அனுஷா செல்வமணி
குடும்பத்தில் அதிகம் மகிழ்ச்சி தருவது அதிகரிக்கும் உறவுகளா, பெருகிவரும் வருமானமா எனும் தலைப்பை ஒட்டி இம்மாதம் 9ஆம் தேதி கேலாங் சிராய் சமூக மன்றத்தில் இடம்பெற்ற சிறப்புப் பட்டிமன்றத்தில் பேச்சாளர்கள் நகைச்சுவையான கருத்துகளை முன்வைத்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
தமிழ்மொழி மாதத்தை ஒட்டி, கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழு முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்த இந்தப் பட்டிமன்றத்தில், சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் 'டோஸ்ட்மாஸ்டர்ஸ்' மன்றங்களைச் சேர்ந்த பேச்சாளர்களை ஒன்றிணைத்த 'விஎஸ்டிகே' பேச்சாளர் குழுவின் அனுபவமிக்க பேச்சாளர்களான தமிழவேல், திலகராணி, மணிகண்டன், பாலமுருகன், கலையரசி, தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் பேச்சாற்றலால் வந்திருந்தோரின் கைதட்டலைப் பெற்றனர்.
கிட்டத்தட்ட 70 பேர் திரண்ட இந்நிகழ்வில் தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயரும் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரும், கேலாங் சிராய் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திரு ஃபாமி அலிமான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பல ஆண்டுகளாக கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழுவில் உறுப்பினராக இருக்கும் ஷஹேஜூதா பர்வீன் ரஹ்மான் ஷரீஃப், 38, "பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்து நடத்தினால் வித்தியாசமாக இருக்கும். பார்வையாளர்களின் மொழியும் வளரும் என நாங்கள் நம்பினோம்," என்றார்.
தமிழ் வானொலியின் புகழ்பெற்ற முன்னாள் படைப்பாளரான திரு செ.ப. பன்னீர்செல்வம் பட்டிமன்றத்தின் நடுவராக நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
பிறந்த குழந்தையிலிருந்து பல உறவுகளோடு வளர்ந்து இன்பதுன்பம் எதுவாக இருந்தாலும், உறவுகள்தான் நம் கடைசி வரை துணை நிற்பார்கள் எனக் கூறியதோடு பணம் இன்று வரும் நாளை போய்விடும் என்று வாதாடினார் தமிழவேல்.
மாதக் கடைசியில் வங்கிக் கணக்கில் சேரும் சம்பளம் அளிக்கும் மகிழ்ச்சிக்கு வேறேதும் ஈடில்லை எனக் கூறி, வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்ப்பதே வருமானத்திற்காகத்தான் எனத் தமது கருத்தை எடுத்து வைத்தார் 'பெருகிவரும் வருமானம்' அணியைச் சேர்ந்த பாலமுருகன்.
'அதிகரிக்கும் உறவுகள்' அணியைச் சேர்ந்த திலகராணி, வருமானமின்றி வாழ்க்கையை ஓட்டுவது கடினம் என்றாலும், ஒருவர் பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம், ஆனால் உறவுகளைச் சம்பாதிப்பது எளிதல்ல என்றார்.
இறுதியாகப் பேசிய தியாகராஜன், என்னதான் உறவுகளை நாம் பெரிதாக போற்றினாலும் அந்த உறவே ஒருவரைப் பணம் இருந்தால்தான் மதிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது என்றார்.
நம் கைகளில் பணம் புரளும் வரைதான் மகிழ்ச்சியும் வியப்பும் நீடிக்கும். அதன் பிறகு உறவுகளைத்தான் தேடிச் செல்ல வேண்டும். உறவுகளால் வரும் மகிழ்ச்சியே சிறந்தது என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.
பட்டிமன்ற பார்வையாளர்களில் ஒருவரான திருவாட்டி அன்பரசி, 60, "இக்காலத்திற்குப் பொருத்தமான தலைப்பில் பேச்சாளர்கள் பேசியதைக் கேட்க மிக சுவாரசியமாக இருந்தது," என்றார்.

