ஒன்றிணைந்த சமூகத்தின் வளர்ச்சியில் உழைப்பாளர் பங்கினைப் பறைசாற்றும் வண்ணம் தொழிலாளர் தினத்தையொட்டி மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா அண்மையில் நடைபெற்றது.
"எந்தக் காலத்திற்கும் ஏற்புடைய வண்ணம் பாடல்களை எழுதியுள்ள மக்கள் கவிஞர், தமது சொற்ப வாழ்நாளில் தலைமுறைகள் தாண்டி நிலைத்து நிற்கும் பல சீரிய புரட்சிக் கருத்துகளை விதைத்துச் சென்றுள்ளார்," என்று கூறினார் நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் முல்லை நடவரசு.
பாட்டாளி மக்களின் குரலாகவும் முரசொலியாகவும் விளங்கும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளில் உள்ள எளிமையே அவரை பாமரனிடத்திலும் கொண்டு சேர்த்தது என்று புகழாரம் சூட்டிய இவர், அவருடைய பாடல்கள் சிலவற்றைப் பாடியும் பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
'பட்டுக்கோட்டையாரின் சமுதாயப் பார்வை' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய கவிஞர் முல்லை நடவரசு, சமூக வளர்ச்சியில் ஒவ்வோர் உழைப்பாளிக்கும் இருக்கும் பங்கினையும் உரிமைகளையும் பட்டுக்கோட்டையார் தம் பாடல்களின் வழி கோடிட்டுக் காட்டியுள்ளதைச் சுட்டினார்.
மேலும், இளையர்களிடத்தில் பட்டுக்கோட்டையார் பாடல்களை எடுத்துச்செல்வது அவர்களின் சிந்தனையையும் ஆற்றலையும் ஆக்கபூர்வமான பாதையில் வழிநடத்திச் செல்லும் என்பதை வலியுறுத்திய இவர், மக்கள் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றின் பல சுவாரசிய சம்பவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வில் மக்கள் கவிஞர் மன்றம் ஆண்டுதோறும் வழங்கும் உழைப்பாளர் விருது, இவ்வாண்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நோயாளிகளைப் பராமரிக்கும் உதவியாளராக பணிபுரியும் திருமதி பொன்னையா மிடல் லெட்சுமிக்கு வழங்கப்பட்டது. அவருடைய தன்னலம் கருதாத 20 ஆண்டுகளுக்கும் மேலான சேவையைச் சிறப்பித்து விருது அளிக்கப்பட்டது.
"சிறு பிள்ளை முதல் பெரியவர்வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் எளிய தமிழில் வாழ்வியல் கருத்துகளை எடுத்துக்கூறும் மக்கள் கவிஞரின் பாடல்களை அடிக்கடி நாம் கேட்பது நம்மைப் பல வழிகளில் நன்னெறிப்படுத்தும்," என்று கூறினார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன்.
மே தினத்தன்று மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. 19 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படப் பாடல்களுக்கு எம்.ஜி.ஆர் வேடமணிந்து நடனமாடி மகிழ்வித்தார் சிங்கப்பூர் கலைஞர் எம்.ஜி.ஆர் சந்திரபோஸ்.
முன்னதாக, பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற பட்டுக்கோட்டையாரின் பாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றோருக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசினை வென்ற மாணவர்கள் பின்னணி இசையுடன் அப்பாடல்களைப் பாடிய அங்கம் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தனியார் நிறுவன மேலாளர் சித்ரா செல்வராஜன், 42, "பட்டுக்கோட்டையாரின் வாழ்க்கை வரலாற்றையும் சமூகப் பார்வையையும் விளக்கிய கவிஞர் முல்லை நடவரசுவின் சிறப்புரை சுவாரசியமாக இருந்தது. அவர் குறிப்பிட்டதுபோல என் பிள்ளைகளுக்கு பட்டுக்கோட்டையாரின் பாடல்களைச் சொல்லித்தர திட்டமிட்டு உள்ளேன்," என்று கூறினார்.
செய்தி: மோனலிசா