மோனலிசா
ஆன்மாவைத் தொடவல்ல தமிழ் மொழியின் ஒவ்வொரு பரிமாணத்திலும் உள்ளார்ந்த வாழ்வியல் கருத்துகள் பொதிந்துள்ளதாகக் கூறினார் தமிழ்மொழியில் புலமையுடைய அமெரிக்கரான தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா.
வித்தியாசமான முறையில், 'மேஜிக்' சாகசங்கள் நிகழ்த்தி மொழிசார்ந்த கருத்துகளை சுவைபட படைத்தது முத்தாய்ப்பாக அமைந்தது.
உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளின் சித்தாந்தங்களையும் தமிழ்மொழியுடன் இணைந்த தன்னுடைய வாழ்க்கை பயணத்தையும் 'செவிச்செல்வம்: திருக்குறளின் இன்சொல்வழி பயணம்' என்ற தலைப்பில் தமிழ்மொழி விழாவையொட்டிய நிகழ்வில் பகிர்ந்துகொண்டார் திரு தாமஸ்.
வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை 10 மணிக்கு தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
அமெரிக்கரான திரு தாமஸ், தூய தமிழில் சரளமாக திருக்குறள் பற்றி உரையாற்றியதும் அதையொட்டிய மேஜிக் சாகசங்கள் நிகழ்த்தியதும் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. பொருள்பொதிந்த அவ்வங்கத்தை ஆரவாரத்தோடு பார்வையாளர்கள் வரவேற்றனர்.
எழுத்தாளர், மொழிபெயர்ப் பாளர், ஆசிரியர், அறிஞர், 'மேஜிக்' கலைஞர் என பன்முகம் கொண்ட திரு தாமஸ், கடந்த ஆண்டு 'தி குறள்' - திருவள்ளுவரின் திருக்குறள் (The Kural - Tiruvalluvar's Tirukkural) எனும் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். ஆங்கில ஆசிரியரான இவர், 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கற்க அமெரிக்காவிலிருந்தது தமிழ்நாட்டின் மதுரைக்கு வந்தார்.
தமிழ்மொழி மீதும் கிராமிய வாழ்க்கை மீதும் ஏற்பட்ட நாட்டத்தினால் பேச்சு, எழுத்து, இலக் கணம், இலக்கியம், கவிதை, செய்யுள் என மொழியின் பல்வேறு பரிமாணங்களையும் மதுரையருகே உள்ள கிராமத்திலேயே தங்கியிருந்து ஈராண்டுகளில் கற்றுத்தேர்ந்தார்.
தன்னுடைய தமிழாசிரியரின் உந்துதலால் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டுள்ள திரு தாமஸ், 'லைவ்: போயம்ஸ் ஆஃப் ஔவையார்' உள்பட பல்வேறு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
மொழியுடன் தமிழ்ப் பண் பாட்டையும் கண்டு வியந்த இவர், விருந்தோம்பல், நன்றி, அன்பு உள்ளிட்ட பல தமிழர்களின் பாரம்பரிய மரபுக் கூறுகள் தன்னை வியக்க வைத்ததாகவும் புகழாரம் சூட்டினார்.
நிகழ்வின் கேள்வி-பதில் அங்கத்தையும் சுவாரசியமாக வழிநடத்திய இவர், ஒளவையாரின் 'ஊக்கமது கைவிடேல்' என்பதற்கேற்ப ஒவ்வோர் இளையரும் கனவினை நோக்கிய பயணத்தில் ஊக்கத்தை கைவிட்டுவிடக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
"தமிழ்மொழி மாத நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வரும் வளர்தமிழ் இயக்கம் முதல்முறையாக தனித்து ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. உலகளவில் திருக்குறள் கொண்டிருக்கும் சிறப்பை எடுத்துக்காட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி பெற்றிருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது," என்று கூறினார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் சு. மனோகரன்.
நிகழ்ச்சியில் பங்குகொண்ட தொடக்கக்கல்லூரி மாணவி சாதனா சத்யாவாகீஷ்வரன், 16, "அமெரிக்கரான திரு தாமஸ் தமிழ்மொழியில் சரளமாக உரையாடியதும் திருக்குறளின் தனித்தன்மையை எடுத்துரைத்ததும் வியக்க வைத்தது. மொழி மீது அவருக்கு இருக்கும் ஆர்வமும் துடிப்பும் எனக்கும் இருக்க வேண்டும் என்ற உணர்வு என்னுள் மேலோங்குகிறது," என்று கூறினார்.
"ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவரின் வாழ்வில் எத்தகைய ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு திரு தாமஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஓர் ஆசிரியரான எனக்கு இது மிகுந்த ஊக்கம் அளிக்கிறது," என்று கூறினார் தமிழாசிரியரான திலகா ராஜேந்திரா, 58.

