விரயத்தை உணவாக்கும் ‘லெஸ் அண்ட் கோ’

எகிப்தியர்கள் உணவு விரயத்தைக் குறைப்பதற்கு ரொட்டியிலிருந்து மதுபானம் தயாரிக்கும் ஆதிகால பழக்கத்தைக் கொண்டிருந்ததாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன.

இது உண்மையில் சாத்தியமா எனும் ஆர்வம் கொண்டிருந்த இளையர் திரவிந்தர் சிங், தமது வீட்டுச் சமையலறையில் ரொட்டியை அரைத்து அதிலிருந்து மதுபானம் செய்ய முயன்றபோது அது பெரும் தோல்வியில் முடிந்தது. 

“என் நண்பர்கள் நான் தயாரித்த பானத்தைக் குடித்து வெறுத்துவிட்டனர்,” என்று நகைத்தார், தற்போது சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் தொழில்முனைவராக வலம்வரும் 32 வயது திரவிந்தர். குறிப்பாக, நீடித்த நிலைத்தன்மைக்கு நேரடியாக வழிவகுக்கும் வண்ணம் தமது வர்த்தகத்தை அமைத்து 2019ஆம் ஆண்டுமுதல் நிர்வகித்து வருகிறார் திரவிந்தர். இன்று அவரின் ‘லெஸ் அண்ட் கோ’ நிறுவனம் விரயமாகும் உணவுப் பொருள்களைப் பானங்களாக மாற்றிவருகிறது. 

உள்ளூர் ரொட்டிக்கடைகள், ‘சிஎஸ் ஃபிரஷ்’, ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ முதலிய பேரங்காடிகளில் விற்காமல் போன ரொட்டிகள் குப்பைத்தொட்டிக்குப் போகவிடாது காப்பாற்றி மதுபானங்களாக்குகிறது ‘லெஸ் ஆண்ட் கோ’வின் ஒரு கிளையான ‘கரஸ்ட்’. பயன்படுத்தப்பட்ட காப்பி தூள், பூசணிக்காய் தோல் முதலியவை அவற்றுக்குச் சுவைசேர்க்கின்றன. இந்நிறுவனத்தின் மற்றொரு கிளையான ‘கிராப்’, பயன்படாத பழங்கள், காய்கறிகள், பழத்தோல்கள் முதலியவற்றை இனிப்புப் பானங்களாக்குகிறது. 

அதே சமயம், உள்ளூர்ப் பேரங்காடிகள் அல்லது வர்த்தகங்களால் உருவாகும் உணவுப்பொருள் விரயத்தை அவர்கள் விற்கக்கூடிய பானங்களாக மாற்றியமைத்துக் கொடுக்க ‘லெஸ் அண்ட் கோ’ அவர்களுடன் கைகோர்த்து வருகிறது. 2021 முதல் ஜப்பானிலும் இந்நிறுவனம் கிளை திறந்துள்ளது. 

இவற்றின் வாயிலாக 3,000 கிலோ அளவிலான உணவு விரயத்தைத் தடுத்தும் 4,200 கிலோவுக்கும் மேற்பட்டளவில் கரியமில வாயு உற்பத்தியைக் குறைத்தும் உள்ளது திரவிந்தரின் ‘லெஸ் ஆண்ட் கோ’. இதற்கு உரமிட்டதோ, வளரும் பருவத்தில் அறுவர் இருந்த தம் வீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட வாழ்க்கைமுறையே என்று குறிப்பிட்டார் திரவிந்தர். 

உணவுண்ட பிறகு மிச்சப்படும் உணவுப்பொருள்களையும் சமைத்த உணவையும் அடுத்த வேளைக்குப் பயன்படுத்திக்கொள்வது திரவிந்தரின் தாயார் கொண்டிருந்த ஒரு வழக்கம். 

“நீடித்த நிலைத்தன்மை என்பது ஒரு நவீனயுக இயக்கமன்று, அது ஒரு வாழ்க்கைமுறை என்பதை அம்மா உணர்த்தினார்,” என்றார் திரவிந்தர். 

