மோனலிசா
தமிழ்மொழி கற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் கடினம் என்ற மிகைப்படுத்தப்பட்ட மனப்போக்கு பெரும்பான்மையான தமிழர்களிடம் நிலவுவதைச் சுட்டிக்காட்டினார் கவிஞர் மகுடேசுவரன்.
இவ்வாண்டின் தமிழ்மொழி மாதத்தின் இறுதிநாளின் நிறைவு நிகழ்வான 'சுடர் தந்த தேன்' நிகழ்வில் 'இலக்கணத்தின் பேரழகு' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய அவர், "மொழியின் இயல்புகளைச் சுட்டுவதே இலக்கணம். நாம் பேசிப் புழக்கத்தில் இருக்கும் வட்டார வழக்குச் சொற்களும் கொச்சை சொற்களும்கூட நம்மை அறியாமலேயே இலக்கண விதிகளுக்கு உட்பட்டே அமைகின்றன," என்று கூறிப் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அதற்கான பல சான்றுகளையும் முன்வைத்த அவர், தமிழ்மொழியின் எளிய அடிப்படையே தமிழ் என்பதை 'கவிமாலை - சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் இயக்கம்' ஏற்பாட்டில் நடைபெற்ற அந்நிகழ்வில் விளக்கினார்.
மேலும் உலகளவில் தமிழ் இன்றளவும் தழைத்தோங்க அயலகத் தமிழர்களின் பங்கு இன்றியமையாதது. அதிலும் சிங்கப்பூர் மக்களின் தமிழ்மொழி ஈடுபாடு மெச்சத்தகுந்த ஒன்று என்று சிங்கப்பூர்த் தமிழர்களின் தமிழார்வத்திற்குப் புகழாரம் சூட்டினார் அவர்.
தமிழ்மொழியில் ஓரெழுத்து வினைச்சொற்கள் 45 என்றும் இரண்டு, மூன்றெழுத்துகளில் சில ஆயிரமும் நான்கெழுத்துகளில் சில நூறும் ஐந்தெழுத்துகளில் மிகக் குறைந்த சொற்களுமே உள்ளன என்பதை விளக்கிக்கூறிய அவர், இவற்றை எல்லாம் இன்றைய இளையர்களுக்கு எளியமுறையில் புரியவைத்தாலே அவர்கள் அதீத ஆர்வத்துடன் மொழியினைக் கற்றுக்கொள்ள முன்வருவர் என்பதையும் குறிப்பிட்டார்.
பெற்றோர் தங்களுடைய உடைமைகளையும் சொத்துகளையும் அடுத்த தலைமுறையினரிடம் சேர்ப்பதுபோல மொழியினைக் கொண்டு சேர்க்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழ்ப் பெற்றோரின் ஆக உயர்ந்த கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில் கவிமாலை இயக்கத்தின் இவ்வாண்டின் 'இளங்கவிஞருக்கான தங்க முத்திரை விருது' கவிஞர் இராம.நாச்சியப்பன், 'தமிழ்ச்சான்றோருக்கான கணையாழி விருது' எழுத்தாளர் திருமதி நூர்ஜஹான் சுலைமான் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன், "யுனெஸ்கோ ஆராய்ச்சித் தகவல்களின்படி உலகளவில் பல மொழிகள் தினந்தோறும் அழிந்து வருகின்றன.
"தமிழ்மொழி அப்பட்டியலில் இணையாமல் இருப்பதற்கு நம் மொழியினை வாழும் மொழியாகக் கொண்டாடி அன்றாட வாழ்வில் நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்," என்று கூறினார்.
நிகழ்வினையொட்டி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட கவிதை சொல்லும் போட்டி, கவிதை பயிலரங்குடன் கூடிய போட்டி, கவிதை மொழிபெயர்ப்பு பயிலரங்கத்துடன் கூடிய போட்டிகளுக்கான பரிசளிப்புகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.
மேலும், நிகழ்வில் மாணவர்களின் இசைச் கச்சேரி, பாடல்களுடன் அமைந்த நாடகம் எனப் பல்வேறு சிறப்பு அங்கங்களும் இடம்பெற்றிருந்தன.