‘இசைத்தமிழ்க் கலைஞர்கள்: நோக்கீட்டு நூல்’ அறிமுக விழா

2 mins read
895dd60e-88f3-41ac-956a-770c7b62baef
‘இசைத்தமிழ்க் கலைஞர்கள்: நோக்கீட்டு நூல்’ அறிமுக விழாவில் நூலாசிரியர் முனைவர் மு. இளங்கோவன் (வலமிருந்து இரண்டாவது). - படம்: மு.இளங்கோவன்
multi-img1 of 5

உலகளவில் இசைத்துறையில் சாதித்த தமிழ்க் கலைஞர்களின் பட்டியலை நூலாக எழுதி அண்மையில் வெளியிட்டுள்ளார் புதுச்சேரியைச் சார்ந்த எழுத்தாளர் முனைவர் மு. இளங்கோவன். ‘இசைத்தமிழ்க் கலைஞர்கள்: நோக்கீட்டு நூல்’ எனும் அந்நூலின் அறிமுக விழா அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது. 

சங்ககாலம் முதல் தற்போது வரை பல்வேறு இசைத்துறைப் பிரிவுகளைச் சார்ந்த 5,764 கலைஞர்களின் பட்டியலை இந்நூல் கொண்டுள்ளது. 

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை, டென்மார்க், கனடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழும் நாடுகளின் கலைஞர்களை இந்நூல் ஆவணப்படுத்தியுள்ளது.

ஜூன் 18ஆம் தேதியன்று தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவை ‘தமிழ் இசைப் பரப்பு மன்றம் கலாமஞ்சரி’ எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன், “மு. இளங்கோவன் உலகம் முழுவதும் தொடர்புகொண்டு இசைத்தமிழ்க் கலைஞர்களை ஆவணப்படுத்தியுள்ள முயற்சி பாராட்டுதலுக்குரியது,” என்று புகழாரம் சூட்டினார். 

நூல் குறித்த செய்திகளை முனைவர் செல்லக்கிருஷ்ணன், முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், திரு கண்ணன் சேஷாத்ரி ஆகியோர் விரிவாக ஆராய்ந்து பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தனர். நூலாசிரியருடன் நடைபெற்ற கேள்வி-பதில் அங்கம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. 

புதுச்சேரி அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் இளங்கோவன், 55, “உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய தனித்துவமான தமிழர்களை வரலாற்றில் ஆவணப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உள்ளது. இந்நூல் இசைத்துறை ஆர்வலர்களுக்கும் இசைத்துறையில் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்,“ என்றார்.

இதுவரை 22 நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் ‘பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்’, ‘விபுலானந்த அடிகளார்‘ எனும் இரண்டு தமிழ் ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும், முனைவர் இளங்கோவன் இவ்வாண்டிற்கான ‘தமிழ் விக்கி - பெரியசாமித்தூரன் 2023’ விருதாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்புச் சொற்கள்