'கொவிட்-19 சிங்கப்பூரர்களை பிளவுபடுத்தியுள்ளது' என்ற தலைப்பில் திறமையாக வாதம் செய்து சொற்சிலம்பம் 2023ன் மாபெரும் இறுதிச்சுற்றில் வெற்றி வாகை சூடினர் யுனோயா தொடக்கக் கல்லூரி அணியினர்.
தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், மத்தியக் கல்வி கழகங்கள், ஐபி திட்டக் கழகங்கள் ஆகியவற்றின் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய தமிழ் மொழி விவாதப் போட்டியின் இறுதிச்சுற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மீடியாகார்ப் வளாகத்தில் நடந்தது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நடத்தப்பட்ட இப்போட்டியை கார்த்திகேயன் சோமசுந்தரம் வழிநடத்தினார். ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளியும் யுனோயா தொடக்கக்கல்லூரியும் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றன. சிறந்த பேச்சாளராக ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளியின் சங்கர் ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல் சுற்றில் தகுந்த சான்று களுடன் ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி ஒட்டிப் பேச, பல சமூக அறிவியல் கருத்துகளுடன் யுனோயா தொடக்கக் கல்லூரி வெட்டிப் பேச, போட்டி சூடுபிடித்தது. சிறப்பாகச் செயல்பட்ட இரு அணிகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் உடனடித் தலைப்பு ஒன்று தரப்பட்டது.
'செயற்கை நுண்ணறிவால் பல வேலைகள் முழுமையாக அழிந்துவிடும்' என்ற தலைப்பில் வெட்டிப் பேசியது ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி. இவர்களுக்கு எதிராக யுனோயா தொடக்கக் கல்லூரி மாணவர்கள் தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.
போட்டியில் வென்ற யுனோயா தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் இறுதிச் சுற்றுக்கு வந்த தங்களின் முதல் அனுபவத்தைப் பற்றி தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.
"எங்களின் ஒவ்வொரு பேச்சாளரின் தனித்துவத்தையும் மதித்து ஒவ்வொருவரின் பலத்தைக் கருதி எங்களை நாங்களே மேம்படுத்தும் வகையில் வாதங்களைத் தயார் செய்தோம்," என்றனர் அவர்கள்.
வெற்றியோ தோல்வியோ கிடைத்த அனுபவத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டதாக ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி அணி கூறியது.
"தமிழ் மொழியின் வளத்தை அறிந்துகொண்டதோடு விவாதம் செய்யும் உத்திகளையும் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்டோம். நிச்சயம் இது ஒரு மறக்க முடியாத அனுபவம்," என்றனர் அந்த அணியினர்.
செய்தி வாசிப்பாளரும் தமிழ் ஆர்வலருமான இலக்கியா செல்வராஜி, முப்பதாண்டு ஊடகத் துறை திறனாளர் திரு முஹம்மது அலி, இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜசேகர் ஆகியோர் போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றினர்.
தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, வளர்தமிழ் இயக்கம் ஆகியவற்றின் ஆதரவில் மக்கள் கழக நற்பணிப் பேரவை, வடமேற்கு வட்டார இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள், வசந்தம் தொலைக்காட்சி ஆகியன ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கலந்துகொண்டார்.