அக்கம்பக்கத்தாரின் பசி போக்கும் சமூகத் திட்டம்

ஈரறை வாடகை வீட்டில் தாத்தா, பாட்டி, தங்கையுடன் லெங்கோக் பாருவில் வசிக்கும் 11 வயது ஹேமா (உண்மைப் பெயரன்று), பெரும்பாலான நாள்களில் காலை உணவு உண்பதில்லை.

பொறியியல்சார்ந்த வேலையில் உள்ள தன் தாத்தாவின் வருமானத்தை நம்பியிருக்கும் ஹேமாவின் வீட்டாருக்கு, காலை உணவுக்கான பணம் எப்போதும் இருப்பதில்லை. கல்வி அமைச்சின் நிதியுதவித் திட்டத்தால் பலனடைந்துவரும் ஹேமா, பள்ளி இடைவேளை நேரங்களில் மட்டும் தனக்குக் கொடுக்கப்படும் $2.80ஐச் சோறு வாங்கப் பயன்படுத்திக்கொள்வார். அதுவரை சோர்வாகவே இருப்பார்.  

அண்மைய காலமாக ஹேமா உள்பட ஏறத்தாழ 30 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உதவி வருகிறது, லெங்கோக் பாரு வட்டாரத்தில் குடியிருக்கும் இரு தாய்மாரின் காலைச் சிற்றுண்டிச் சேவை. மர்லீனா-எலிசா தேவி இருவரும் முன்னெடுத்த திட்டத்தில், வட்டாரத்தில் குடியிருக்கும் 15 தொண்டூழியர்களின் துணைகொண்டு சமூக அமைப்புகளுடன் கைகோர்த்து இயங்கிவருகிறது இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் ‘ஹெல்தி மீ அண்ட் யூ’ முயற்சி. 

பெரும்பாலும் ஈரறை வாடகை வீடுகளுடைய ஆறு புளோக்குகளைக் கொண்டது லெங்கோக் பாரு வட்டாரம். இவ்வட்டாரவாசிகளின் மாதாந்தர ஊதியம் அதிகபட்சம் $1,500. இவர்களின் நலம்காக்க இம்முயற்சி தொடங்கப்பட்டது. 

திருமதி மர்லீனா முகம்மது யாசத்தின் வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் குளிர்பதனப் பெட்டியிலிருந்து லெங்கோக் பாருவில் வசிக்கும் பிள்ளைகள் வாரநாள்களில் காலை ஆறு மணி முதல் ஒரு பாக்கெட் பாலும் சில பிஸ்கட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம், சமைப்பதற்கு எதுவும் இல்லாத வட்டாரவாசிகள் மற்றொரு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளையும் நூடல்ஸ் வகைகளையும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். இவை, மாதந்தோறும் இக்குழுவுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் நல்லுள்ளங்களின் நன்கொடையாகும். 

பள்ளிக்குப் பிள்ளைகளைப் பசியுடன் அனுப்பும் வேதனையை 37 வயது திருமதி எலிசா தேவியும் 45 வயது திருமதி மர்லீனாவும் நன்கு அறிந்தவர்கள். ஒரு சிறு பாக்கெட் பால் குடித்தால் நாள் முழுக்க விழிப்புடன் இருப்பதாகக் கூறிய திருமதி மர்லீனாவின் ஐந்து பிள்ளைகளில் கடைசி மகன் ரஃபீக்கின் அனுபவத்தால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாக திருமதி மர்லீனா கூறினார். 

“வெறும் வயிற்றுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பலர் தங்களின் கவனம் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். கற்கும் ஆர்வத்தையும் இழக்கின்றனர்,” என்றார் அவர்.

தொடக்கப்பள்ளி செல்லும் இரு பிள்ளைகளுக்குத் தாயாரும் ஒற்றைப் பெற்றோருமான திருமதி எலிசா, சில சமயங்களில் வீட்டில் சில்லறை மட்டுமே மிஞ்சும் நிலையில் சிக்கியுள்ளார். அவரின் வீட்டில் ரசம் சோறு, அல்லது சோறுடன் பொரித்த முட்டை முதலிய எளிய உணவுவகைகள்தான் பெரும்பாலும் இருக்கும். பிள்ளைகளுக்கு இரண்டு வேளையாவது வயிற்றை நிரப்பும் உணவளிப்பது லெங்கோக் பாரு தாய்மார்களுக்குச் சிக்கலாய் இருப்பதைக் கண்டு அவர் வருந்தினார். ஆரோக்கியமான உணவு விலையதிகமாக இருப்பதும் வருத்தமளிக்கும் என்று அவர் கூறினார்.

