சைவ சமயத்தை முன்வைத்த திருமுறை மாநாடு

சைவ சமய கோட்பாடுகளை விளக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு 2023. சிறப்புச் சொற்பொழிவுகள், திருமுறை ஓதுதல், மாணவர்ப் படைப்புகள் முதலியவை இம்மூன்று நாள் நிகழ்வுகளிலும் அரங்கேறின.

கடந்த ஜூலை 28, 29, 30 தேதிகளில் இடம்பெற்ற திருமுறை மாநாடு, அதற்கான ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்தில் மாலைதோறும் நடந்தேறியது. சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட சைவ சித்தாந்த பேச்சாளர் திரு கி. சிவகுமாரின் சிறப்புச் சொற்பொழிவுகள் மக்களின் வரவேற்பைப் பெற்றன. திருமுறை அருளாளர்கள், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்த ஆழமான கருத்துகளை அவர் எளிமையாகச் சுவைபட முன்வைத்தார். திருமுறை மாநாட்டின் ஓர் அங்கமாகச் செங்காங் அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்ரர் ஆலயத்தில் ஜூலை 30ஆம் தேதியன்று ஞாயிறு காலை நடைபெற்ற அறுபத்துமூவர் குருபூசையில் வருகையாளர்களின் சமயம்சார் கேள்விகளுக்கும் பதிலளித்துத் தெளிவூட்டினார் திரு சிவகுமார்.

சிறப்பு விருந்தினராக முதல் நாளன்று கலந்துகொண்ட இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் திரு செங்குட்டுவன் கன்னியப்பன் சமயத்தை இளையர்களிடத்தில் திணிக்க வேண்டாம் எனவும் பெற்றோர்களிடத்தில் வலியுறுத்தினார். வாழ்க்கைக்கான வழிகாட்டுதலாக, பிடிமானமாக சமயக் கருத்துகளை அறிமுகப்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டார். 

ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் பலதரப்பட்ட திருமுறை சார்ந்த போட்டிகளில் இவ்வாண்டு 700க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெரியவர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் வெற்றிபெற்ற படைப்புகளை மேடையேறச் செய்ததுடன் அவர்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர்.

சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு 1981ல் மறைந்த திரு க. அம்பலவாணரால் தொடங்கப்பட்டது. அவருடன் தொடக்கக் காலத்திலிருந்தே துணைநின்று அண்மை காலம் வரை திருமுறை மாநாட்டு நடவடிக்கைகளில் உன்னத பங்கு வகித்த மறைந்த திரு ஆ. பழனியப்பனுக்குத் ‘திருமுறை தொண்டர்’ விருது வழங்கப்பட்டது. விருதை திரு பழனியப்பனின் மனைவி, மகள் இருவரும் பெற்றுக்கொண்டனர். சமயம் உள்பட பலவகைகளிலும் சமுதாய நலனைக் கருத்தில் கொண்டிருந்த அப்பாவின் வாழ்க்கையை நினைவுகூர்ந்த அவரின் மகள் பத்மா, இனித் திருமுறை மாநாடு எனும் தளத்தின் வாயிலாகச் சமூகம் எவ்வாறு பயனடையலாம் என்ற சிந்தனையைத் தூண்டினார்.

தலைமை உரை ஆற்றிய திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் திரு இராம கருணாநிதி, அடுத்த தலைமுறையினரிடத்தில் சைவ சமயம் குறித்த ஆர்வத்தைத் தூண்டவும் தொண்டுணர்வை வளர்க்கவும் வகைசெய்வதே இந்நிகழ்வின் நோக்கம் எனக் கூறினார். அறிவியலை முன்னிலைப்படுத்தி இருக்கும் இளையர்களிடம் சைவ சமயக் கருத்துகளை அறிவியல் கண்ணோட்டத்தில் எடுத்துரைப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களின் நன்கொடைகளில் திருமுறை மாநாடு இயங்கி வருகிறது. இந்து அறக்கட்டளை வாரியத்துடன் இணைந்து ‘திருமுறை 100’ எனும் முயற்சியை அது கடந்த ஆண்டு மேற்கொண்டு நூறு காணொளிகளை வெளியிட்டிருந்தது. இவை, சிங்கப்பூர்ப் பேச்சாளர்கள், சிங்கப்பூர்ப் பாடகர்கள் ஆகியோரின் கைவண்ணத்தில் உருவாகித் திருமுறை பாடல்களை மக்களுக்கு எளிய முறையில் விளக்கின.

இவ்வாண்டு ‘தேவாரப் பண்ணிசைப் பாடல்கள்’ என்னும் தலைப்பிலான பாடல் தொகுப்பு நூல் நிகழ்வில் வெளியீடு கண்டது. இத்தகைய வளங்களை மக்களுக்கு எட்டும் வகையில் செய்யத் தொடர்முயற்சிகளை எடுத்து வருகிறது திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக்குழு. மே மாதம் நிகழ்ந்த திருமுறை முகாம் 2023ல் 40 மாணவர்களை இணைத்த இக்குழுவின் இளையர் பிரிவு, இனிச் சேவை நடவடிக்கைகளில் பங்காற்றவும் திட்டமிட்டுள்ளது. மேல் விவரங்களுக்கு singaithirumurai.org தளத்தை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!