மோனலிசா
தமிழாசிரியரும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்க முன்னாள் தலைவருமான சி. சாமிக்கண்ணு, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் இந்த ஆண்டுக்கான தமிழவேள் விருதைப் பெற்றுள்ளார்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப் பணியில் உள்ள இவர், ஏறத்தாழ 26 ஆண்டுகள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பணியாற்றியவர்.
தமிழாசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்த 20 ஆண்டுக் காலத்தில் தமிழ்க் கல்வி, ஆசிரியர் பணி சார்ந்த பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த பெருமை இவரைச் சாரும்.
இவர் சங்கத்தின் செயலாளராக இருந்தபோது, மாணவர்கள் மத்தியில் தமிழ்மொழிப் புழக்கம் குறைந்துவருவது கண்டறியப்பட்டது. எனவே, 1990களில் 'தமிழில் பேசுவோம்' இயக்கத்தைத் தொடங்கியது.
தற்போது பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் தமிழ்மொழி விழாவிற்கு வித்திட்டது அந்த இயக்கம்.
உலகத் தமிழாசிரியர் பேரவையில் 10 ஆண்டுகளுக்குமேல் தலைவராகச் செயலாற்றிவரும் திரு சாமிக்கண்ணு, உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்குப் பெரும் பங்காற்றி வருகிறார்.
சிறுவயதிலும் பின்னர் தமிழாசிரியர் என்ற நிலையிலும் இன்றும்கூட தாம் வியந்து போற்றும் வரலாற்று நாயகன் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பெயரில் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் தாம் பெருமை கொள்வதாகக் கூறினார் திரு சாமிக்கண்ணு.
அடுத்த தலைமுறையினரைச் செம்மைப்படுத்துவதற்கு அடித்தளமான கற்றல், கற்பித்தல் துறையில் சிங்கப்பூர் தொடர்ந்து பல நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் என்றார் அவர்.
தமிழ்மொழி விழாவையொட்டி இம்மாதம் 16ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்ற 'முத்தமிழ் விழா' நிகழ்ச்சியில் 300க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் நடிகருமான பவா செல்லதுரை கலந்துகொண்டார்.
"மானுடத்தின் அறத்தையும் மேன்மையையும் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாமானிய மக்கள் எளிமையான முறையில் உணர்த்திவிடுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
'மானுடத்தின் திறப்புகளில் கதைகளின் அழகு' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய அவர், வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள கருத்துகள் பலவும் வகுப்பறைக்கு வெளியிலும் கொட்டிக்கிடக்கின்றன என்றும் அதனை எழுத்தாளர்கள் எளிமையான முறையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவருமான இரா. தினகரன், "இளையர்கள் அதிக அளவில் தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எதிர்காலத் தலைமுறை மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உற்சாகமளிக்கிறது," என்றார்.
28ஆம் ஆண்டாக நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கும்மி நடனம், மாணவர்களின் மாறுவேடப்போட்டி, பேச்சுத் திறன் போட்டி போன்றவையும் இடம்பெற்றன.
மாணவர்கள், இளையர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் முத்தமிழ் விழாவையொட்டிக் கடந்த மாதம் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பங்கேற்ற உயர்நிலைப்பள்ளி மாணவி யாழிசை ராஜேந்திரன், 14 "பாலர்பள்ளி மாணவர்களின் மாறுவேடப்போட்டியில் கம்பீரமான கதாபாத்திரங்களைத் தங்களின் மழலை மொழியில் கண்முன் கொண்டுவந்த சிறார்களின் படைப்புகள் அருமையாக இருந்தன," என்று கூறினார்.
மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்படும் தமிழ்ப் போட்டிகள் வரவேற்கத்தக்கவை என்றும் சிறப்புப் பேச்சாளரின் உரை நகைச்சுவையாகவும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் அமைந்திருந்ததாகவும் கூறினார் முத்தமிழ் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 43 வயது குடும்பத்தலைவி கமலா செல்வசுந்தரம்.

