தாதியரைக் கொண்டாடும் நாள்

3 mins read
38630e57-36c4-4112-89ff-d76defcbe8e2
அன்றாட வாழ்விற்கு மீண்டும் பழக்கப்பட திரு கனகசிங்கத்திற்கு உதவி வருகின்றனர் சமூக சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் தாதியர் ஷெரில் ஆவ், மார்கரெட் சாய். - படம்: சபிதா ஜெயகுமார் 
multi-img1 of 2

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சிங்கப்பூர் தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது. தேசத்திற்குப் பங்காற்றிய தாதியரின் வளமான வரலாற்றை நினைவுகூரும் வகையில் அமைகிறது இந்த நாள்.

சுகாதாரத் துறையில் தாதியர் தொடர்ந்து இன்றியமையாத பொறுப்பை வகித்து வருகின்றனர். மூப்படைந்து வரும் சமுதாயத்தில் பல சுகாதாரச் சவால்கள் எழும் என முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அவற்றைச் சமாளிப்பதில் தாதியர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

85 வயதாகும் திரு கனகசிங்கம் குணரத்னம் கடந்த சில மாதங்களாக மார்சிலிங் சமூக சுகாதார நிலையத் தாதியர்களிடமிருந்து பராமரிப்பு பெற்று வருகிறார்.

முதுமையால் ஏற்பட்ட பல சுகாதாரப் பிரச்சினைகளாலும் வீட்டில் வழுக்கி விழுந்த காரணத்தாலும் 2018லிருந்து திரு கனகசிங்கம் பலமுறை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. சற்று குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய திரு கனகசிங்கம் அன்றாட வாழ்விற்கு மீண்டும் பழக்கப்பட உதவி வருகின்றனர் சமூக சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஷெரில் ஆவ், மார்கரெட் சாய்.

“ஒவ்வொரு வாரமும் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்திற்குச் செல்வேன். அங்கு அவர்கள் வழங்கும் ஆதரவும் அறிவுரையும் பயனளித்துள்ளன. அடிக்கடி தாதியர்கள் வீட்டிற்கு வந்து என் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவற்றை அளவிடுவர். வீட்டுச் சூழல் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வர்,” என்று கூறினார் திரு கனகசிங்கம்.

தாதிமைத் துறையில் ஒன்பது ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மார்கரெட், ‘உட்லண்ட்ஸ் ஹெல்த்’ சமூகத் தாதியாக ஈராண்டுகளாக வேலை பார்க்கிறார்.

“சமூக சுகாதார நிலையத் தாதியரின் பணி, மருத்துவமனையில் வேலை பார்க்கும் தாதியருடன் ஒப்பிடுகையில் சற்று வேறுபடும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வயது முதிர்ந்த நோயாளிகள் முழு நலம்பெற ஆதரவாக இருப்போம். அத்துடன், துடிப்புமிக்க மூப்படைதலில் ஈடுபடவும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்போம்,” என்று பகிர்ந்துகொண்டார் தாதி மார்கரெட், 38.

“சமூக சுகாதார நிலையத்தில் எங்களுடன் சேர்ந்து மருந்தாளர்கள், சுகாதார வழிகாட்டிகள் என பலர் ஒன்றிணைந்து குழுவாக வேலை பார்க்கின்றனர். அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு நோயாளிகளுக்குப் பராமரிப்பு வழங்குகிறோம். திரு கனகசிங்கம் நல்லபடியாக குணமடைந்து தானாக நடமாடிக்கொண்டிருக்கிறார். அவருக்குத் தேவையான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி சுகாதாரத்தைப் பேணுவோம்,” என்று விளக்கினார் தாதி ஷெரில், 33.

தாதியரின் கவனிப்பு பேருதவியாக இருப்பதாக திரு கனகசிங்கம் குறிப்பிட்டார்.

“நானும் என் மனைவியும் தனியாக வசிக்கிறோம். ஒவ்வொரு முறையும் தாதியர் எங்களிடம் நலம் விசாரிப்பது ஆறுதலாக இருக்கும். உண்மையிலேயே இருவரும் என் கண்களுக்கு தாதிமையின் உருவமான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்றுதான் தெரிகின்றனர். அவர்கள் அளித்த ஆதரவை என்றும் மறவேன்,” என மனந்திறந்து பகிர்ந்தார் திரு கனகசிங்கம்.

மூத்தோருக்கு உதவியாக சமூக சுகாதார நிலையங்களும் அதன் ஊழியர்களும் பல திட்டங்களைக் கொண்டுள்ளனர். இது பெரும்பாலான மூத்தோருக்குத் தெரிவதில்லை என்று தமக்குத் தோன்றுவதாக திரு கனகசிங்கம் குறிப்பிட்டார்.

முதுமையில் தனியாக அவதிப்படத் தேவையில்லை என்றும் மக்கள் இந்நிலையங்கள் குறித்து அறிந்துகொள்வது முக்கியம் என்றும் அவர் சொன்னார்.

sabitha@sph.com.sg

குறிப்புச் சொற்கள்