‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் பெண்கள் பிரிவு தொழில்துறையில் சிறந்து விளங்கும் பெண்களைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் பெண்கள் தொழில் திறன் விருதுகளை வழங்கியது.
“விருது பெரும் வெற்றியாளர்களை வாழ்த்துகிறேன். இவர்கள் மென்மேலும் வளர்ந்து அனைத்துலக அளவிலும் வெற்றிகள் பெற ஆசைப்படுகிறேன்,” என்று வாழ்த்தினர் ‘லிஷா’வின் இரண்டாம் துணைத் தலைவரும் பெண்கள் பிரிவின் தலைவருமான ராஜலக்ஷ்மி கண்ணப்பன்.
ஜூலை 23ஆம் தேதி இடம்பெற்ற விருது நிகழ்வுக்கு பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராக வருகை அளித்திருந்தார்.
நிகழ்ச்சியில் ஓர் அங்கமான கலந்துரையாடல் அங்கத்தில் கலந்துகொண்டு பேசினார் அமைச்சர் இந்திராணி. “இளம் இந்தியப் பெண்கள் தொடர்ந்து தொழிலதிபர்களாக வளர்ந்து வருகின்றனர். தொழில் ஒன்றை தொடங்குவது எளிது எனலாம். ஆனால் தொடங்கும் தொழில் நீடித்து நிலைத்திருப்பதில் இவர்கள் முக்கிய கவனம் செலுத்துவது முக்கியம்,” என்று அறிவுறுத்தினார் அமைச்சர்.
ஒன் ஃபேரர் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் ஐந்து திறன்மிக்க பெண்கள் தொழில்துறை மேன்மை விருதுகளைப் பெற்றனர்.
‘நிஸ்ஸி ஃபேஷன்’ எனும் ஆடை அலங்கார இணையக் கடையைத் தொடங்கினார் ஆடை வடிவமைப்பாளர் நர்கிஸ் பானு. “இந்த விருது பெற்றதில் மிக்க பெருமையாக உள்ளது. பிறரை மகிழ்விக்கும் இலக்கை முதன்மையாகக் கொண்டுள்ள எனக்கு தொடர்ந்து உழைப்பதற்குக் கிடைத்த உந்துதலும் அங்கீகாரமும் இது,” என தெரிவித்தார் நர்கிஸ், 62.
“எதிர்பாராத வெற்றி இந்த விருது. லிஷாவுக்கு நிச்சயம் நன்றி கூறவேண்டும். கொவிட்-19 கிருமித் தொற்று காலத்தில் சற்று பாதிப்படைந்த எங்கள் நிறுவனம் மீண்டும் தலைதூக்க கடுமையாக உழைத்தோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த விருது இது,” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ‘இன்டெல்லி சொஃப்ட்வேர்ஸ்’ துணை நிறுவனர் ஜோசஃபீன் லோரா, 51.
தலைமைத்துவ பதவிகளில் இருப்போருக்கு முழு நலனில் செலுத்தும் கவனம் வேலையிடத்தில் பயன் அளிக்கும் என்பதை வலியுறுத்துகிறது ‘எக்ஸ்ஃபினிட்டிஎஸ்ஜி’ நிறுவனம். அதன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரூபிணி கருண், 40, குறுகிய காலத்தில் வந்த வளர்ச்சி இந்த விருது பெற முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என பகிர்ந்துகொண்டார். “வாழ்வில் நமக்கு ஏற்ற வேகத்தில் வாழத் தயங்கக் கூடாது என்பதை உணர்ந்தேன்,” என்று கூறினார் ரூபிணி.
தொடர்புடைய செய்திகள்
“நல்ல முன்மாதிரியாக நான் கருதும் அமைச்சர் இந்திராணியிடமிருந்து இந்த விருதை பெறுவது கூடுதல் பெருமை. இதுபோன்ற அங்கீகாரம் என்னைப் போன்ற பெண்கள் தொடர்ந்து புத்தாக்கத்தில் ஈடுபட்டு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த ஊக்கம் அளிக்கிறது,” என்று பகிர்ந்துகொண்டார் ‘ஸ்ட்ரைவ் ஹை’ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ப்ரீத்தி டுபேய்.
‘ஜேவிகேஎம்’ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் விஜி ஜெகதீஸ், 57, “எந்தத் தடை பாதையில் குறுக்கிட்டாலும் அவை அனைத்தையும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு கடந்து வந்ததற்கான பலனாக இந்த விருது கிடைத்துள்ளது. தொழில் துறையில் இருக்கும் பெண்கள் தாக்குப் பிடிக்கும் தன்மையுடன் இருந்தால்தான் நீடித்திருக்க முடியும்,” என்று குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்தின் முன்மாதிரி பெண் தொழிலதிபர் எனும் சிறப்பு விருதைப் பெற்றுக்கொண்டார் லிஷா பெண்கள் பிரிவை நிறுவிய ஜாய்ஸ் கிங்ஸ்லி.
“எதிர்பாராத விதமாக இந்த சிறப்பு விருது கிடைத்துள்ளது. ஒரே சமயத்தில் மூன்று நிறுவனங்களை சமாளித்து வருவது கடினமாக இருந்தது. எப்போதும் என் முயற்சிகளை கைவிட்டு விடக்கூடாது என்ற விடாமுயற்சி இந்த அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது,” என கண்களில் நீர் மல்க கூறினார் ஜாய்ஸ், 49.
தற்போது லிஷா பெண்கள் பிரிவின் ஆலோசகராகப் பங்காற்றி வருகிறார் ஜாய்ஸ்.

