இவ்வாண்டுத் தமிழ்மொழி விழாவின் 'அழகு' எனும் கருப்பொருளுக்கு ஏற்ப சிற்பிகள் மன்றம் 'தமிழோடு உறவாடு 2023 சொல் அழகு' என்ற போட்டியை இம்மாதம் 15ஆம் தேதி நடத்தியது. வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழு ஆகியவற்றின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் தொடக்கநிலை 5, 6 மாணவர்களும் உயர்நிலை 1, 2 மாணவர்களும் கலந்துகொண்டனர்.
'ஸூம்' வழியாக நடைபெற்ற போட்டியில், 50 மாணவர்கள் பங்கேற்றனர்.
"தமிழில் மாணவர்களின் சொல்வளம் அதிகரிக்க வேண்டும். அதேவேளை தமிழ்ச் சொற்களின் அழகை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இப்போட்டியின் நோக்கம்," என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
"போட்டியில் கற்றுக்கொண்ட புதிய தமிழ்ச் சொற்களை மாணவர்கள் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முதலியவற்றில் பயன்படுத்த முயல்வர்.
"தலைமுறைக்குத் தலைமுறை தமிழ்ச் சொற்களின் பயன்பாடு குறைகிறது. இளையர்கள் பல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். புழக்கத்தில் இருந்தால்தான் மொழி வளரும். இல்லையேல் எதிர்காலத்தில் பல சொற்கள் வழக்கிழந்து போகலாம்," என்று சிற்பிகள் மன்றத்தினர் குறிப்பிட்டனர்.
பரிசு வென்றவர்களில் ஒருவரான தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதா சீனிவாசன், "இந்தப் போட்டி புதுமையான அனுபவமாக அமைந்தது. பல புதிய சொற்களைக் கற்றுக்கொண்டேன்," என்றார்.
அவரது தாயார் கீதா சீனிவாசன், "தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரித்து அதை வாழும் மொழியாகக் காக்க இதுபோன்ற முயற்சிகள் நிச்சயம் உதவும்," என்று கூறினார்.
பரிசு வென்ற மற்றொரு மாணவர் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பில் பயிலும் கார்த்திக் சரண் கணபதி.
"இதில் கற்றுக்கொண்ட புதிய சொற்கள் பள்ளியிலும் அன்றாட வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். தமிழ்க் கவிதைகளில் இடம்பெறும் சொற்களின் பொருளை இனி எளிதில் புரிந்துகொள்ள முடியும்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தி: சபிதா ஜெயகுமார்
படம்: ஏற்பாட்டாளர்கள்