மாதங்கி இளங்கோவன்
இளையர்கள் உள்ளூர் இலக்கியத்தைப் பயன்படுத்தி புதுமையான குறும்படங்களை அல்லது முழுநீளத் திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது 'தமிழும் திரைக்கலையும்' என்ற படப்பிடிப்புப் பயிலரங்கு.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான இந்த ஒருநாள் பயிலரங்கு 'சிட்ஃபி' குழுவின் ஏற்பாட்டில் இம்மாதம் 6ஆம் தேதியன்று உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இடம்பெற்றது.
பயிலரங்கில் மாணவர்கள் வெவ்வேறு படப்பிடிப்பு உத்திகளைக் கற்றுக்கொண்டதுடன் 'சிட்ஃபி' தயாரிப்பில் எடுக்கப்பட்ட `நூல் கதைகள்', `நச்சுக்கோப்பை' என்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பையும் பெற்றனர். அப்படங்களில் நடித்த நடிகர்களில் சிலர் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் தங்களின் அனுபவங்களையும் திரைப்பட, நாடகத் துறையில் எதிர்கொள்ளும் சவால்களையும் பற்றி மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
"மாணவர்கள் குறுகிய காலத்திலேயே நாங்கள் கற்றுத்தந்தவற்றை உள்வாங்கிக்கொண்டு படப்பிடிப்பு முயற்சிகளில் ஆர்வத்தோடு களமிறங்கியதைக் காண உற்சாகமாக இருந்தது," என்றார் பயிற்றுநராக இருந்த திரு செம்பியன் சோமசுந்தரம். படப்பிடிப்பின் ஒவ்வொரு கட்டத்தைப் பற்றியும் ஒளிப்பதிவு பற்றியும் கற்றுக்கொடுத்தபோது தாம் முன்பு கற்றுக்கொண்ட அம்சங்களை மீண்டும் நினைவுகூர வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரு படங்களையும் பார்த்த பின்னர், மாணவர்கள் ஏறத்தாழ இரண்டு நிமிடங்களுக்கு இந்தியர்களின் கலாசாரம் அல்லது சிங்கப்பூர் வரலாற்றை எடுத்துக்காட்டும் காட்சியொன்றைத் தங்களுடைய குழுவினருடன் சேர்ந்து படமாக எடுத்தனர்.
"முகபாவங்களின் முக்கியத்துவத்தை இந்தப் பயிலரங்கு வலியுறுத்தியது. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு சிறு காட்சியும் சிறப்பாக அமைய 15 முறைகூட படம்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை அறிந்துகொண்டேன்," என்றார் பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர் முருகன் தயாநிதி, 14.
'சிட்ஃபி' பயிலரங்கு புதுமையானதோர் அனுபவம் என்றார் தேவரத்னாகீர்த்தி, 13, என்ற மாணவி. திறன்பேசியைப் பயன்படுத்தி எவ்வாறு படம்பிடிப்பது, படம்பிடித்த காட்சிகளை ஒரு கோவையாக ஒளிப்பதிவு செய்வது போன்றவற்றைக் கற்றுக்கொண்டதாக அவர் சொன்னார்.

