அனுஷா செல்வமணி
காலஞ்சென்ற தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தமிழவேள் நற்பணி மன்றம் 'உலகமும் நாமும்' எனும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த 23ஆம் தேதியன்று 'ஸூம்' வழியாக நடைபெற்ற இந்நிகழ்வில், இக்கால இளையர்கள் எவ்வாறு தங்களின் தமிழ்மொழிப் புழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் அது வீட்டிலேயே தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் அமைந்தது.
பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே. மயூரி, பேச்சாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றி னார்.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவருமான முனைவர் திரு ஆர். தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
திரு. தினகரன், தமிழவேள் கோ.சாரங்கபாணியின் அருந்தொண்டினை நினைவுகூர்ந்து பேசினார். அவருடன் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறப்புப் பேச்சாளர்களும் இணைந்துகொண்டனர்.
வெளிநாட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தாலும் நம் மொழியை விட்டுக்கொடுக்காமல் அதைத் தொடர்ந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டுமென ஆழமாக தனது கருத்தை எடுத்து வைத்தார், வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் செயலாளருமான வாஷிங்டன் சிவா.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சக்தி நஞ்சுண்டன் தமது சூழல் குறித்து நிகழ்வின்போது பகிர்ந்துகொண்டார். மனைவி மலேசியா நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழியை நன்கு கற்றுத்தேர்ந்து பேசினாலும் வீட்டில் தங்களின் பிள்ளைகள் தமிழ்மொழியில் பேசுவது குறைவு என்று கூறி வருந்தினார்.
நிகழ்வில் கலந்துகொண்ட இல்லத்தரசியான தேவி, 39, "இதுபோன்ற நிகழ்ச்சிகளில் குடும்பங்கள் கலந்துகொள்வதன் மூலம் பெற்றோர் வலியுறுத்துவதைப் பிள்ளைகளால் எளிதில் அறிந்துகொள்ள முடியும். தமிழ் மொழி மீதான ஆர்வம் அதிகரிப்பதோடு அதைச் சரளமாகப் பேசுவதற்கும் பிள்ளைகளுக்கு நாட்டம் ஏற்படும்," என்றார்.
தமிழ்மொழியில் சரளமாகப் பேச இயலாவிட்டாலும் வீட்டிலாவது ஓரளவு பேச்சுத் தமிழில் பேசுவது சிறந்தது என நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிஞர் க.து.மு.இக்பால், சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.ச.வரதன், திரு.எம்.இலியாஸ் மூவரும் தமிழவேளோடு தங்களுக்கு இருந்த தொடர்பை நினைவுகூர்ந்தனர்.

