தாய்-மகள் பிணைப்புக்குத் தற்காப்புக் கலை

தாய்-மகள் பிணைப்புக்குத் தற்காப்புக் கலை

2 mins read
f4fea2fb-b110-457b-838d-1a5504fafa49
சிலம்பக்கம்புடன் மகள் இவாங்கா மாயா சந்திரக்குமார், தாயார் பிரியதர்ஷினி ராமநாதன். - படம்: பிரியதர்ஷினி ராமநாதன்
multi-img1 of 2

சிலம்பக்கலையில் ஆர்வம் கொண்டு, இரண்டரை ஆண்டுகளாக களரிப் பயிற்சிப்பள்ளியில் இந்திய தற்காப்புக் கலைகளைப் பயின்று வருகிறார் திருவாட்டி பிரியதர்ஷினி ராமநாதன். 

பயிற்றுவிப்பாளராகவும் களரிப் பயிற்சிப்பள்ளியில் ஒரு மாணவராகவும் திகழும் இவர் தம் மகள் இவாங்கா மாயா சந்திரக்குமாருடன் இணைந்து தற்காப்புக் கலைகளைப் பயின்று வருகிறார். 

களரிப் பயிற்சிப்பள்ளியில் களரிபயட், சிலம்பம், அடிமுறை ஆகிய மூன்று வகையான தற்காப்புக் கலை வடிவங்களை இவர்கள் கற்று வருகின்றனர். 

“எனக்குக் கிட்டத்தட்ட ஏழு வயதாக இருந்தபோது எனது தொடக்கப் பள்ளியில் தற்காப்புக் கலைகளைப் பற்றிய ஒரு பயிலரங்கு நடைபெற்றது. அவற்றுள் என் மனத்தில் பதிந்த ஒரு தற்காப்புக் கலைதான் சிலம்பக்கலை,” என்று திருவாட்டி பிரியதர்ஷினி நினைவுகூர்ந்தார். 

கொவிட்-19 நோய்ப் பரவல் காலகட்டத்தில் அதிகமாக வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத சூழ்நிலையில் தாயும் மகளும் சிலம்பக்கலை பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினர்.

“தொடக்கத்தில், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைப்பிடிப்பதற்காக களரிப் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்தேன். ஆனால், இப்பொழுது தமிழர் பண்பாட்டுடன் இணைந்திருக்கவும் இந்தத் தற்காப்புக் கலை வழிவகுக்கின்றது,” என்று திருவாட்டி பிரியதர்ஷினி குறிப்பிட்டார்.

கல்வித் துறையில் மூத்த பயிற்சி ஆலோசகர் பணி, குடும்பப் பொறுப்புகளுக்கிடையே பயிற்சிக்காக நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்குவது சற்றுக் கடினமாக இருந்தாலும் இந்தியத் தற்காப்புக் கலைகளின்மீது இருக்கும் ஆர்வம் இவரைத் தொடர்ந்து இக்கலையை கற்றுக்கொள்ள தூண்டுகிறது. 

“நான் இந்தப் புதிய திறனை என் அம்மாவுடன் சேர்ந்து கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கற்றல் பயணம், எங்களது பிணைப்பை வலுப்படுத்தியும் உள்ளது,” என்றார் மாயா. 

மாயாவும் தன் தாயைப்போல் இந்தியத் தற்காப்புக் கலைப் பயிற்றுவிப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். 

சிலம்பக் கலையை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லவேண்டும் என இலக்கு கொண்டுள்ளார் திருவாட்டி பிரியதர்ஷினி.

குறிப்புச் சொற்கள்