திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் சீன, மலாய் மாணவர்கள் பங்கேற்பு
ஆ. விஷ்ணு வர்தினி
வேற்றினத்தாரையும் வரவேற்று தமிழர்களுடன் ஒன்றிணைத்து தமிழ்மொழியையும் பண்பாட்டையும் கொண்டாடியது 'சங்கமம்' மேடை நிகழ்ச்சி. ராஃபிள்ஸ் கல்விக் கழக இந்தியப் பண்பாட்டு மன்றத்தின் படைப்பான இது, தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட 300 பேரை இணைத்தது.
கடந்த மாதம் 28ஆம் தேதி ராஃபிள்ஸ் கல்விக் கழக வளாகத்தில் நடந்தேறிய 'சங்கமம்', மூன்றாண்டுகளுக்குப் பின்னர் மக்களை நேரடியாக வரவேற்றது. ஏறத்தாழ பத்தாண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது 'சங்கமம்' எனும் இந்தச் சிறப்பு வருடாந்திர படைப்பு. இவ்வாண்டு புதியதொரு பரிமாணத்துடன் அது அரங்கேறியது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக கலப்பு நடன, சொல்லியல் (ராப்) போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, வேற்றுமொழியினருக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் சீனர்களும் மலாய் இனத்தவரும் பங்கேற்றனர்.
ஏறத்தாழ 40 மாணவர்களின் கூட்டுமுயற்சியான சங்கமம், வளர்ந்துவரும் கலைஞர்களுக்குத் தளம் அமைத்துத் தந்தது. வெற்றியாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
மொத்தம் பத்து உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் பங்குகொண்டனர். இப்போட்டிகளுக்கு வந்துசேர்ந்த படைப்புகளில் மிகச் சிறந்த சில, ராஃபிள்ஸ் கல்விக்கழக மாணவர்களின் கலைப் படைப்புகளுடன் சங்கமம் நிகழ்வின்போது மேடையேறின; பார்வையாளர்களை ஆரவாரத்துடன் ரசிக்க வைத்தன. உள்ளூர்க் கலைஞர்களான பஹாருதினும் 'ஃபுலோ' பிரசாத்தும் கலந்துகொண்டு சொல்லியல் போட்டியாளர்களை ஊக்குவித்தனர்.
தமிழரல்லாதோரையும் மனத்திற்கொண்டே சங்கமம் நிகழ்வு அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தது என்றார் இந்தியப் பண்பாட்டு மன்றத்தின் தலைவர் சுவிதா சபேசன், 17. நிகழ்வு முழுக்க ஆங்கிலத்திலும் தமிழிலும் துணையுரை இருந்ததே இதற்கு முக்கியச் சான்று.
இந்தியப் பண்பாட்டு மன்றம் தொடர்ந்து இதுபோன்ற புதுமையான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யும் முனைப்பில் உள்ளதாக துணைத்தலைவர் முகேஷ்மித்ரன் சாமித்துரை கூறினார்.
சங்கமத்தின் பெரிய வெற்றி, வேற்றின மாணவர்களையும் தமிழ்மொழியில் ஈடுபடுத்தி, அதன் அழகைப் பாராட்டச் செய்ததே என்பது அவரின் நம்பிக்கை.
"வகுப்பறையைத் தாண்டி தமிழுடன் தொடர்பில் இருக்க இதுபோன்ற முயற்சிகள் மாணவர்களுக்குக் கைகொடுக்கின்றன. மாணவர்களின் ஆளுமை, தலைமைத்துவத் திறன்களை இந்த நிகழ்வு பெரிதும் வெளிக்கொணர்ந்துள்ளது," என்றார் அவர்.
நுழைவுச்சீட்டு விற்பனைவழி ஈட்டப்பட்ட 3,000 வெள்ளி தேசிய சீறுநீரக அறநிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

