ஆ. விஷ்ணு வர்தினி
சிங்கப்பூரில் வாழும் இலங்கைத் தமிழர்கள் நேற்று சித்திரைப் புத்தாண்டை ஒன்றுகூடி வரவேற்றனர்.
ஷங்கிரிலா ஹோட்டலில் நடந்தேறிய சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட விழாவில் மூன்றாண்டுகளுக்குப் பின்னர், தமது 115வது நிறைவாண்டில் இச்சமூகத்தினரை சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம் இணைத்தது. ஏறத்தாழ 600 பேர் விழாவிற்கு வருகை புரிந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், இலங்கைத் தமிழர்கள் நாட்டு நிர்மாணத்தில் முக்கிய பங்கு வகித்ததைக் குறிப்பிட்டார்.
சட்ட இரண்டாம் அமைச்சருமான அவர், தேசத்தந்தைகளில் ஒருவரும், நாட்டுப் பற்றுறுதியை இயற்றியவருமான திரு எஸ் ராஜரத்னம், நீதிபதி ஏபி ராஜா, மூத்த அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்தினம், தேசிய விளையாட்டாளர் டாக்டர் விஜயரத்னம் என நாட்டுக்குச் சேவையாற்றிய இலங்கை தமிழர்களைப் பட்டியலிட்டார்.
பலசமய நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார்.
அமைச்சர் டோங்குடன் தூதர் திரு எஸ். சந்திரதாஸ், சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் திருவாட்டி சசிகலா பிரேமவர்தினி, சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு குமரன் பெரியசாமி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சமூகத்துக்கு உன்னத பங்காற்றிய சிங்கப்பூர் இலங்கை தமிழர்கள் நால்வர் நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.
மிகச் சிறந்த பங்களிப்புக்கான பிரிட்டிஷ் பேரரசின் விருது பட்டியலின் கெளரவ உறுப்பினர் (MBE) திரு ஜெயதுரை அய்யாதுரை, வனவிலங்கு ஆலோசகரான அமரர் திரு சுப்பராஜ் ராஜதுரை ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேன்மைதாங்கிய சேவை விருது அமரர் டாக்டர் ஆர். தேவேந்திரன், அமரர் திரு சிவசுப்ரமணியம் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளாக சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வரும் 80 வயது திரு கணேசமூர்த்தி, இலங்கையில் இடம்பெற்ற இனக் கலவரங்களும் அரசியல் நிச்சயமின்மையும் கவலைக்குரியதாக இருக்கிறதென தெரிவித்தார். அதேவேளையில், இச்சிக்கல்கள் சமூகத்தினரை சுதந்திர மனிதர்களாக, மனவலிமை கொண்டவர்களாக வார்த்தெடுத்துள்ளது என அவர் கூறினார்.
நண்பர்களுடன் நிகழ்வுக்கு வந்திருந்த பல்கலைக்கழக மாணவி சிவானி பாலகிருஷ்ணன், "இலங்கையில் நிலைமை மேம்பட்டு வருகிறது. மற்ற சிங்கப்பூர் இலங்கைத் தமிழர்களைப் போல நாங்களும் குடும்பமாக முடிந்த நிதி உதவிகளைச் செய்து வருகிறோம். இதுபோன்ற ஒன்றுகூடல்கள் சமூகப் பிணைப்புக்கு உதவுகின்றன," என்றார்.
அடுத்த தலைமுறையினரான தம்மை போன்ற இளையர்கள் வேர்களை மறவாமல் இருக்க இவ்விழா நினைவூட்டுவதாகவும் அவர் கூறினார்.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இங்கு வேரூன்றுவதற்கு சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம் கைகொடுத்துள்ளதாக குறிப்பிட்டார் சங்கத்தின் தலைவர் திரு ஜெயசீலன் கார்த்தி கேசு. தமிழ்மொழி, பண்பாடு குறித்த புரிதலை பல வழிகளில் மேம்படுத்தவும் சங்கம் தொடர்ந்து முயலும் என்று அவர் தெரிவித்தார்.