“இப்போதெல்லாம் பிள்ளைகள் பள்ளிக்கு ஆர்வத்துடன் காலையில் எழுவதைக் காண்பது என்னை நெகிழ வைக்கிறது. கொடையாளர்களின் ஆதரவு தொடரும் என்று குழு பெரிதும் நம்பி உள்ளது,” என்றார் திருமதி எலிசா தேவி கோவிந்தசாமி. 

இத்திட்டத்தைத் தாண்டி, லெங்கோக் பாரு வட்டாரவாசிகளுக்கு கொவிட்-19 போது இலவச மதிய உணவளித்தும் தனிப்பட்ட சிக்கல்களை அவர்கள் பகிர்ந்துகொள்ள அவசரத் தொடர்பு எண் ஒன்றை உருவாக்கி நிர்வகித்தும் உள்ளது ‘ஹெல்தி மீ அண்ட் யூ’. நம்பகமான, ஆதரவுள்ள சமூகப்பிணைப்பை உருவாக்குவது இதன் இலக்காய் உள்ளது. முக்கியமாக, உடல் ஆரோக்கியம், மனநலம் இரண்டிலும் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தாருக்கு உதவ இக்குழு முனைகிறது. 

நீண்டகால வருகை அனுமதியில் ஏறத்தாழ 10 ஆண்டு காலமாய் சிங்கப்பூரில் வசிக்கும் திருமதி எலிசா, 2021ல் கருப்பையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குச் செல்ல வேண்டியிருந்தது. எவ்வித அரசாங்கச் சலுகைகளுக்கும் அவர் தகுதிபெறாததால் ஏறத்தாழ $7,000 இந்த அறுவை சிகிச்சைக்குத் தேவைப்பட்டது. 

போராடி, மன்றாடி, பின்னர் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் தயவில் இலவச அறுவை சிகிச்சை பெற்றார் திருமதி எலிசா. தம்மைப்போல நிதி நெருக்கடியால் மருத்துவ உதவி பெறாத வட்டாரவாசிகளின் நிலை என்னவாகும் என இச்சம்பவத்திற்குப் பிறகு மர்லீனாவும் எலிசாவும் ஆலோசித்தனர். 

2021ல் அப்போதைய சுகாதார அமைச்சர் திரு கான் கிம் யோங் குறைந்த கல்வி நிலைக்கும் ஆயுள்காலம், உடல்நலம் ஆகியவற்றுக்கும் இடையேயான தொடர்பைச் சுட்டிக்காட்டும் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்தார். உயர்நிலைக்குப் பிந்திய கல்வி பெறாதோரின் ஆயுள்காலம் 81 வயது. இது பிறரைக் காட்டிலும் 5.8 ஆண்டுகள் குறைவு. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆகியன ஏற்படுவதன் சாத்தியமும் இப்பிரிவினரில் அதிகம். ‘பியோண்ட்’ சமூக சேவைகளின் லெங்கோக் பாரு சுகாதார ஆய்வின்படி 42 விழுக்காட்டினர் இத்தகைய நீண்டகால சிக்கல்கள் கொண்டிருந்தாலும் பெரும்பாலானோர் மருத்துவ உதவி நாடுவதை இறுதித் தெரிவாக வைத்துக்கொள்கின்றனர்.  

இந்நிலை மாற, வசதிகுறைந்தோருக்காக மவுண்ட் அல்வீனியா முன்னெடுத்துள்ள ‘அவுட்ரீச் மெடிக்கல் அண்ட் டெண்டல் கிளினிக்’ திட்டத்துடன் இணைந்து பல் பராமரிப்பு, பெண்கள் சுகாதார சேவைகள், சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி சேவை ஆகியவற்றை வட்டாரவாசிகளுக்குக் கொண்டுசெல்கிறது ‘ஹெல்தி மீ ஆண்ட் யூ’. இவற்றோடு வட்டாரவாசிகள் பெற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்க உதவி குறித்தும் இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். 

https://healthyyouandme.netlify.app/ எனும் இணையத்தளத்தின் வாயிலாக இயங்கி வரும் இத்திட்டம், லெங்கோக் பாரு மக்களின் தேவைகளை நிறைவுசெய்து முழுமையான ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்துக்கொடுக்க முனைந்துள்ளது. இதற்காக மக்களின் நீண்டகால ஆதரவையும் அது நாடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!