தாய்மையுள்ளம் கொண்ட தாதியர்

பிற பணிகளில் இல்லாத பல வாழ்வியல் அனுபவங்களை ஒரு தாதியாகத் தாம் பெற்றுள்ளதாக சிலாகிக்கிறார் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தாதியாக பணிபுரியும் திருவாட்டி ஓமதேவி தருமன், 59.

1994ஆம் ஆண்டு ‘டச்’ இல்லப் பராமரிப்பு நிலையத்தில் சமூகத் தாதியாகப் பணியினைத் தொடங்கினார் ஓமதேவி. நோயாளிகளின் தேவைகளை அறிந்து பராமரிப்பது, அவர்களுடன் நட்புகொண்டு உடல்நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்துவது எனத் தன் பணியை நேசிக்கத் தொடங்கியதாக நினைவுகூர்ந்தார் இவர். 

ஓய்வில்லாமல் உழன்றுகொண்டிருந்த ஓமதேவி, தன் காதல் கணவரையும் மாமியாரையும் கண்டதும் இந்த நிலையத்திலேதான். “அவர்கள் இருவரும் அப்போது இல்லப் பராமரிப்பு ஊழியர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்தனர். மனம் ஒத்த நாங்கள் திருமண உறவில் இணைந்தோம். குடும்பம், பணி என என் வாழ்வின் முக்கிய அத்தியாயங்கள் தீர்மானிக்கப்பட்டது இந்த நிலையத்தில்தான்,” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் தாதி ஓமதேவி. 

இரண்டு ஆண் பிள்ளைகளுக்குத் தாயான இவர், இந்த நிலையத்திலேயே தாதி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று 2003ஆம் ஆண்டுவரை பணியினைத் தொடர்ந்தார். பிறகு பல மருத்துவமனைகளில் பணிபுரிந்த இவர், 2014ஆம் ஆண்டு மருத்துவத் தலைமைத்துவத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 

2008ஆம் ஆண்டு இவர் மூத்த அலுவல் தாதியாக இருந்தபோது லுக்கேமியா நோயினால் பாதிக்கப்பட்ட ஆறு வயதுச் சிறுமி இவருடைய பராமரிப்பில் இருந்தார். இறுதிநாள்களை எண்ணிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி, தன்னிலை உணர்ந்து தான் இறப்பதற்குச் சில நாள்களுக்குமுன், தன் மறைவிற்குப் பின்னரும் இந்த உலகில் மகிழ்வுடன் வாழ தம் தாயார் பழகிக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த சம்பவம் வாழ்வின்மீது மிகப்பெரிய புரிதலை ஏற்படுத்தியதாகக் கூறினார் ஓமதேவி. 

ஓமதேவியின் தாயார் இறந்த ஓராண்டு கழித்து நடந்த இந்தச் சம்பவம் தன்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்றும் நிரந்தரமற்ற இந்த வாழ்வின் மீதான கண்ணோட்டத்தை விரிவுபடுத்தியது என்றும் இவர் குறிப்பிட்டார். 

2021ஆம் ஆண்டு தன் தாய்வீடான ‘டச்’ இல்லப் பராமரிப்பு நிலையத்திற்கே திரும்பினார் இவர். தற்போது மீண்டும் சமூக தாதியாகப் பொறுப்பேற்றிருக்கும் இவர், இளம் தலைமுறைத் தாதியர்களுக்கு சிங்கப்பூர் தாதியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

ஒரு தாதியாக இருப்பதற்கு மிகுந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படும் என்றும் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவழிப்பது, அவர்களுடன் நீண்ட உரையாடல்களை மேற்கொள்வது அவர்களுடனான நெருக்கத்தை அதிகரிக்கும் என்றும் கூறிய இவர், விரைவில் நோயாளிகள் குணமடைய இந்த நட்புறவு ஒரு பாலமாய் இருக்கும் என்றும் இக்கால இளம் தலைமுறை தாதியர்களுக்கு அறிவுறுத்துகிறார். 

சுகாதாரத் துறையில் பணிபுரியும் பல குடும்ப உறுப்பினர்களைக் கண்டு உத்வேகம் கொண்டு தாதிமைத் தொழிலைத் தேர்ந்தெடுத்துள்ளார் தற்போது 32 வயதாகும் கோபிநாதன் சிவானந்தம். 2014ஆம் ஆண்டு டான் டோக் செங் மருத்துவமனையில் தன் பணியினைத் தொடங்கிய இவர், 2021ஆம் ஆண்டு முதல் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தில் சமூகத் தாதியாக பணிபுரிந்து வருகிறார். 

தொடக்கத்தில் இப்பணியின் அடிப்படையைப் புரிந்துகொள்ளச் சிரமப்பட்ட இவர், நாளடைவில் பல்வேறு தாதிமைப் பொறுப்புகளையும் கற்றுத் தேர்ந்தார். ஒவ்வொரு முறையும் நோயாளி ஒருவர் முழு குணமடைந்து, நலமாக வீடு திரும்பும்போது ஏற்படும் மனநிறைவிற்காக எத்துணைச் சிரமங்களையும் கடந்து வரலாம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் இந்த ஆண் தாதி. 

அண்மையில் நீரிழிவு முற்றிய நிலையில் இருந்த ஒரு நோயாளியை சரியான மருத்துவ முறைகள், பராமரிப்பு, ஒழுங்கான உணவு முறை மாற்றம் என நான்கே மாதங்களில் ஒழுங்குபடுத்தி, அவரின் சர்க்கரை அளவைச் சீராக்கி, அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் கண்டது மறக்க முடியாத அனுபவம் எனப் பகிர்ந்துகொண்டார் கோபிநாதன்.

அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நன்றி நவின்றது விருதுபெற்றதைப் போன்ற உணர்வைத் தந்ததாகவும் இவர் கூறினார். 

வருங்காலத்தில் சமூகத் தாதிகளைப் பயிற்றுவிக்கும் தாதியாக உருவாக வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படும் கோபிநாதன், பாலினத்திற்கும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் முழுமனத்துடன் செயல்பட்டால் எவராலும் எத்தொழிலையும் சிறப்பாகச் செய்ய இயலும் என்றும் சொன்னார். 

monolisa@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!