ஆ. விஷ்ணு வர்தினி
ஆங்கிலத்துடன் தாய்மொழியையும் பள்ளிகள் கற்பிக்கவேண்டும் என்ற இருமொழிக் கொள்கை சிங்கப்பூரின் கல்வித்திட்டத்தில் முக்கியத் தூணாக இருந்து வருகிறது. இக்கொள்கையை இயற்றிய அமரர் திரு லீ குவான் இயூவைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு, ஹவ்காங் வட்டார ‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டொட்ஸ்’ பாலர் பள்ளித் தமிழ் மாணவர்களுக்குக் கிடைத்தது.
‘வாட்ஸ் இன்சைட் த ரெட் பாக்ஸ்’ என்ற கதையைத் தமிழில் கேட்டு ரசித்தனர் மாணவர்கள்.
இளம் மாணவர்களிடையே மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடாகியுள்ள இருமொழிக் கேளிக்கை விழாவிற்குத் தயாராகும் வண்ணம் இந்தச் சிறப்பு நடவடிக்கை அமைந்தது.
சிங்கப்பூருக்கான திரு லீயின் கனவுகள், அவர் எங்கும் தம்முடன் கொண்டுசென்ற சிவப்புப் பெட்டிக்குள் அடங்கி இருந்தன எனத் தெரிந்துகொண்ட மாணவர்கள், தத்தம் எதிர்காலக் கனவுகளுக்கு வடிவம் கொடுத்தனர்.
விமானி, மருத்துவர், தீயணைப்பாளர் எனத் தங்களைக் கற்பனை செய்த இம்மாணவர்களின் ஓவியங்களை அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெறும் இருமொழி கேளிக்கை விழாவில் காணலாம்.
‘ஒன் பொங்கோல் செலிப்ரேஷன் ஸ்குவேரில்’ காலை 9.30 மணிக்கு, துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இவ்விழாவைத் தொடங்கி வைப்பார்.
ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என நான்கு மொழி மாணவர்களுக்குமான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இசை, நடன, நாடக நிகழ்ச்சிகளைப் படைப்பர். கைவினைப் பொருள் தயாரித்தல், நிரலிடுதல் போன்ற நடவடிக்கைகளிலும் அவர்கள் பங்கேற்றுப் பலனடையலாம்.
இளம் வயதிலிருந்தே தாய்மொழிப் புழக்கத்தை வீட்டில் ஊக்குவிப்பது குறித்த கலந்துரையாடல் அங்கம் இடம்பெறும்.
இதில் கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஓஸ்மான், கலைஞர் டே கெவை, ‘செல்லமே புக்ஸ்’ நிறுவனத்தை நிறுவிய உஷா குமரன், ரஸ்மியா பானு ஆகியோர் கலந்துகொள்வர். பாலர் பள்ளி மாணவர்களிடையே தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு விளையாட்டுகள், பாத்திரமேற்று நடித்தல் முதலிய நடவடிக்கைகள் பெரிதும் கைகொடுப்பதாகக் கூறினார், பிசிஎஃப் ஸ்பார்க்கல்டொட்ஸ் பள்ளித் தமிழாசிரியர் நஷத் ஃபர்ஹானா.
“மாணவர்களை இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுத்தும்போது நண்பர்களுடனும் தமிழில் பேச அவர்கள் முயற்சி செய்கின்றனர்,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் இருமொழிப் பயண வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ள எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் சிறப்புக் கண்காட்சி அடுத்த மாதம் 8 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும். எஸ்பிஎச், ஸ்பார்க்கல்டொட்ஸ் பாலர் பள்ளி, தேசிய நூலக வாரியம் ஆகியவை இணைந்து நடத்தும் இவ்விழாவிற்கு அனுமதி இலவசம்.