நாய் இனங்களில் பெரிதாக இருக்கும் நாய்கள் ஆபத்தானவை என்ற தவறான எண்ணத்தை மாற்றவும் இவ்வகை நாய்களைச் சரியான முறையில் வளர்ப்பது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுக்கவும் ‘அனிமல் வேலி’ என்ற தமது நிறுவனம் மூலம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் 36 வயது ஜெகநாதன்.
பிப்ரவரி மாதத்தில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்த இவர், நாய்களுக்கு நீச்சல், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வகுப்புகளை வார இறுதி நாள்களில் நடத்தி வருகிறார். இயற்கைச் சூழலில் நாய்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அமைந்தபடி வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார் திரு ஜெகநாதன்.
அத்துடன் நாய்களின் கட்டொழுங்கை மேம்படுத்தும் வகையில் வகுப்புகளையும் நடத்தி வருகிறார் இவர். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான நம்பிக்கையை வளர்த்த பிறகுதான் வகுப்புகளின் மூலம் பலன் காண முடியும் என்றும் அதற்குக் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என்றும் பகிர்ந்துகொண்டார்.
தம் மனைவி ஹேமாசாந்தினியுடன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஜெகநாதன். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் நேரங்களில் தங்களின் நாய், ராணாவை பார்த்துக்கொள்ள நாய் பராமரிப்பாளர்களைத் தேட அவதிப்பட்டார்கள் இவர்கள். பெரிய நாய் என்பதால் அதைக் கட்டுப்படுத்தப் பலருக்கும் தயக்கம் இருந்ததைச் சுட்டினார் மருந்தக நிர்வாகியாகப் பணிபுரியும் திருமதி ஹேமாசாந்தினி, 32.
முதன்முதலாக பெரிய ‘ராட்வைலர்’ இன நாயை வாங்கிய பின்பு சரியான முறையில் நாயை வளர்க்கப் பல வகுப்புகளுக்குச் சென்றனர். நாய் ஒழுங்காக இருந்தாலும் நாயைப் பார்ப்பவர்கள் பயத்தில் தூரச் சென்றிடுவார்கள். இந்தச் சிரமத்தை அறிந்த தம்பதியர், தங்களைப் போல அவதிப்படுபவர்களுக்கு உதவ இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.
“பெரிய நாய்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும், ஆபத்தானவை என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. அதை உடைத்தெறிந்து இந்த நாய்களுக்குச் சரியான பயிற்சிகளை வழங்க எங்கள் நிறுவனம் உதவும் என்று நம்புகிறோம்,” என்றார் கப்பல் துறையில் முழுநேரமாகப் பணி புரியும் திரு ஜெகநாதன்.
பெரிய நாய்களுக்கு அன்பும் ஆதரவும் தேவை என்பதை நம்பும் இந்தத் தம்பதியர், தங்களின் ஒன்றரை வயது மகனான அர்ஜுன் சஷ்டி வேல் நாய் ராணாவுடன் இருக்கும் நெருக்கமான உறவைப் பற்றிப் பகிர்ந்துகொண்டனர்.
“அண்ணன் தம்பி போல இருவரும் வளர்ந்துவிட்டார்கள். சிறுவயதிலிருந்தே ராணா என் மகன் மீது அதிக பாசம் காட்டியதுடன் அவனைப் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளதை நாங்கள் கவனித்தோம்,” என்றார் திருமதி ஹேமாசாந்தினி.
தொடர்புடைய செய்திகள்
நாய்களுக்கான பயிற்சிப் பள்ளியில் பல மாதங்களாகப் பயிற்சி எடுத்து வந்த திரு ஜெகநாதன், முதன்முதலில் நண்பர்களின் நாய்களுடன் தமது பயிற்சிவிப்பாளர் ஆற்றலைச் சோதித்துப் பார்த்தார்.
பல மாதங்களுக்குப் பிறகு நாய்களுக்குப் பல சாகசங்களையும் கட்டளைக்கு ஏற்ப நடந்துகொள்ளும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுப்பதில் தேர்ச்சி பெற்றார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாய்களை உரிமையாளர்களின் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று அருகில் இருக்கும் கடற்கரை, திடலில் வகுப்புகளை நடத்துவார்.
“நாயின் தசைகளையும் உடல்நலத்தையும் மேம்படுத்த அதற்குத் தேவையான பயிற்சிகளை நான் திட்டமிடுவேன். ஒவ்வொரு நாயின் சிறப்பு அம்சங்களை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு நாய்க்கு மட்டும் கற்றுக் கொடுத்து வருகிறேன்,” என்றார் ஜெகநாதன்.
நாய்களின் உடல் அமைப்பை உன்னிப்பாகக் கவனித்த பிறகு அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், பயிற்சிகள் போன்றவற்றை திரு ஜெகநாதன் நாய்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவார்.
தங்களின் முழுநேர வேலைகள் காரணமாகத் தற்போது வார இறுதி நாள்களில் மட்டும் இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் தம்பதியர், இதையே முழுநேரமாகச் செய்ய ஆசைப்படுகிறார்கள். எதிர்காலத்தில் பெரிய நாய்களுக்குத் தங்கும் விடுதி ஒன்றை அமைத்துக் கொடுத்துப் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் திறக்கவும் இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

