சிங்கப்பூர் இந்தியர்களின் வரலாறு, கலாசாரம், மரபுடைமை போன்றவற்றை மக்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துக்கூறும் விதமாக இந்திய மரபுடைமை நிலையம் இம்மாதம் 8ஆம் தேதியன்று சுற்றுலா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சுற்றுலாவில் குடும்பங்கள், மாணவர்கள் உள்பட தமிழ்மொழி மீதான பற்றால் மொழியைக் கற்றுக்கொண்ட சீன ஆடவர் ஒருவரும் தமிழ்மொழி மாதத்தை சிங்கப்பூரில் அனுசரிக்க விரும்பி மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த இருவரும் கலந்துகொண்டனர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக சுற்றுலாக்களுக்கு விளக்கவுரைகளை ஆற்றிவரும் வழிகாட்டி ரோஷினி ஷாமளா இந்திய மரபுடைமை நிலையத்தில் உள்ள கண்காட்சிகளையும் சிறப்புகளையும் அதன் வரலாற்றுக் கூறுகளையும் பற்றி தமிழில் விளக்கிக் கூறினார்.
"சிங்கப்பூர் இந்தியர்களின் அனுபவங்களையும் பழக்கவழக்கங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இதுபோன்ற சுற்றுலாக்கள் பல மொழிகளில் இடம்பெற வேண்டும்," என்று 68 வயதான ரோஷினி, தமிழ் முரசிடம் கூறினார்.
"தினமும் தமிழில் செய்தியை வாசிக்கும்போது, மொழியின் நுணுக்கங்களை என்னால் உணர முடிகிறது. சிறுபான்மையினரின் மொழி என்று கருதாமல் தமிழ் மொழியை வளர்க்க என் பங்கை ஆற்றி வருகிறேன்," என்று மொழியியல் ஆய்வுத் துறைஆராய்ச்சியாளரான 31 வயது நீமோ எனும் சீன இனத்தவர் கூறினார்.
எளிமையாக, நகைச்சுவையாக பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி கேள்வி-பதில் அங்கத்தை, முதல் முறை தொண்டூழியர்களாக கலந்துகொண்ட சந்தோஷ் குமார், 17, சுப்ரமணியம் கீதாலயா ஸ்ரீஜெய், 19 வழிநடத்தினார்கள்.
"சிங்கப்பூர் இந்தியர்களின் வரலாறு, அவர்களுக்குள் இருந்த உறவு போன்றவை பற்றி அறிந்துகொண்டேன்," என்றார் ஸ்ரீஜெய்.
"மலேசியாவிலிருந்து வந்தவர்களுடன் சிங்கப்பூர் இந்தியர்களின் அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது," என்றார் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் சந்தோஷ் குமார்.
"பல நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்துக் கடவுள்களின் சிலைகளின் வித்தியாசமான அம்சங்களை நான் கண் டேன்," என்றார் 14 வயது ஜெயதீர்த்தா பாலாஜி.
இந்திய மரபுடைமை, கலாசாரம் பற்றி மேலும் அறிந்திட இந்திய மரபுடைமை நிலையத்திற்கு மக்கள் வரவேண்டும் என்று நிலையத்தின் கல்வி மேலாளர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
செய்தி: ரச்சனா வேலாயுதம்

