சிங்கப்பூர் ஆயுதப் படையில் 1,196 பேருக்குப் பதவி உயர்வு

சிங்கப்பூர் ஆயுதப் படையில் 1,196 பேருக்குப் பதவி உயர்வு

2 mins read
55774fc9-a287-4d95-aa38-82f1bf4f969e
கூட்டு உளவுத்துறை தளபத்தியத் தலைவர் நாராயணன் லெட்சுமணன், கர்னல் பதவியிலிருந்து பிரிகேடியர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார். - சிங்கப்பூர் ஆயுதப் படை

தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் இவ்வாண்டு சீருடைப் படையினர் 765 பேருக்கும் சீருடை அணியா ராணுவசார் பணியாளர்கள் 431 பேருக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளன.

தற்காப்புப் படைத் தலைவர் ஆரன் பெங், ரியர் அட்மிரல் பதவியிலிருந்து வைஸ் அட்மிரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மின்னிலக்க, உளவுத்துறைப் படையின் தலைவர் லீ யி-ஜின் பிரிகேடியர் ஜெனரல் பதவியிலிருந்து மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார்.

பதவி உயர்வு பெற்று உயர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்களுக்குத் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், ஜூன் 28ஆம் தேதி கொம்பாக் தளபத்தியத்தில் சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்வாண்டு பதவி உயர்வு பெற்றவர்களுள் கூட்டு உளவுத்துறை தளபத்தியத் தலைவர் நாராயணன் லெட்சுமணனும் ஒருவர்.

கர்னல் பதவியிலிருந்து பிரிகேடியர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ள இவர் 18 ஆண்டுகளாக நாட்டிற்குச் சேவையாற்றி வருகிறார். 

2001ஆம் ஆண்டு தேசிய சேவையின்போது ராணுவத்தைத் தமது வாழ்க்கைத்தொழிலாகத் தேர்ந்தெடுத்த இவர், நான்கு ஆண்டுகள் அமெரிக்காவில் மின்னியல், கணினிப் பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, 2005ஆம் ஆண்டு முழு நேரச் சேவையைத் தொடங்கினார்.

41 வயதாகும் இவர், சிறு வயதிலிருந்தே கணினி, மின்னிலக்கம் சார்ந்த துறையில் ஆர்வம் இருந்ததாலும் நாட்டிற்குச் சேவையாற்றும் வாய்ப்பை இப்பணி வழங்கியதாலும் இவ்வேலையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். இவர் வழிநடத்தும் கூட்டு உளவுத்துறை தளபத்தியம் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டதாகவும் இது பலருடைய உழைப்பின் பிரதிப்பலிப்பு என்றும் திரு லெட்சுமணன் குறிப்பிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தளபத்தியத்தை வழிநடத்துவதில் மிகுந்த பெருமை கொண்டாலும் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் கூடுதல் பொறுப்பை உணர்வதாக இவர் கூறினார்.

அதிவேகமாக மாறி வரும் மின்னிலக்க யுகத்தில், மின்னிலக்கத் தற்காப்பு மிகவும் முக்கியம் என்று கூறும் இவர், சிங்கப்பூரின் தற்காப்பிற்குப் பங்களிப்பது குறித்துப் பெருமிதம் அடைகிறார்.

“இப்பதவி உயர்வு எனது உழைப்பை மட்டுமின்றி என் குழுவின் உழைப்பையும் அங்கீகரிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. என்னைத் தொடர்ந்து ஆதரித்து, எனக்கு பக்கபலமாக இருக்கும் என் குடும்பத்தினருக்கும் என் குழுவினருக்கும் இவ்வங்கீகாரத்தைச் சமர்ப்பிப்பதோடு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று பிரிகேடியர் ஜெனரல் லெட்சுமணன் கூறினார்.

பதவி உயர்வு பெற்றவர்களுள் இன்னொருவர், முதலாம் வாரண்ட் ஆஃபீசர் பதவியிலிருந்து மாஸ்டர் வாரண்ட் ஆஃபீசராகப் பொறுப்பேற்றிருக்கும் போர்க்காலப் படைவீரர், சுரிந்திரநாத் காசிநாதன். 

தமது பயிற்சிக் காலம் முடிந்து 10 ஆண்டுகளுக்குமேல் ஆன பின்பும் நாட்டின் தற்காப்பில் தம் பங்கு இருக்க வேண்டுமென்று கருதும் இவர் தொடர்ந்து நாட்டிற்கு சேவை ஆற்றிவருகிறார்.

அக்காலத்தில் தேசிய சேவையாளர்கள் செய்த பல வேலைகளை இன்று மின்னிலக்கமுறையில் செய்ய இயலும். இருப்பினும், ஆயுதப்படை வீரர்கள் தொடர்ந்து உயர்தரப் பயிற்சி பெற்றுவருவது மகிழ்ச்சியளிப்பதாக 48 வயதாகும் திரு சுரிந்திரநாத் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தற்காப்புசிங்கப்பூர்