரமைப்புப் பணி நடைபெற்றுவருவதால் தொழுகை செய்யும் இடத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. இதனால் இவ்வாண்டு ஒரு தொழுகைக்கு 200 முதல் 300 பேருக்கு மட்டுமே அனுமதி. மறுசீரமைப்புப் பணிகளால் பெண்கள் தொழுகை செய்யும் இடம் மூடப்பட்டுள்ளது. காலை உணவு 100 பேருக்கு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
அங்குலியா பள்ளிவாசலின் செயலாளரும் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினருமான முகமது இர்ஷாத், “முதல் நாள் தொழுகையின்போது ஏறத்தாழ 3,000 பேர் கலந்துகொண்டனர். ரமலான் மாதம் முழுவதும் வார நாள்களில் 500 நோன்புக் கஞ்சிப் பொட்டலங்களும் வார இறுதி யில் 800 முதல் 1,000 பொட்டலங்களும் விநியோகிக்கப்படும்,” என்று கூறினார்.
“கூட்ட நெரிசலைச் சமாளிக்க தொண்டூழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல இன, பல சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ‘இண்டர்ஃபெயித் கம்யூனிட்டி சர்விசஸ்’ அமைப்பின் மூலம் மற்ற சமயங்களைச் சார்ந்தவர்கள் இஸ்லாம் பற்றி தெரிந்துகொள்வதற்கான அங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
“சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோர் நோன்பு துறக்க பள்ளிவாசலை நாடுவார்கள். கடந்த ஆண்டுகளில் அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். தற்போது கட்டுப்பாடுகள் நீங்கி, அவர்கள் மகிழ்வுடன் ரமலான் மாத நோன்பில் கலந்துகொள்வது மனநிறைவை அளிக்கிறது,” என்று கூறினார் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் ஹாஜி அ. முகமது பிலால்.
பேரவையின் இளையர் பிரிவு அடுத்த மாதம் 9ஆம் தேதி பெஞ்சுரு பொழுதுபோக்கு மையத்தில் 1,000 வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றிணைந்து நோன்பு துறக்கும் நிகழ்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.
“வீட்டிலேயே தொழுகை செய்ய முடிந்தாலும் பள்ளிவாசலுக்கு வருவது நிறைவான அனுபவம். ரமலான் மாதத்தின் முதல் நாளில், நோன்பு துறக்க, பள்ளிவாசலில் பலருடனும் கூடித் தொழுகை செய்தது மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது,” என்று கூறினார் பல்கலைக்கழக மாணவியான 23 வயது அஸ்மினா பானு.
தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் 29 வயது ஷம்ஷீர் அகமது, பள்ளிவாசல்களில் மிகச்சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார். அனைவரையும் ஈராண்டுகளுக்குப் பிறகு தயக்கமோ பயமோ இன்றி கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்றும் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு நாளும் பள்ளிவாசலுக்குச் செல்லும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.