25 ஆண்டுகால தோசை வியாபாரத்திற்குப் பிரியாவிடை

ஜூலை இறுதியில் மூடவிருக்கும் தம் கடையில் திருமதி வசந்தி. படம்: பே.கார்த்திகேயன்

காமன்வெல்த் கிரசண்ட்  உணவங்காடி நிலையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சுடச் சுட இந்திய காலை உணவை விற்கும் ‘த பெஸ்ட் இந்தியன்’ கடை, இம்மாத இறுதியில் மூடப்படுகிறது.

கணவர் சுதர்ஷன், இரு மகள்கள் உதவியுடன் 61 வயது திருமதி வசந்தி கடையை நடத்தி வந்தார்.  

உடல்நலப் பிரச்சினைகள், குடும்பச் சூழ்நிலை போன்ற காரணங்களால் திருமதி வசந்தியால் தொடர்ந்து இக்கடையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 69 வயதான அவரின் கணவருக்கு சர்க்கரை நோயால் கால் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டதால் அவரை முழுநேரமாகப் பராமரிக்க கடையை விட திருமதி வசந்தி முடிவெடுத்தார்.

திருமதி வசந்திக்கு ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிறது. ஒருமுறை கடையில் மயங்கி விழ இருந்தார். தற்போது கணவரைப் பராமரிக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் ஏற்பட்டுள்ளதால், கடையை மூடுமாறு பிள்ளைகள் ஊக்குவித்தனர்.

“நானே சமைக்கக் கற்றுக்கொண்டு கடை நடத்தினேன். இதில் கிடைத்த வருமானத்தில்தான் என் குடும்பம் இதுநாள் வரை வாழ்ந்தது. பிள்ளைகள் படித்தார்கள். கடந்த 25 ஆண்டு காலமாகச் செய்து வந்த தொழிலை விட மனமில்லை. ஆனால், வேறுவழியில்லை,” என்று கண்ணீர் மல்கக் கூறினார் திருமதி வசந்தி. 

தமிழகம், திருவாரூரில் பிறந்த திருமதி வசந்தி, திரு சுதர்ஷனை 22 வயதில் மணமுடித்து சிங்கப்பூருக்கு வந்தார். கணவர் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். குடும்ப வருமானத்தை அதிகரிக்கத் தாமும் வேலைக்குச் செல்ல நினைத்தார் திருமதி வசந்தி. அதிகம் படிக்காததால், தொடக்கத்தில் உணவுக் கடைகளில் பாத்திரம் கழுவுவது, காய் வெட்டுவது போன்ற வேலைகளைச் செய்தார். உணவுத் தொழிலில் தம்மை முன்னேற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததால் அத்தொழில் குறித்த அறிவை வளர்த்துக்கொண்டார்.

சிறிது சிறிதாக சேமித்தார். சில ஆண்டுகள் கழித்து, 40 வயதில் ஸ்டெர்லிங் ரோட்டில் வாடகைக்குத் தம் முதல் கடையை எடுத்துச் சுயமாக நடத்தத் தொடங்கினார்.

முதலில் சாப்பாடும் தோசையும் விற்றார். ஊரில் இருந்து அம்மா உதவிக்கு வந்தார். கணவர், அம்மாவின் உதவியோடு கடையை முழுநேரமாக நடத்தினார். அவரது கைப்பக்குவம் மெல்ல மெல்ல அக்கம்பக்கத்தில் பிரபலமானது.

வீட்டுச் சாப்பாடுபோல புதிதாகவும் சுவையாகவும் குடும்பமாக உணவைச் சமைத்து வழங்கினர். இதனால் பல வட்டாரங்களிலிருந்தும் இவர் கடையைத் தேடிவரும் பல இன வாடிக்கையாளர்கள் இவரின் சமையலை ‘பெஸ்ட்’ இந்திய உணவு என்று குறிப்பிட்டதால், அதுவே அவரின் கடைப் பெயராகிவிட்டது.

சில ஆண்டுகளில் அங்கு செயல்பட்ட ‘த பெஸ்ட் இந்தியன்’ கடை ஹாலந்து குளோஸ் உணவு நிலையத்திற்கு மாறியது. வாடிக்கையாளர் வட்டம் பெருகியது.

எவ்வளவு சோர்வும் பிரச்சினைகளும் இருந்தாலும் ஒவ்வொருநாளும் அன்போடு சமைத்து உணவு வழங்கும் இவரது கையால் அன்றாடம் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் பலர்.

பராமரிப்புப் பணிகளுக்காக சந்தை மூடப்படும் நாள்கள் மற்றும் தீபாவளியைத் தவிர மற்ற எல்லா நாள்களிலும் கடை திறந்திருக்கும்.

அன்றாடம் காலை ஏழு மணியிலிருந்து மாலை மூன்று மணிவரை கடை திறந்திருக்கும். அதன் பிறகு வீட்டுக்குச் சென்று மறுநாள் சமையலுக்குத் தேவையான வேலைகளைச் செய்வார். தோசைக்கு மாவு அரைப்பது, தேக்காவுக்குச் சென்று தேவையான சமையல் பொருள்கள், காய்கறிகளை வாங்கிவருவது என்று வேலைகள் இருக்கும்.

