நடனமும் இசையும் ஒருசேரக் கலந்து கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தளிக்கும் விதமாக அண்மையில் நடந்தேறிய 'சம்நிதி - குறுந்தொகை காலத்திலிருந்து - மறுபார்வை' நிகழ்ச்சி அமைந்தது. தமிழ்மொழி விழாவையொட்டி அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தமிழ் இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைப் பாடல்களுக்குக் கலைஞர்கள் நடனமாடுவதாக அமைந்தது.
குறுந்தொகையின் காதல் பாடல்களின் உணர்வினைத் தத்ரூபமாகக் கண்முன்னே கொண்டுவந்த இந்நிகழ்ச்சி, பார்வையாளர்களை நெகிழ்வுறச் செய்தது. வயலின், கிட்டார், கடம் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் பாடகர்கள் தங்களின் இனிய குரலில் பாடி வந்திருந்தோரை மகிழ்வித்தனர்.
இந்நிகழ்வு விகே கலை குழுவினர் ஏற்பாட்டில் இம்மாதம் 9ஆம் தேதியன்று இரு காட்சிகளாக ஸ்டாம்ஃபர்ட் கலை நிலைய உள்ளரங்கில் நடைபெற்றது.
"தமிழ்மொழியின் இலக்கியக் கூறுகளைக் கலை வடிவில் எளிமையான முறையில் மக்களுக்குப் புரியும் விதத்தில் படைப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வினைப் படைத்துள்ளோம்," என்று கூறினார் விகே கலை குழுவின் நிறுவனர் ஷெரீன் ஜீவிதா ஜோசப், 36.
நிகழ்வில் பங்கேற்ற பல்கலைக்கழக மாணவி அம்ரிதா பூர்ணாகிரண், 18, "இந்நிகழ்வில் திரையிசைப் பாடல்களையும் சேர்த்திருந்ததால் பார்வையா ளர்களால் எளிதில் தங்களோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. கலைஞர்களின் படைப்பு மெய்சிலிர்க்க வைத்தது," என்று கூறினார்.
"இலக்கியப் பாடல்களை நடன வடிவில் கண்டு ரசித்தது மிகவும் புதுமையாக இருந்தது. தொடக்கப் பள்ளி மாணவியான என் மகளுக்கும் படைப்பு புரியும் வகையில் இருந்தது," என்று கூறினார் சுய உதவிக் குழு ஒன்றில் பணிபுரியும் சுதா பெரியசாமி, 40.
முன்னாள் நடனக் கலைஞரும் குடும்பத்தலைவியுமான ராணி தையல்நாயகி, 75, "இறுதி அங்கமான குழு நடனத்தில் அனைத்துக் கலைஞர்களும் ஒருசேரப் பிழை ஏற்படாது ஆடியது என்னுடைய பழைய நடன அரங்கேற்றங்களை நினைவூட்டியது," என்றார்.
நிகழ்ச்சி தொடக்கம் முதல் இறுதிவரை அனைத்து வயதினரும் கண்டு ரசிக்கும் விதமாக அமைந்தது.
செய்தி: மோனலிசா

