அவாண்ட் நாடகக் குழுவின் நடிப்புப் பயிலரங்கு

அவாண்ட் நாடகக் குழுவின் நடிப்புப் பயிலரங்கு

1 of 3
படம்: அவாண்ட் நாடகக் குழு
படம்: அவாண்ட் நாடகக் குழு
படம்: அவாண்ட் நாடகக் குழு

02 Jul 2023 - 5:30 am

2 mins read

நடிப்புத் துறையில் ஆர்வமுள்ள கலைஞர்களை வளர்க்கும் நோக்கில் அண்மையில் அவாண்ட் நாடகக் குழு நடிப்புப் பயிலரங்கு ஒன்றை நடத்தியது. மாணவர்கள், பெரியவர்கள் என இரு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் 13 வயது முதல் 60 வயது வரையிலான 35 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஜூன் மாதம் 15, 16 தேதிகளில் மாணவர்களுக்கும் 17, 18 தேதிகளில் பெரியவர்களுக்கும் இரண்டு நாள்கள் நடைபெற்ற இப்பயிலரங்கில் மேடை, தொலைக்காட்சி ஆகியவற்றில் நடிப்பதற்கான அடிப்படை நுட்பங்களும் நுணுக்கங்களும் கற்றுத்தரப்பட்டன.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்டாம்ஃபோர்ட் கலை நிலையத்தில் நடைபெற்ற இப்பயிலரங்கில் நடிகர்களுக்கான முகப் பயிற்சி, குரல் பயிற்சி, உணர்வுகளை வெளிப்படுத்தும் பாவங்கள் உள்ளிட்ட செயல்முறை விளக்கங்கள் எனப் பல சுவாரசிய அங்கங்கள் இடம்பெற்றன.

சிங்கப்பூர் நடிப்புத் துறையில் புகழ்பெற்ற நடிகர்களான கார்த்திக், புரவலன், சூரியவேலன், அலாவுதீன் அலி, காயத்ரி சேகரன், கிஷோர் குமரன் உள்ளிட்டோர் பங்குகொண்டு நடிப்புத் துறையில் தங்களுடைய பயணத்தைப் பற்றியும் சுவாரசியமான அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டனர்.

அவாண்ட் நாடகக் குழுவின் இயக்குநர் க.செல்வா கூறுகையில், “நடிப்பு மீது ஈடுபாடு கொண்டுள்ள பலரும் தக்க பயிற்சிகளுடன் தங்கள் திறமையை மேம்படுத்தும் நோக்கிலே தொடர்ந்து இது போன்ற முயற்சிகளை மேற்கொள்கிறோம். இவ்வாண்டு பங்கேற்பாளர்களிடமிருந்து கிடைத்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,“ என்று தெரிவித்தார்.

இப்பயிலரங்கில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பாளர் சம்பத்குமார் ஆனந்த், 56, “இப்பயிலரங்கில் மேடை நாடகப் நடிப்பு, தொலைக்காட்சி நாடக நடிப்பு பற்றிய நுணுக்கங்களை எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தனர். மேடை நாடகத்தின் பல படிவங்களை‌ எடுத்துக்கூறி அதன் முக்கியக் குணாதிசயத்தை நடித்தும் காண்பித்தது மிகவும் அருமையாக இருந்தது,“ என்று கூறினார்.

இதில் கலந்துகொண்ட ஆசிரியர் ரமேஷ் குணசேகரன், 38, “இந்தப் பயிலரங்கில் பங்குகொண்டதன் மூலம் தமிழ்மொழி மீதுள்ள ஆர்வம் கூடியுள்ளதோடு, நாடகக் கலையில் தொடர்ந்து அதிகளவு பங்களிக்க வேண்டும் என்ற உற்சாகம் என்னுள் அதிகரித்துள்ளது,“ என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்