'லிஷா' எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள 20 இந்திய சமூக அமைப்புகள் இணைந்து கொண்டாடும் இந்திய கலாசார விழா இம்மாதம் 8ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் ஓர் அங்கமாக இம்மாதம் 15ஆம் தேதி பெர்ச் ரோட்டில் உள்ள திறந்தவெளியில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சி இடம்பெற்றது. நிகழ்ச்சியில் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சமூகத்தினர் ஆடல், பாடல் அங்கங்களைப் படைத்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான், "புனித ஈஸ்டர், சித்திரைப் புத்தாண்டு, சிங்மிங், நோன்புப் பெருநாள் எனப் பல இன, பல சமய பண்டிகைகள் இம்மாதத்தில் நிகழ்வதால் ஒட்டுமொத்த சிங்கப்பூரும் இம்மாதம் முழுக்க விழாக் கோலம் பூண்டு உள்ளது," என்றார்.
"இத்தகைய நிகழ்ச்சிகள் வெவ்வேறு இந்திய கலாசாரங்களின் உணவு, உடை உள்ளிட்ட பல தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள உதவுகின்றன," என்று ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் லிஷா பெண்கள் பிரிவின் தலைவருமான ராஜலக்ஷ்மி கண்ணப்பன் கூறினார்.
கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற நாடகக் கலைஞர் பானு சுரேஷ், "நடன நிகழ்சிகள் அருமையாக இருந்தன. குறிப்பாக நிகழ்வின் ஆரம்பத்தில் நடைபெற்ற பறையிசை சிறப்பாக இருந்தது," என்றார்.
"என் தோழிகள் ஆடிய நடனம் அருமையாக இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பற்றியும் கற்றுக்கொண்டேன்," என்று கூறினார் தொடக்கப்பள்ளி மாணவி மெளலியா கிஷோர், 12. இந்நிகழ்வின் ஓர் அங்கமாக சிங்கப்பூரில் இந்திய சமூக அமைப்புகளின் வரலாறு கூறும் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஔவை மூதாட்டியைச் சிறப்பித்த சித்திரைக் கலை விழா
சித்திரை மாதத்தை வரவேற்கவும் ஒளவையாரின் அறிவுரைகள் கலந்த திரைப்படப் பாடல்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும் இம்மாதம் 16ஆம் தேதி சித்திரைக் கலை விழா எனும் நிகழ்ச்சிக்கு லிஷா ஏற்பாடு செய்திருந்தது.
பெர்ச் சாலை திறந்த வெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி டி. பிரபாகரும் இதில் கலந்துகொண்டார்.
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாடகர்கள் பரசுராம், குணசேகரன், செந்தில் தாஸ், ரம்யா துரைசாமி, சுஜாதா வெங்கட்ராமன் உள்ளிட்டோர் திரையிசைப் பாடல்களைப் பாடினர். பட்டிமன்றப் பேச்சாளர் புதுக்கோட்டை பாரதி, அப்பாடல்களில் ஔவையார் தொடர்பான இலக்கியக் கூறுகளை விளக்கினார்.
"80களிலிருந்து இன்று வரையிலான திரைப்படப் பாடல்களைக் கேட்டு ரசித்ததோடு அவற்றின் பொருளையும் அறிந்துகொண்டோம்," என்றார் முத்துக்குமார்.
'சிஃபாஸ்' நடனக்குழுவின் படைப்பு கண்களுக்கு விருந்தளித்தது.
"கலாசாரம், மரபு, தமிழ் மொழி மூன்றையும் அடுத்த தலைமுறைக்கு வித்தியாசமான முறையில் எடுத்துச் செல்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்," என்றார் ஏற்பாட்டாளர் ஓம் பிரகாஷ்.
"பாடல்களுக்கான பாரதியின் விளக்கம் என்னை ஈர்த்தது," என்றார் அருகில் பொருள் வாங்க வந்த 55 வயது செந்தமிழ்.
"சவால்களை எதிர்கொண்டு புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்பது முக்கியம். சிங்கப்பூரின் பல்லின சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் விதமாக தாய்மொழி விழாக்கள் கலாசாரத்தையும் மரபுகளையும் எடுத்துக்காட்ட உதவியுள்ளன," என்று அமைச்சர் சண்முகம் தமது உரையில் கூறினார்.
செய்தி: மோனலிசா, ரச்சனா வேலாயுதம்

