அனுஷா செல்வமணி
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஒன் கம்போங் கிளாம்’ சந்தை இவ்வாண்டு மீண்டும் இடம்பெறுகிறது.
இம்மாதம் 15ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை இடம்பெறும் சந்தையில் 100க்கு மேற்பட்ட முகப்புகளில் விதவிதமான உணவுவகைகளும் ஆடை அணிகலன்களும் விற்கப்படுகின்றன.
பாக்தாத் ஸ்திரீட், கந்தஹார் ஸ்திரீட் ஆகியவற்றுக்கு அருகில் சுல்தான் கேட் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டு உள்ள கூடாரத்தில் 86 உணவு முகப்புகளும் கலைப்பொருள் விற்கும் 23 முகப்புகளும் உள்ளன. வாரந்தோறும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, வண்ண ஒளிக்காட்சிகள், பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அடுத்த மாதம் 1ஆம் தேதி முஸ்லிம்கள் இஃப்தாரில் பங்கேற்கலாம். ஏப்ரல் 7 முதல் 16ஆம் தேதி வரை, பிற்பகல் நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை நன்கொடைத் திரட்டும் நடைபெறவிருக்கிறது.