கருணாநிதி துர்கா
எந்தக் குழந்தைக்கும் பிஞ்சு மனத்தில் பதியும் முதல் போற்றுதலுக்குரிய வீரர், சூரர் அதன் தந்தையே என்றால் அது மிகைஇல்லை.
பல்வேறு பொறுப்புகளுக்கு இடையிலும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் துணிச்சல், குடும்பத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய பண்புகளால் பிள்ளைகளின் இதயங்களில் அரியாசனம் இட்டு அமர்கிறார் அப்பா. அத்தகைய அப்பாக்களில் ஒருவர்தான் ஹாரிஸ் ஹருண்.
சிங்கப்பூரின் 'டேவிட் பெக்கம்' என்று புகழப்படுபவர் ஹாரிஸ்.
சிங்கப்பூர் தேசியக் காற்பந்து அணியின் தலைவர், மூன்று இளம் பிள்ளைகளின் தந்தை, ஒரு முழுநேர மாணவர் எனப் பல பொறுப்புகளை சிறப்பாகக் கையாள்கிறார் அவர்.
விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கான விடாமுயற்சியை ஒருபோதும் தளரவிடாமல் அதே நேரம் மூன்று பிள்ளைகளின் தந்தையாக குடும்பப் பொறுப்புகளையும் சிறப்பாகக் கையாண்டு வருகிறார்.
இவருக்கு இரண்டு வயதில் ஒரு மகனும் ஆறு வயதில் ஒரு மகளும் எட்டு வயதில் இன்னொரு மகனும் உள்ளனர்.
தந்தையர் தினத்தை முன்னிட்டு, ஒரு தந்தையாக தன் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், ஆற்றிய தியாகங்கள், அடைந்த வெற்றிகள் பற்றிப் பகிர்ந்துகொண்டார் ஹாரிஸ்.
ஆறு வயதிலிருந்து காற்பந்து விளையாடும் இவர் பதினாறு வயது முதல் தொழில்முறை ஆட்டக்காரராகப் பங்களித்து வருகிறார். இதற்கிடையே, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கல்வியைத் தொடர முடிவு செய்தார்.
'பிஎஸ்பி அகாடெமி' மூலம் காவெண்ட்ரி பல்கலைக்கழகத்தில் முழு நேர மாணவராக வணிகம், சந்தைப்படுத்துதல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஹாரிஸ், அடுத்த மாதம் பட்டம் பெறவிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கல்விப் பயணத்தைத் தொடர்வதற்கு இரண்டு காரணங்களைக் கூறினார் ஹாரிஸ்.
"முதலாவது, என் பிள்ளைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் நோக்கில்தான் பட்டப்படிப்பை மேற்கொள்ளத் தொடங்கினேன். நம் இலக்கை நோக்கி விரையும் பயணத்தில் படிப்பிலும் கவனம் செலுத்தவேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினேன்.
"இரண்டாவது,2020ல் காயம் அடைந்ததால் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல் எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தூண்டியது," என்றார் ஹாரிஸ்.
மூன்று விதமான பொறுப்புகளையும் சரிவரக் கையாளுதல் எளிதல்ல என்றபோதும் தன் மனைவியின் வலுவான ஆதரவும் சுயகட்டுப்பாடும் சரியான நேர ஒதுக்கீடும் தனக்குக் கைகொடுப்பதாக அவர் கூறினார். இத்தகைய பண்புகளைப் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வதை அவர் சுட்டினார்.