யூடியூப் காணொளிகளைக் கண்டு தாம் சுயமாகக் கற்றுக்கொண்ட மதுபானத் தயாரிப்புமுறை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கலிஃபோர்னிய மாநிலத்தில் இருந்த 11 மதுபான ஆலைகளுக்கு நேரில் சென்றார் திரவிந்தர். அவரின் ஒன்றரை மாதகால பயணத்தில் ஆலைகளில் இலவசமாகப் பணிபுரிந்தும் நேரடியாகத் தயாரிப்புமுறைகளைக் கவனித்தும் சொந்தமாக ஒரு தயாரிப்புமுறையை உருவாக்கிக்கொண்டார். அதுவரை முழுநேர நிதி ஆலோசகராக இருந்த அவர், தமது சேமிப்பை நம்பிக்கையுடன் முதலீடு செய்து நிறுவனத்தைத் தொடங்கினார். 

Remote video URL

சீரிய நோக்கத்துடன் நிறுவனம் தொடங்கப்பட்டபோதும் சந்தேகக் கண்களுடன் பார்க்கும் சிலர் இருக்கவே செய்தனர். சாப்பிட்டு மிச்சமான அல்லது காலாவதியான உணவுப்பொருள்களை கரஸ்ட் பயன்படுத்துகிறதா, இது சுகாதாரமானதா முதலிய வாடிக்கையாளர்களின் கேள்விகளைக் கையாள ‘புத்துருவாக்கம்’ (upcycling) குறித்த விழிப்புணர்வைப் பரப்ப முற்பட்டார் திரவிந்தர். 

சிங்கப்பூர் அதன் உணவுப்பொருள்களில் 90 விழுக்காட்டை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துவந்தாலும் மக்கள் உணவின் பின்னணியை அறியாமல் இருக்கின்றனர். தங்களின் பழக்கவழக்கங்களும் உணவு விரயத்தில் பங்கு வகிப்பதாக அவர் கருத்து தெரிவித்தார். 

இணையம், சமூக ஊடகம், நேரடி நிகழ்வுகள் ஆகியவற்றில் நிறுவனத்தின் பொருள்களையும் அதன் அர்த்தமுள்ள பின்னணியையும் அவர் பகிர்ந்துகொண்டது பலரின் கவனத்தை அதிவிரைவில் ஈர்த்தது. கடந்த ஆண்டின் ‘50 நெக்ஸ்ட்’இன் அனைத்துலக உணவியல் துறையில் தடம்பதித்து வருவோர் பட்டியலில் திரவிந்தர் இடம்பெற்றார். 

கொவிட்-19 நெருக்கடியால் உணவுபானத்துறை முடங்கிய சூழல் ‘லெஸ் அண்ட் கோ’ நிறுவனத்திற்கும் ஏற்பட்டது. இருப்பினும், நீடித்த நிலைத்தன்மை திடீரென சமூக ஊடகத்தில் ஓர் இயக்கமாக உருவெடுத்துப் புகழ்பெற்றது. உணவு, உடை, ஆரோக்கியம் எனப் பல வாழ்க்கைமுறை அம்சங்கள் தொடர்பில் மக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளைத் தேடி வருகின்றனர். இது திரவிந்தருக்குச் சாதகமாக அமைந்தது; ‘கரஸ்ட்’ நிறுவனத்துடன் நின்றுவிடாமல் அண்மையில் ‘கிராப்’ கிளையைத் தொடங்குவதற்கான உத்வேகமும் பிறந்தது.  

சிங்கப்பூர் சுற்றுச்சூழல் சங்கத்தின் 2019 ஆய்வு ஒன்றில் மூன்றில் ஒரு சிங்கப்பூரர் வாரந்தோறும் 10 விழுக்காட்டும் அதிகமான உணவைக் குப்பையாகக் கருதி எறிகிறார்கள் எனத் தெரியவந்தது. உணவு விரயத்தைத் தடுக்கவோ புத்துருவாக்கம் செய்யவோ முற்பட்டுள்ள வர்த்தகங்கள் சிங்கப்பூர் சந்தையில் இன்னும் குறைவாகவே உள்ளன. வரும் காலத்தில் இந்நிலை மாறுவதற்குத் தம் நிறுவனம் ஓர் உந்துசக்தியாக விளங்கும் என நம்பிக்கை தெரிவித்தார் திரவிந்தர். நிறுவனங்களுடனான கூட்டுமுயற்சிகளின் வாயிலாக 2030க்குள் உலக உணவு விரயத்தில் 1% குறைக்கும் இலக்கை நோக்கி நடைபோடுகிறது ‘லெஸ் அண்ட் கோ’. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!