எத்தனை மணிக்குப் படுத்தாலும் விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்துவிடுவார். குளித்து, காப்பி குடித்துவிட்டு வீட்டிலேயே சட்னி செய்வார். பிறகு மாவையும் சட்னியையும் எடுத்துக்கொண்டு ஐந்து மணிக்குக் கடைக்கு நடந்து செல்வார். காமன்வெல்த் வட்டாரத்தில் அவர் வசிக்கும் வீட்டுக்கு எதிரில்தான் அவரது கடையைக் கொண்ட உணவங்காடி உள்ளது. அதனால் பொருள்களைத் தூக்கிக்கொண்டு எப்போதும் கடைக்கு நடந்தே செல்வார்.

சாம்பார், கறிகள் போன்றவற்றைக் கடையில் சமைப்பார். ஏழு மணிக்கு கடையைத் திறந்துவிடுவார்.

கடையின் பொறுப்புகளால் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்ல முடிவதில்லை. நல்லது, கெட்டது, விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்க முடிவதில்லை என்ற வருத்தம் இவருக்கு உள்ளது.

“ஒருநாள் கடையைத் திறக்காவிட்டாலும் வாடிக்கையாளர்களும் பக்கத்துக் கடைக்காரர்களும் தொடர்புகொண்டு என்ன, ஏது என்று பதறிவிடுவார்கள்,” என்று சொல்லிச் சிரித்தார்.

முன்பெல்லாம் கணவர் திரு சுதர்ஷன் காய்கறி வெட்டுவது, பாத்திரம் கழுவுவது, வாடிக்கையாளரைக் கவனிப்பது போன்ற பணிகளில் உதவுவார். அவருக்கு உடல்நிலை மோசமான பின்னர் அவரால் உதவ முடியவில்லை.  

படிக்கும் காலத்தில் இரு மகள்களும் வகுப்பு முடிந்து கடையில் உதவுவார்கள்.

26 வயது மூத்த மகள் குமாரி சந்திரலேகாவுக்கு ரொட்டி பரோட்டா செய்யத் தெரியும். அவர் மாவை இழுத்து, விரித்து கடையில் பரோட்டா செய்யவதை பலரும் பார்த்து வியந்த தருணங்களை நினைவுகூர்ந்தார். 

“சின்ன வயதிலேயே பழகியதால் கொஞ்ச நேரத்தில் நிறைய ரொட்டி போட்டுவிடுவேன்,” என்ற குமாரி சந்திரலேகா “கடையில் கூட்டம் அதிகரிக்கும்போது ஏற்படும் மன உளைச்சலைப் போக்க நானும் அம்மாவும் பாடல்களை கேட்டு ஆடி கொண்டு வடை சுடுவோம்,” என்று சிரித்தார்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் தாதியாராக பணிபுரியும் அவர், “இதுவரை கண்ணும் கருத்துமாய் எங்களைப் பார்த்துக்கொண்ட அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இனிமேல் நாங்கள் ஆர்வத்துடன் வரவேற்கிறோம். அதனால் கடையை மூடும் கடினமான முடிவை எடுத்தோம்,” என்று கூறினார்.

பக்கத்திலிருக்கும் ஜோகூருக்குக்கூட சென்றிராத அம்மா, தமக்குப் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட இந்த ஓய்வு கைகொடுக்கும் என்று நம்புகிறார் இளைய மகள் குமாரி துர்காதேவி.  

“கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் குடும்பத்தில் ஒருவராக கருதுவோம். எங்கு சென்றாலும் எங்களைத் தோசை கடை ‘ஆண்டியின்’ பிள்ளைகள் என்று அடையாளம் காட்டுவார்கள். அன்பான வாடிக்கையாளர்களைப் பிரிவது சோகமாக இருந்தாலும் என் பெற்றோருக்கு ஓய்வு தேவை,” என்றார் பாதுகாவல் துறையில் பணிபுரியும் 25 வயது துர்காதேவி. 

தொழிலைப் பெரிய அளவில் விரிவுபடுத்த முடியவில்லை என்ற ஒரே கவலைதான் திருமதி வசந்திக்கு.

“நானே முதலாளி, நானே தொழிலாளி என்ற எண்ணத்துடன் இவ்வளவு ஆண்டுகளாக இருந்தேன். பிள்ளைகளுக்குச் சுமையாக இருப்பதில் சிறு தயக்கம். சிறிது காலத்துக்குப் பிறகு பெரிய கடை ஒன்றைத் திறக்கலாம் என்ற ஆசை உள்ளது,” என்றார் திருமதி வசந்தி.

திருமதி வசந்தியின் வாடிக்கையாளர்களுள் ஒருவரான 58 வயது திருவாட்டி மெடலின், கடையில் விற்கப்படும் உணவுவகைகளை விரும்பிச் சாப்பிடுவதாகவும் அடிக்கடி தம் பிள்ளைகளுக்காக வீட்டுக்கு வாங்கிச் செல்வதாகவும் குறிப்பிட்டார். வட்டாரத்தில் இதுபோன்ற சுவையான இந்திய உணவுவகைகளை விற்கும் கடை இல்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

திருமதி வசந்தியின் கைப்பக்குவத்தை விரும்புவர்கள், இம்மாதம் 30ஆம் தேதி வரை இயங்கும் இவர் கடைக்குச் சென்று உணவை உண்டு மகிழலாம். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!