சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் 100ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கடந்த திங்கட்கிழமை, மாறுபட்ட நட்புமுறை டி20 கிரிக்கெட் போட்டி ஒன்றுக்கு அவ்வமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தியாவின் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய கிரிக்கெட் அணியும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத் தலைவரது அழைப்பை ஏற்று வருகைதந்திருந்த 11 பேர் கொண்ட அணியும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை சிங்கப்பூர் இந்திய அமைப்பின் கிரிக்கெட் திடலில் மோதின.
மாற்றுத் திறனாளிக் குழுவைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் அனைவரும் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான அனைத்துலக மாடர்ன் மாண்டிசோரி அமைப்பின் தலைவர் முனைவர் டி.சந்துரு, இந்தியாவின் மாற்றுத் திறனாளி அணி சிறப்பாக விளையாடியதென்றும், தங்களது உடற்குறைகளையும் கடந்து அவர்கள் இவ்வாறு தங்கள் திறமையை வெளிக்கொணர்வது சிங்கப்பூர் இந்திய சமூகத்திற்கும் சிங்கப்பூரர்களுக்கும் முன்னுதாரணமாக அமைகிறதென்றும் கூறினார்.
இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு மணீஷ் திருப்பதி, இம்முயற்சியின்வழி சிங்கப்பூரிலுள்ள அனைத்து மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களையும் தொடர்ந்து தங்கள் விளையாட்டுகளை விளையாட ஊக்குவிக்க முனைந்ததாகத் தெரிவித்தார்.
ஒருமுறை டெல்லி சென்றிருந்தபோது இம்மாற்றுத் திறனாளி அணியைச் சந்தித்த அவர், அவர்கள் தங்களது திறமையை உலக மேடையில் வெளிக்கொணர வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்ததை உணர்ந்தார்.
அதனால், அவர்களை இவ்விளையாட்டுக்கு அழைத்ததன்வழி சிங்கப்பூரிலுள்ள மாற்றுத் திறனாளி விளையாட்டாளர்களுக்கு ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கும் நல்லதொரு மேடையை அமைத்துத்தர முடிந்ததை எண்ணி அவர் மகிழ்ச்சியடைந்தார்.
“சிறிய காயம் ஏற்பட்டாலே நாம் திடலிலிருந்து நொண்டியபடியே சென்றுவிடுவோம். ஆனால் இம்மாற்றுத் திறனாளிகள் தங்களது உடற்குறையைப் பொருட்படுத்தாமல் மூன்று மணி நேரத்திற்கும் மேல் துடிப்புடன் விளையாடியது மனத்தை நெகிழச் செய்தது,” என்றார் திரு மணீஷ்.
தொடர்புடைய செய்திகள்
இம்மாற்றுத் திறனாளிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம், சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவர் தமிழ் மாறன், இப்போட்டிக்காகச் சங்கத்தின் தலைசிறந்த ‘டிவிஷன் 1’ கிரிக்கெட் வீரர்களை அழைத்ததாக திரு மணீஷ் குறிப்பிட்டார்.
தனது 100ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு இத்தகைய ஆட்டத்தை ஏற்பாடு செய்ததில் பெருமைகொள்வதாகவும் தொடர்ந்து இத்தகைய விளையாட்டுகளை ஏற்பாடு செய்ய திட்டங்கள் இருப்பதாகவும் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தெரிவித்தது.