சிண்டாவின் ‘டேக்கிங் ஃபிளைட்’ திட்டம்

2 mins read
f1876535-4c67-4032-a4a7-9a37b7460496
சிண்டாவின் டேக்கிங் ஃபிளைட் திட்ட நிகழ்வில் இளையர்கள் பங்கேற்றுப் பலனடைந்தனர்.  - படம்: சிண்டா
multi-img1 of 3

சிங்கப்பூர் இளையர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள வேலைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கியது அண்மையில் நடைபெற்ற சிண்டா இளையர் மன்றத்தின் ‘டேக்கிங் ஃபிளைட்’ திட்டம். இளையர்கள் மத்தியில் உலகளவில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த புரிதலையும் விழிப்புணர்வையும் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியது.

நிதித்துறை, கல்வித்துறை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் எனப்படும் ‘ஸ்டெம்’ துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 10 வல்லுநர்கள் வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் அதற்கான தகுதி தரநிலைகள் குறித்தும் விரிவாக விளக்கினர். மேலும் வெளிநாட்டில் பணிபுரிவதன் சவால்கள், தொழில்முறை வளர்ச்சி, தனிப்பட்ட வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களும் கலந்துரையாடப்பட்டன.

இளையர்கள் பங்குகொள்ள, ‘வோர்ல்டு-கஃபே’ பாணியில் வட்ட வடிவிலான மேசைகள் கொண்டு ஒவ்வொரு மேசையும் ஒவ்வொரு நாட்டைக் குறிக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிற மேசைகளில் உள்ள சகாக்களுடனும் கலந்துகொள்ளவும் தொழில்சார் நிபுணர்களுடன் கலந்துரையாடவும் பங்குகொண்ட இளையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

‘எஸ்ஜி தலைவர்கள் கட்டமைப்புடன்’ இணைந்து சிண்டா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி ஜூலை 13ஆம் தேதி மாலை 6 மணி முதல் ரொசெஸ்டர் பார்க் பகுதியில் உள்ள கேட்டபல்ட் உள்ளரங்கில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட இளையர்கள் பங்குகொண்டனர்.

“வெளிநாட்டில் வேலை செய்வது பணி மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய அனுபவமாக அமையும். இது குறித்த புரிதலையும் தகவல்களையும் அறிந்துகொண்டது பயனளித்தது,” என்று கூறினார் சிண்டா இளையர் மன்றத்தின் தலைவர் யுவன் மோகன், 35.

“ஒருங்கிணைப்பாளர்கள் இளையர்களின் தேவைகளையும் முன்னுரிமைகளையும் புரிந்துகொண்டு நிகழ்ச்சியைத் திட்டமிட்டிருந்தனர்,” என்று கூறினார் சிண்டா இளையர் மன்றத்தின் ‘யங் அடல்ட்ஸ்’ சமூகத்தின் தலைவர் ஷர்மிஷ்தா சிவராமகிருஷ்ணன், 29.

“வெளிநாட்டு வேலைகளுக்கான சம்பளம், தொழில் முன்னேற்றம், தங்குமிடம் உள்ளிட்ட இதர வசதிகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொண்டேன்,” என்று கூறினார் பங்கேற்பாளரான ரஸ்வீன் கவுர், 27.

குறிப்புச் சொற்கள்