சிறுநீரகப் புற்றுநோயும் இதய நோயும் வாட்டி வதைக்க, மரணப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் 77 வயது அப்துல் லத்தீஃபுக்கு உயிர் பிரிவதற்குமுன், இந்தியாவில் வசிக்கும் மனைவியை ஒரு முறையாவது கடைசியாகப் பார்த்து விட வேண்டும் என்பதே வாழ்வின் இறுதி ஆசை.
குடும்பத்தைப் பிரிந்து சிங்கப்பூரில் வாழும் இவர், மனைவியைக் கடைசியாகப் பார்த்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்.
பத்து ஆண்டுகளாக பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களால் அவதிப்படும் மனைவி நிஷாவை மூத்த மகள் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தாலும் மகளுக்கு கருப்பைப் புற்றுநோய் இருப்பது லத்தீஃப்பை மேலும் கலங்க வைக்கிறது.
மலேசியாவில் பிறந்து சிறுவயதிலேயே தந்தையுடன் இந்தியாவுக்குச் சென்ற திரு லத்தீஃப் ஆறு வயதில் சிங்கப்பூருக்கு வந்தார். தொடக்கத்தில் தந்தையின் உணவு வணிகத்தில் உதவிய திரு லத்தீஃப், பிறகு சுயமாகத் தொழில் செய்யத்தொடங்கினார். 19 வயதில் தமிழகம் சென்று மணம் முடித்த லத்தீஃப் மனைவியை அங்கேயே விட்டுவிட்டு சிங்கப்பூர் திரும்பினார்.
சிங்கப்பூரில் சில காலம் நிரந்தர பணி இல்லாமல் அல்லாடிய திரு லத்தீஃப் ஆறு மாதங்கள் சவூதி அரேபியா சென்று வேலை பார்த்தார். சவூதி அரேபியாவின் வெயிலைத் தாங்க முடியாமல் இவருக்கு மூல நோய் ஏற்பட்டது. தமிழகம் சென்று சிகிச்சை பெற்ற பின்னர் சிங்கப்பூர் திரும்பினார். நண்பரின் உணவுக் கடையில் சேர்ந்து உழைக்கத் தொடங்கியவர் 72 வயதில் ஓய்வு பெறும் வரை அக்கடையிலேயே பணிபுரிந்தார்.
ஒருநாள் நடந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் தனக்கு சிறுநீரகப் புற்றுநோயும் இதய பாதிப்பும் இருப்பது திரு லத்தீஃபுக்குத் தெரியவந்தது.
அடிக்கடி சிங்கப்பூர் வந்துபோய்கொண்டிருந்த மனைவி நிஷாவுக்கும் உடல்நிலை பாதிப்புகள் இருந்ததால் மருத்துவச் செலவை அவரால் சமாளிக்க முடியவில்லை. அதனால், மனைவியை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார். நோயால் பாதிக்கப்பட்ட லத்தீஃப்புக்கு பக்கபலமாக இருந்து ஆறுதல் கூற யாரும் பக்கத்தில் இல்லை.
மகள் இந்தியாவிலும் மூன்று மகன்களும் சவூதி அரேபியாவிலும் உள்ளனர். மகன்களின் உதவி இல்லாததால் நிதி நெருக்கடியால் அவதியுறுவதாகக் குறிப்பிட்டார் திரு லத்தீஃப். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் கீமோதெரபி சிகிச்சையும் ஓரளவு கைகொடுக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் அதன் மூலம் வரும் துன்பத்தைத் தாங்க லத்தீஃப்புக்கு மனவுறுதி இல்லை.
தொடர்புடைய செய்திகள்
சக்கர நாற்காலியின் உதவியோடுதான் அவரால் நடமாட முடிகிறது. சிங்கப்பூரில் இரு நண்பர்களோடு வாடகை வீட்டில் வசிக்கும் லத்தீஃபுக்கு அந்திமகால பராமரிப்புச் சங்கம் உதவுகிறது. மருத்துவச் செலவுகள் முதல் வீட்டு வாடகை வரை சங்கம் பொறுப்பேற்றுள்ளது.
உயிர் பிரியும்முன் கடைசியாக மனைவியை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற அவர் ஆசையையும் சங்கம் நிறைவேற்றியுள்ளது. தமிழகம் செல்ல பயணச்சீட்டும் மனைவிக்கு புடவையும் வாங்க சங்கம் உதவியது.
கடந்த வாரம் லிட்டில் இந்தியா சென்று மனைவிக்கு ஒரு புடவை வாங்கிய அவர், செவ்வாய்க்கிழமை ஜுலை நான்காம் தேதி ஊருக்குப் பயணம் மேற்கொண்டார்.
திரும்பிவந்ததும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மனைவியை ஒருமுறை பார்த்துவிட்டால்போதும் என்பதே திரு லத்தீஃப்பின் ஒரே விருப்பம்.