லாயத்திலிருந்து தப்பி ஓடிய குதிரையைத் தடுத்து நிறுத்திய அதிகாரி

விரைவுச்சாலையில் குதிரை ஒன்று ஓடிக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டபோது மற்ற அதிகாரிகள் நகைச்சுவைக்காக அவ்வாறு கூறுகிறார்கள் என்று நினைத்துவிட்டார் துணைக் காவல் துறை சார்ஜன்ட் யுவராஜா கிருஷ்ணசாமி, 39.

சாலைமீது குதிரையா? என்று தம்முடன் வேலைபார்க்கும் நண்பர்களிடம் திரும்ப திரும்பக் கேட்டார். ஜூலை 8ஆம் தேதி புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பழுப்புநிறக் குதிரை ஒன்று போக்குவரத்துக்கு இடையே சென்றுகொண்டிருந்த காணொளிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன.

விரைவுச்சாலையில் ஒரு குதிரை செல்வதாகக் கிடைத்த தகவல் உண்மைதான் என்று அறிந்த திரு யுவராஜா திடுக்கிட்டார். 16 ஆண்டுகளாக துணைக் காவல் துறையில் பணியாற்றும் யுவராஜா இதற்கு முன்னர் சிறைக் கைதிகளுக்கு வழிகாப்பாளராக பணிபுரிந்தவர்.

துணைக் காவல்துறை அதிகாரியாக, விரைவுச்சாலைகளில் ஏற்படும் எவ்வித சம்பவமாக இருந்தாலும் திரு யுவராஜா போன்ற அதிகாரிகள் உடனே விரைந்து செயல்பட வேண்டும்.

புக்கிட் தீமா குதிரையேற்றப் பயிற்சிக் கழகத்திலிருந்து தப்பி ஓடிய குதிரையைப் பாதுகாப்புடன் கையாள திரு யுவராஜா சம்பவ இடத்திற்கு விரைந்தார். குதிரை சாலையில் ஓடும் சம்பவம் சிங்கப்பூரில் முன்னர் நடந்திருந்தாலும் யுவராஜாவுக்குக் குதிரையைக் கையாள்வது இதுவே முதல் முறை.

காப்பாற்றிய குதிரையுடன் யுவராஜா. படம்: செர்டிஸ்

மலேசியரான திரு யுவராஜா அவரது வீட்டில் நான்கு நாய்களை வளர்க்கிறார். இருந்தாலும், அவர் குதிரையைப் போன்ற ஒரு கம்பீரமான விலங்கைப் பார்த்தவுடன் சற்று தடுமாறினார். இந்தியாவுக்குச் சுற்றுலா சென்றபோது அங்கு செய்த குதிரை சவாரியே திரு யுவராஜா இதற்கு முன்னர் குதிரை அருகில் சென்ற தருணம்.

குதிரை தொடர்ந்து ஓடாமல் அதைத் தடுத்துவைக்க அவர் முதலில் பின்னால் வந்துகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தினார். குதிரைக்குப் பீதி ஏற்படாமல் இருக்க அவர் அதை நெருங்குவதற்கு முன்னர் தமது மோட்டார் சைக்கிளின் ஒலியை முடக்கினார்.

குதிரையைக் கையாள்வது இவருக்குப் போராட்டமாக இருந்தது. பெரிய உருவம் கொண்ட குதிரையைத் தமது கையால் தடுக்க முயன்றும் இவரால் முடியவில்லை. அதனால் குதிரையை முந்திக்கொண்டு அதன் எதிரே நின்று குதிரை ஓடாமல் தடுத்தார். இதனால் குதிரை சினம் கொண்டு இவரை நோக்கி மூர்க்கமாக உறுமியது.

அதைச் சமாதானப்படுத்த திரு யுவராஜ் குதிரையின் முகத்தை வருடியதை நினைவுகூர்ந்தார். குதிரையைப் பார்த்துப் பயந்தாலும் இவர் அதை வெளிப்படுத்தாமல் முடிந்தளவு நிதானமாக இருந்து அதைத் தனியாக யாருடைய உதவியையும் நாடாமல் கையாள முயன்றார்.

“ஒரு வேளை எனது சீருடை பார்ப்பதற்குக் குதிரைப் பந்தய வீரர் போல இருந்ததால் அந்தக் குதிரை நான் எதிர்பார்த்த அளவுக்கு நடந்துகொள்ளாமல் எனக்கு ஒத்துழைப்பு தந்ததாக நினைக்கிறேன்,” என்றார் திரு யுவராஜா.

குதிரையின் கடிவாளப் பட்டையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அதனைத் தன் பிடியிலிருந்து விடாமல் சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றத்திடம் ஒப்படைக்க 20 நிமிடம் அதனுடன் நடந்து சென்றார்.

அப்போது வாகன ஓட்டுநர்கள் பலர் தம்மையும் குதிரையையும் படம் பிடித்ததோடு அவர்கள் தொந்தரவு அளிக்கும் விதமாக வாகனங்களிலிருந்து எந்த ஒலியும் எழுப்பாமல் இருந்தனர்.

வேலை தேடி சிங்கப்பூருக்கு 2007ல் வந்த திரு யுவராஜா, தாம் ஒரு சீருடைப் பணியாளராக வேண்டுமென்ற இலக்கை வைத்துக்கொண்டார். எதிர்பாரா விதமாக குதிரை உதைத்திருந்தால் அது இவரின் உயிருக்கே ஆபத்தை விளைவித்திருக்கும்.

திருமணமாகிவிட்ட திரு யுவராஜாவுக்கு 4, 8 வயதுகளில் இரு மகன்கள் இருக்கிறார்கள். குடும்பத்தைப் பிரிந்து சிங்கப்பூரில் தனியாக இருக்கும் இவர், இந்தச் சம்பவத்தைக் குடும்பத்தினரிடம் பகிர்ந்த போது அவரின் மனைவி மலைத்துப்போனதாகக் கூறினார். மகன்கள் இருவருக்கும் விலங்குகள்மீது அதிக ஆர்வம் இருப்பதால் தங்கள் தந்தை ஒரு குதிரையைக் கையாண்ட சம்பவம் அவர்களைப் பெரிதும் அதிசயிக்க வைத்தது.

ஏற்கெனவே ஒருமுறை தமக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றையும் திரு யுவராஜா பகிர்ந்துகொண்டார். விரைவுச்சாலையின் மூன்றாவது தடத்தில் தமது மோட்டார் சைக்கிளுடன் நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது தொலைவிலிருந்து வேகமாக வந்த சரக்கு வண்டி ஒன்று, திரு யுவராஜின் மோட்டார் சைக்கிளை மோதி இவரது உடைமைகள் முதல் தடத்துக்குப் பறந்தன.

இவருக்குக் காயம் எதுவும் அப்போது ஏற்படவில்லை. தமது பணியில் இது வழக்கமாக நடக்கக்கூடியது என்பதை இவர் உணர்ந்தார். தினமும் 12 மணி நேரம் வேலை பார்க்கும் இவர் சிங்கப்பூர் வந்ததிலிருந்து இதே வேலையில்தான் உள்ளார்.

திரு யுவராஜாவின் செயலைப் பாராட்டும் விதமாக சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் இவரது குடும்பத்தினருக்கு மன்றத்தைச் சுற்றிப்பார்க்க இலவச அனுமதி வழங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!