மோனலிசா
பேச்சாற்றலையும் மொழித்திறனையும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்க்கும் நோக்கில் தமிழ்மொழி விழாவையொட்டி அண்மையில் பேச்சாளர் மன்றத்தின் பேச்சுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
பேச்சுத்திறனை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்வு, தமிழ்மொழி விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 30ஆம் தேதியன்று தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெற்றது.
தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 'அரங்கப் பேச்சுப்போட்டி' அங்கத்தில் எட்டுப் பேச்சாளர்கள் எந்த முன்தயாரிப்புமின்றி தலைப்பு கொடுக்கப்பட்டவுடன் பேசத் தொடங்கியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அனைத்துப் போட்டியாளர்களும் 'தென்றல் என்னைத் தீண்டியதில்லை; ஆனால் தீயை நான் தாண்டி இருக்கிறேன்' என்ற ஒரே தலைப்பில் இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் நகைச்சுவையாகவும் உணர்வுபூர்வமாகவும் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.
நிகழ்வின் பிற்பாதியில் 'தயாரிக்கப்பட்ட உரைப் போட்டி' அங்கத்தில் எட்டுப் போட்டியாளர்கள் களமிறங்கினர். 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்', 'சும்மாதானே', 'ஆண் பாவம்', 'கதை எனும் விதை' போன்ற பல தலைப்புகளில் பேச்சாளர்கள் ஏழு நிமிடங்களுக்கு மிகாமல் உற்சாகத்துடன் பேசினர்.
சில பேச்சாளர்கள் தங்களது தலைப்பிற்குத் தகுந்த உடை அணிந்தும் 'பறை' போன்ற பொருள்களைக் கொண்டும் பேசியது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியர் அ. வீரமணி, "தமிழ்மொழிப் புழக்கம் தமிழர்கள் அனைவரது வீடுகளிலிருந்தும் தொடங்கவேண்டும். தமிழ்மொழிப் பயன்பாடு இல்லங்களில் தேயத் தொடங்கினால் வருங்காலத் தலைமுறைகளை அது பாதிக்கும். எத்தனையோ முன்னோடித் தமிழ் ஆர்வலர்களின் தலைமுறைகளைத் தமிழ் சார்ந்த பணிகளில் இப்போது காண முடியாததே இதற்குச் சான்று," என்று கூறினார்.
"பேச்சாளர் மன்றங்களில் பயிற்சிபெறும் பேச்சாளர்கள் குறித்த நேரத்திற்குள் தாம் சொல்ல வந்த கருத்தை அனைவருக்கும் எளிதில் புரியும்படியும் மனத்தில் பதியும் வண்ணமும் உரையாற்றும் திறமையை இதன்மூலம் மேம்படுத்திக்கொள்கிறார்கள்," என்று தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் முத்துச்சாமி குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற குடும்பத்தலைவியான திருவாட்டி இந்திரா கவியரசன், 39, "பேச்சாளர்கள் நகைச்சுவை உணர்வுடனும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் பேசியது அருமை. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழுணர்வையும் ஆர்வத்தையும் தூண்டுகின்றன," என்று கூறினார்.
தயாரிக்கப்பட்ட பேச்சுப் போட்டிப் பிரிவில் பேச்சாளர் பாலா வெங்கட்டும், தயாரிப்பின்றி அரங்கப் பேச்சுப் போட்டியில் பேச்சாளர் பிரியங்கா நேருவும் வாகை சூடினர்.
போட்டியில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுக்கோப்பைகளும் கலந்துகொண்டவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

