எழுத்தாளர் அழகுநிலாவின் எழுத்துப் பயிலரங்கு

எழுத்தாளர் அழகுநிலாவின் எழுத்துப் பயிலரங்கு

1 of 2
படம்: மோனலிசா
படம்: மோனலிசா

03 Jul 2023 - 3:26 pm

2 mins read
எழுத்தாளர் அழகுநிலாவின் ‘உண்மையும் படைப்பும்’ எழுத்துப் பட்டறையில் பங்குகொண்டோர்.
எழுத்தாளர் அழகுநிலாவின் ‘உண்மையும் படைப்பும்’ எழுத்துப் பட்டறையில் பங்குகொண்டோர். - படம்: மோனலிசா
எழுத்தாளர் அழகுநிலாவின் ‘உண்மையும் படைப்பும்’ எழுத்துப் பட்டறையில் பங்குகொண்டோர்.
எழுத்தாளர் அழகுநிலாவின் ‘உண்மையும் படைப்பும்’ எழுத்துப் பட்டறையில் பங்குகொண்டோர். - படம்: மோனலிசா

சிங்கப்பூரில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் தேசிய வாசிப்பு இயக்கத்தின் கீழ் வாசிப்பு விழா கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் இம்மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவின் ஒரு நிகழ்ச்சியாக ‘உண்மையும் படைப்பும்’ என்ற கருப்பொருளையொட்டி சிங்கப்பூர் உள்ளூர் எழுத்தாளர் அழகுநிலாவின் எழுத்துப் பயிலரங்கு ஒன்று நடைபெற்றது.

புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்கும் உள்ள வேறுபாடுகளும் தனித்தன்மைகளும் இப்பயிலரங்கில் விளக்கப்பட்டன. உண்மைச் சம்பவங்களைப் படைப்புகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளும் உண்மைகளையும் கற்பனைகளையும் ஓர் எழுத்தாளர் கையாள வேண்டிய விதங்கள் பற்றியும் இப்பயிலரங்கில் கலந்துரையாடப்பட்டன.

ஜூலை 1ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏறத்தாழ 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இக்கால இளையர்கள் மத்தியில் குறைந்துள்ளதற்கான காரணங்களும் அவற்றைக் களைந்து இப்பழக்கத்தை மேம்படுத்தும் எளிய வழிமுறைகளும் இப்பயிலரங்கில் கலந்துரையாடப்பட்டன.

கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதவும் புத்தகங்களை சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் பதிப்பித்து வெளியிடுவது பற்றியும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தார் எழுத்தாளர் அழகுநிலா. எழுத்து உலகின் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்ந்த கேள்வி பதில் அங்கம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவி காதம்பரி மோகன்குமார், 14, “புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்குமான வித்தியாசத்தைக் கற்றுக்கொண்டேன். புத்தகங்கள் வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்தேன். தொடர்ந்து நூலகத்திலிருந்து புத்தகங்களை இரவல் பெற்று வாசிக்க திட்டமிட்டுள்ளேன்,” என்று கூறினார்.

கிண்டில் போன்ற இணைய[Ϟ]வெளியில் எளிமையான முறையில் புத்தகம் வெளியிடுவதற்கான வழிமுறைகளைக் கற்றுக்கொண்டேன்.

வருங்காலத்தில் தமிழாசிரியர் பணியை மேற்கொள்ளவிருக்கும் எனக்கு இந்தப் பயிலரங்கு மிகுந்த ஊக்கம் அளித்தது,” என்று கூறினார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி பவ்யா மணிமாறன், 19.

எழுத்தாளர் அழகுநிலா ‘ஆறஞ்சு’, ‘சிறுகாட்டுச் சுனை’ போன்ற புத்தகங்களும் ‘கொண்டாம்மா கெண்டாமா’, ‘மெலிஸாவும் மெர்லயனும்’, ‘பா அங் பாவ் - சிறுவர் பாடல்கள்’ போன்ற சிறுவர்களுக்கான புத்தகங்களும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இவர் சென்ற ஆண்டிற்கான சிங்கப்பூர் இலக்கிய பரிசினை தன்னுடைய ‘மொழிவழிக் கனவு’ புத்தகத்திற்காகப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்