வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அண்மையில் 36 மனநலத் தூதர்களை நியமித்தது. அவர்களில் ஒருவர் 46 வயது ஆல்வின் சி. ராகவன் ரெஜி (படம்).
தேவாலய போதகரான ஆல்வின், கொவிட்-19 கிருமிப் பரவலின்போது, தங்குவிடுதிகளில் முடங்கியிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதை உணர்ந்தார்.
சமுதாயத்தில் பலருக்கும் மன நலப் பிரச்சினைகள் இருப்பதை உணர்ந்துகொண்ட இவர், மூன்று ஆண்டுகளுக்குமுன் உறவினர் ஒருவரின் பரிந்துரையில் கேன்பரா அடித்தள அமைப்பில் சேர்ந்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்.
தற்போது அடித்தளத் தலைவராக இருக்கும் ஆல்வின், பிறருக்கு உதவும் மனப்பான்மையை தன் பிள்ளைகளிடம் விதைக்கும் நோக்கில் சமூக நடவடிக்கைகளுக்கு மனைவி, பிள்ளைகளையும் அழைத்துச் செல்கிறார்.
மனநலத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இவர், வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின்கீழ் இயங்கும் 19 வட்டார வாடகை வீடுகள் சிலவற்றில் வசிப்போருக்கு மனநல ஆதரவு வழங்கவுள்ளார்.
குடியிருப்பாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, தக்க உதவிகளை இவர் அளிப்பார்.
மனநோய் தாக்குவதற்குமுன் தற்காத்துக் கொள்வதற்கான குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு, அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ஆல்வின் ஏற்பாடு செய்கிறார்.
மனநலத் தூதர்களுக்கு இதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தோடு இணைந்து மனநலத் தூதர்களுக்கான உதவித்தொகுப்பையும் உருவாக்கியுள்ளது.
குடியிருப்பாளர் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாவிட்டால், நிவாரணம் கிடைக்கும்வரை அவருக்குத் தான் ஆதரவாக இருப்பதை ஆல்வின் உறுதிசெய்கிறார்.
உடல் ஆரோக்கியம், நிதிச் சிக்கல் போன்றவற்றால் அவதியுறும் குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளுக்கும் இவர் செவிசாய்க்கிறார்.
தீய பழக்கங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இளையர்களுக்கு விளையாட்டு மூலம் நல்வழி காட்டவும் ஆல்வின் திட்டமிட்டுள்ளார்.
செய்தி:
அனுஷா செல்வமணி