சிங்கப்பூரின் பிரபல ரங்கோலிக் கலைஞர் விஜயலட்சுமி மோகன் அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற 'தி வேர்ல்ட் ஃப்ளவர் கார்பெட்' எனும் மலர் விழாவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து மலர்க் கோலம் வரைந்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் தோக்கியோவின் ஹச்சிஜோஜிமா நகரில், இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் இவ்விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிங்கப்பூர், இந்தியா, ஜப்பான், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சார்ந்த ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட மலர்க் கலைஞர்களும் மற்ற கைவினைக் கலைஞர்களும் (Ephemeral Artists) பங்கேற்றனர். அவர்கள் தங்கள் திறன்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் கைத்திறன்களையும் வெளிப்படுத்தினர்.
'மலர்களுக்கு எல்லைகள் இல்லை' எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மலர்க் கோலக் காட்சியுடன் கருத்தரங்கு, குழு கலந்துரையாடல் போன்ற பல அங்கங்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் மூன்றாம் நாள், 30,000 ஃப்ரீசியா மலர்களைக் கொண்டு கலைஞர்கள் மலர் கம்பளத்தை வடிவமைத்தனர். இந்த மலர்களை கலைஞர்களே முதல் இரண்டு நாள்களும் சேகரித்தனர்.
சிங்கா ரங்கோலி பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் இயக்குநரான திருவாட்டி விஜயலட்சுமி மோகன், 63, "அனைத்துலக அளவில் சிங்கப்பூரின் கலைகளை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பாகவே இப்பங்களிப்பைக் கருதுகிறேன். இந்நிகழ்வு பல்வேறு நாடுகளுடன் கலைத்துறை பிணைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பாகவும் அமைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.
நிகழ்வின் இறுதிநாளில் திருவாட்டி விஜயலட்சுமி 'சிங்கா ரங்கோலி' பயிலரங்கை நடத்தினார்.
இப்பயிலரங்கில் ரங்கோலி கோலங்கள் இடும் பல்வேறு முறைகளையும் உத்திகளையும் இவர் கற்றுத்தந்தார்.
ஆகப்பெரிய ரங்கோலி வடிவமைப்பை உருவாக்கியதற்காக 'கின்னஸ் சாதனை புத்தகத்தில்' இடம்பெற்றிருக்கும் திருவாட்டி விஜயலட்சுமி, 44 முறை 'சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்டஸ்' சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறார்.
மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ப்ரூசெல்ஸ் நாட்டில் ஏறத்தாழ ஒரு மில்லியன் மலர்களைக் கொண்டு 19,000 சதுர அடியில் உருவாக்கப்பட்ட மலர் கம்பளம் நிகழ்விலும் திருவாட்டி விஜயலட்சுமி மோகன் பங்குகொண்டுள்ளார்.
செய்தி: மோனலிசா

