பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட கணவரைப் பராமரிப்பதோடு குறைந்த வருமானத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைச் சமைக்க சிரமப்பட்டார் 67 வயது திருவாட்டி மாணிக்கம் புஷ்பம்.
இச்சிக்கல்களைச் சமாளிக்க இவருக்குக் கைகொடுத்துள்ளது உணவு விநியோகச் சேவை வழங்கும் 'டிலிவரு' நிறுவனம்.
கடந்த ஆறு ஆண்டுகளாக 'ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்ஸ்' சமூக அமைப்புடன் இணைந்து, சமூக உணவுப் பொட்டலத் திட்டத்தின் கீழ் இவருக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அடங்கிய பைகளை ஒவ்வொரு வாரமும் அது வழங்கி வருகிறது.
ஓரறை வாடகை வீட்டில் தன் கணவருடன் வசிக்கிறார் துப்புரவாளராகப் பணியாற்றும் திருவாட்டி மாணிக்கம் புஷ்பம்.
இவரைப் போன்ற வசதி குறைந்தோருக்கு, சமைக்கத் தேவையான எண்ணெய், ரொட்டி, முட்டை, காய்கறிகள் போன்றவை சமூக உணவுப் பொட்டலத் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
அதனால், மற்ற உணவுப் பொருள்களை வாங்க மாதத்தில் $100 மட்டும் செலவு செய்வதாகக் கூறும் திருவாட்டி மாணிக்கம் புஷ்பம், அவசரத் தேவைக்காகத் தன்னால் பணம் சேமிக்க முடிவதாகக் குறிப்பிட்டார்.
"ஒவ்வொரு மாதமும் உணவு, மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், மருந்து போன்றவற்றுக்கான செலவுகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. என் சம்பளம் போதாத நிலையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட என் கணவரின் உடல்நிலை குன்றியது.
"தற்போது அவரும் பகுதிநேரப் பாதுகாவலராகப் பணிபுரிகிறார். எதிர்காலத்தில் எங்களால் வேலை செய்ய முடியாத கட்டத்தில் இத்தகைய உணவுப் பைகள் மிகவும் உதவியாக இருக்கும்," என்று நம்பிக்கையுடன் கூறினார் திருவாட்டி மாணிக்கம் புஷ்பம்.
"உணவுப்பொருள்கள் அடங்கிய பைகள் வீட்டிற்கே விநியோகிக்கப்படுவதால் பைகளை வீட்டிற்குத் தூக்கிச் செல்லும் சிரமம்கூட இல்லை," என்றார் அவர்.
உணவுப்பொருள்களின் விலை உயர்வைச் சமாளிக்கவும் சத்து நிறைந்த உணவை வீட்டில் சமைத்துச் சாப்பிடவும் இந்தத் திட்டம் வழிவகுத்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பின்மையும் பற்றாக்குறையும் நம் சமூகத்தில் பிரச்சினையாகக் கருதப்படும் நிலையில் சிங்கப்பூரின் பண வீக்க விகிதம் ஐந்து விழுக்காடு உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டது 'டிலிவரு' நிறுவனம்.
கடைகளில் உணவு விலை 8.1 விழுக்காடு உயர்ந்துள்ளதையும் அது சுட்டியது. இதனால் குறைந்த வருமானக் குடும்பங்கள் பல பாதிப்படைகின்றன என்று நிறுவனம் கூறியது.
விலைவாசி ஏறிக்கொண்டே போகும் நிலையில், சிங்கப்பூரில் உள்ள குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், $130,000 நன்கொடை திரட்ட உறுதி பூண்டுள்ளது 'டிலிவரு'.
'ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்ஸ்' சமூக அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் $200,000க்கு மேற்பட்ட தொகை திரட்டப்பட்டுள்ளது.
உலகளவில் பசியால் வாடுவோருக்கு நான்கு மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்க 'டிலிவரு குளோபல் ஃபுல் லைப்' திட்டத்தின்கீழ் பத்து அற நிறுவனங்களுடன் கைகோத்துள்ளது.
'டிலிவரு' சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் செயலியின் மூலம் நன்கொடை வழங்கலாம். இத்தகைய சமூக உணவுத் திட்டங்கள் உணவு வழங்கி, அன்றாடச் செலவுகளை ஈடுகட்டவும் உதவும் என்று நம்புவதாக 'ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்' அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ராபின் லீ குறிப்பிட்டார்.
செய்தி:
ரச்சனா வேலாயுதம்

