கலைமூலம் கண்டறியப்படும் ஒருவரின் அடையாளம்

கலைமூலம் தங்களின் அடையாளத்தை அறிந்துகொண்ட ஐந்து கலைஞர்களின் வாழ்க்கைக் கதைகளை நடனம், இசை மூலம் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்க்க முற்பட்டது, அண்மையில் அரங்கேறிய ‘என் அடையாளம்’ எனும் ஒரு படைப்பு.

அஸ்வனி அஸ்வத், கிரேஸ் கலைச்செல்வி, கவிதா கிருஷ்ணன், ராஜகோபால், அகிலேஷ்வர் வி. எம். ஆகியோர் கலைத்துறையில் பயணம் செய்வது மட்டுமன்றி, அதன்மூலம் சமூகத்தைச் சென்றடையும் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

நாடகப் படைப்புகளுக்கு எழுத்தாளராக இருக்கும் அஸ்வனி பள்ளிகளிலும் சமூகத் திட்டங்களிலும் எழுத்தாளராக இருந்துள்ளார். இளையர்களுக்கு நாடகம் எழுதுவதற்கான பயிலரங்குகளையும் வழிநடத்தியுள்ளார். நாடகப் பயிற்சியாளரான கிரேஸ் கலைச்செல்வி சிறுபான்மையினரையும் ஒதுக்கப்பட்டவர்களையும் பிரதிநிதிக்கும் ‘பிரவுன் வாய்சஸ்’ எனும் கூட்டு இயக்கத்தை நிறுவியுள்ளார்.

சமகால நடன மணியான கவிதா கிருஷ்ணன், ‘மாயா டான்ஸ் தியேட்டர்’ எனும் நிறுவனத்தின் கலை இயக்குநர். உள்ளூரிலும் அனைத்துலக அளவிலும் பல நடன நிகழ்வுகளில் அவர் மேடை ஏறியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேலாக மேடைப் படைப்புகளிலும் படங்களிலும் பணியாற்றிய ராஜகோபால், பல குறிப்பிடத்தக்க இயக்குநர்களுடன் கைகோத்துள்ளார். எஸ்பிளனேட் அரங்கில் நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடுபவராக இருக்கிறார் அகிலேஷ்வர் வி. எம்.

தாள வாத்தியக் கலைஞராக இருக்கும் அவர் சிங்கப்பூரை பிரதிநிதித்து மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர்கள் ஐவரின் கதைகளையும் உள்ளடக்கிய இப்படைப்பு பார்வையாளர்களுக்கு, குறிப்பாக இளையர்களின் புரிதலுக்கு ஏற்ப உயிரோட்டத்துடன் இடம்பெற்றது.

தேசியக் கலைகள் மன்றம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் சென்ற சனிக்கிழமை அலிவால் கலை நிலையத்தில் இடம்பெற்ற இப்படைப்பானது கிட்டத்தட்ட 100 பார்வையாளர்களை வரவேற்றது.

இரண்டாவது பதிப்பாக நடைபெற்ற இந்தப் படைப்பின் முதல் பதிப்பு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்தது. அதில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை ஏற்ற அனைவரும் இளையர்களாக இருக்கவே, இம்முறை சற்று மாறுபட்ட விதமாக தலைமுறைகளுக்கு இடையிலான வயதுகளில் இருக்கும் கலைஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இசைக்கலைஞர்களும் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி நடனக் கலைஞர்களும் பார்வையாளர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமையும் வகையில் ஒத்திசைப்படைப்பொன்றைக் கொண்டுசேர்த்தனர். படைப்பின் தயாரிப்பாளரான நிரஞ்சன் பாண்டியன் ஒரு புல்லாங்குழல் கலைஞர். பல்துறைக் கலைஞரான அவர் ஆசியாவில் பல இசை நிகழ்ச்சிகளில் மேடையேறியுள்ளார்.

பிரம்மாஸ்திரா இசைக்குழுவை தொடங்கிய நிரஞ்சன், அனைத்துலக அளவில் படைத்த இசை நிகழ்வுகளுக்காகப் பாராட்டு பெற்றுள்ளார். உள்ளூர்ப் பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என்று மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலிருக்கும் கலைஞர்களோடும் கைகோத்துப் பணியாற்றியுள்ளார்.

“இசை வழியாகவும் கலை மூலமாகவும் இளையர்கள் தங்களை வெளிப்படுத்த முடியும் என்பதை உணர வைப்பதே இந்தப் படைப்பின் கரு. முதல் பதிப்பு முடிந்த கையோடு இந்தப் படைப்புக்கு நாங்கள் தயாராகத் தொடங்கி விட்டோம். ஒவ்வோர் இளையராலும் சுதந்திரத்தோடு தங்களின் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியும்.” என்று நிரஞ்சன் பகிர்ந்துகொண்டார்.

ஆறு வயதிலேயே தபலா வாசிக்கக் கற்றுக்கொண்ட 21 வயது என்.ஜே.பிரவின் இசை மூலம் சுவாரசியம் காண்கிறார். படைப்பின் இசைக்கலைஞர்களில் ஒருவரான அவர், “இசை எனக்கு கட்டொழுங்கைக் கற்றுத் தந்துள்ளது. சிறு வயதிலிருந்தே நான் இசையோடு பயணம் செய்கிறேன். படைப்பில் பங்காற்ற கிடைத்த இந்த வாய்ப்பை மறக்க மாட்டேன்,” என்று கூறினார்.

மருத்துவ ஆய்வு அதிகாரியாகப் பணிபுரியும் பாலசரவணன் லோகநாதன், 17 ஆண்டுகளாக பரதநாட்டியம் கற்று வருகிறார்.

இந்த தனித்துவம் வாய்ந்த படைப்பில் நடனமாடிய பாலா, “இதன்மூலம் கலைஞர்கள் அவர்களின் துறையில் எவ்வித சவால்களை எதிர்நோக்குகின்றனர் என்பதைப் பார்வையாளர்கள் உணர்ந்திருப்பார்கள். பொதுவாக நடனத்தில் புராணம் அல்லது முற்காலத்து மக்களின் குணாதிசயத்தை மையப்படுத்தித்தான் அசைவுகள் அமைக்கப்படும். ஆனால், மனிதர்களைப் புரிந்துகொண்டு அவர்களை மையப்படுத்தி நான் ஆடுவது மிக அரிது. இந்தப் படைப்பில் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது,” என்றார்.

பார்வையாளர்களில் ஒருவரான எழுத்தாளர் சிவானந்தம், “இந்தப் படைப்பில் இடம்பெற்ற இசை மழையில் நான் நனைந்துவிட்டேன். இந்த ஒன்றரை மணி நேர நிகழ்வில் முழுதாக மூழ்கி விட்டேன் என்றுகூட சொல்லலாம். கலைஞர்கள் தங்களை வெளிப்படுத்தியவிதம் பாராட்டத்தக்க முயற்சியாக இருந்தது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!