கி. ஜனார்த்தனன்
மகனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது தன் மனைவி பிரிந்து சென்றதாகக் கூறிய திரு சசிகுமார், 49, இரு சிறு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை முழுமையாகச் சுமப்பதாகக் கூறினார்.
தாயாருடன் நல்லுறவு இல்லாத காரணத்தினால் அவரது குடும்பத்திலிருந்தும் ஆதரவு குறைவாக இருந்தது. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்த நேரத்தில் பிள்ளைகளைத் தனியே பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால் அவர் அதிகமாக விடுப்பு எடுக்க நேர்ந்தது. அதுகுறித்து வேலையிட மேற்பார்வையாளர் கடிந்துகொண்டார்.
ஆறு ஆண்டுகளாகத் திருமண உறவில் விரிசல்கள் இருந்தபோதும் திடீரென்று குடும்பம் உடைந்ததால் ஏற்பட்ட திகைப்பு, நட்டாற்றில் விடப்பட்டதாக உணர்ந்த தவிப்பு எனத் தான் எதிர்கொண்ட மன அழுத்தமான காலகட்டம் அது என்று கூறினார் சசிகுமார்.
இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் பாதுகாவல் அதிகாரியாகப் பணிபுரியும் சசிகுமார், பெற்றோர் இருவரின் அத்தனை பொறுப்புகளையும் தனியராக ஏற்க வேண்டி இருந்தது. வேலைக்குச் செல்கையில் சின்னப் பிள்ளைகள் வீட்டில் தனியாக இருக்கிறார்களே என்ற எண்ணம் அவரைத் துன்புறுத்தும்.
பாசத்தைப் பொழிந்து அவர்களுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறும் சசிகுமார், இளமைப் பருவத்திலேயே பொறுப்புணர்வை ஊட்டியதாகக் கூறினார்.
"உன் தங்கையைப் பார்த்துக்கொள் என்று என் மகனிடம் அடிக்கடி சொல்வேன். நான் இல்லாத நேரத்தில் என் மகன் நான் ஏற்கெனவே சமைத்த உணவைப் பரிமாறி என் மகளைக் கவனித்துக் கொள்வான். அவனது பொறுப்புணர்வு பல நேரங்களில் எனக்கு நிம்மதியைத் தந்துள்ளது," என்றார் அவர்.
ஈராண்டுகளுக்குமுன் திரு சசிகுமாருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அந்நேரத்தில் மகன் பிரவீன் தனக்குத் தூணாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
தந்தை குடும்பத்திற்காக அயராது உழைப்பது அவர் மீதான அன்பையும் மரியாதையையும் அதிகரிப்பதாக அவரது மகள் அஞ்சனா கூறினார்.
பிரவீனுக்கு இப்போது 15 வயது. அஞ்சனாவுக்கு 12 வயது. பிள்ளைகள் சற்று வளர்ந்துவிட்டதால் அவர்களுக்கு மூவறை வீடு வாங்க ஆசைப்படுவதாகக் கூறினார் சசிகுமார்.