தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துயரத்தைத் தூக்கி எறிந்து நடைபோடும் முன்மாதிரி அதிகாரி

3 mins read
8f0de3cf-acfd-4dab-9537-d84edd1e465c
சேகராஜ் எல்லப்பன். - படம்: சிங்கப்பூர்ச் சிறைத்துறை
multi-img1 of 3

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை, மருந்துகள் என்று சிரமப்பட்டபோதிலும் பணியில் சிறந்து விளங்கி, செயல்திறன் பதக்கத்தைச் (Efficiency Medal) சென்றாண்டு உள்துறை அமைச்சின் தேசிய தின விருது விழாவில் பெற்றார் 53 வயதாகும் சேகராஜ் எல்லப்பன்.

கடந்த 32 ஆண்டுகளாக சிங்கப்பூர்ச் சிறைச் சேவையில் கைதிகளின் சீர்திருத்தப் பிரிவில் அதிகாரியாகவும் தலைமைப் பாதுகாவலராகவும் சேவையாற்றி வரும் சேகராஜ், தமக்கு வாழ்க்கை எத்தகைய போர்க்களமாக அமைந்தாலும் தம் வேலை மீது காட்டும் அர்ப்பணிப்பை மட்டும் குறையாமல் வைத்திருக்கிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினை அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. சிறுநீரில் ரத்தம் கலந்து வந்ததை அறிந்தபோது இவர் முதலில் சிறுநீரகக் கல் பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார்.

மருத்துவப் பரிசோதனையில் இறுதிக்கட்ட புற்றுநோயினால் வலது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆரோக்கியமான வாழ்க்கை[Ϟ]முறையைக் கடைப்பிடித்து வந்த சேகராஜை இந்தச் செய்தி பெரிதும் வாட்டி வதைத்தது.

சிகிச்சை மூலம் வலது சிறுநீரகத்தை அகற்றிய பிறகு அவருக்கு மேலுமோர் இடி. நிணநீர்க் கணுக்களுக்கும் வயிற்றுப் பகுதிக்கும் புற்றுநோய் பரவிவிட்டது. கீமோதெரபி சிகிச்சைக்கு இணையான மருந்தொன்றை மருத்துவர் பரிந்துரைத்தபோது, “இந்த மருந்து வேலை செய்யாவிட்டால் இன்னும் ஆறு மாதங்களே உயிர்வாழ முடியும்,” என்று கூறியதால் சேகராஜ் மனமுடைந்தார். அவர் தற்போது ஒவ்வொரு வேளையும் ஆறு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியுள்ளது.

நல்ல வேளையாக அம்மருந்து அவரின் நோயை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர உதவி வருகிறது. சேகராஜ் தைராய்டு, உடல் வீக்கம், சோர்வு போன்ற பக்கவிளைவுகளைச் சந்தித்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வேலைக்குத் தொடர்ந்து செல்கிறார்.

கடந்த 10 மாதங்களாக உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத பணிகளில் ஈடுபட்டுவரும் சேகராஜ் முடிந்தவரை பெரிய பொறுப்புகளையும் கையாள்கிறார்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்த சேகராஜ் பிழைப்புக்காக சிங்கப்பூரை நாடி வந்தார். முன்னர் திரைச்சீலை விற்கும் கடையில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட அவருக்கு சிங்கப்பூர் வந்த புதிதில் சிறையில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு கிட்டியபோது முதலில் தயங்கினார்.

உறவினர் ஒருவரின் அறிமுகத்தில் சிங்கப்பூர் சிறைச் சேவையில் பணியாற்ற ஆறு ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மூத்த ஊழியர்களின் சரியான வழிகாட்டுதலும் அவருக்கு அமைந்த நட்பு வட்டமும் சேகராஜ் வேலையில் நிறைவு காணக் கைகொடுத்தது.

ஏழு பிள்ளைகளில் கடைக்குட்டியான சேகராஜ், தம் குடும்பத்தைப் பிரிந்து சிங்கப்பூரில் தனியாக வாழ சற்றுச் சிரமப்பட்டார். அப்பொழுது அவருக்கு வயது 21 கூட ஆகவில்லை.

“கைதிகள் என்றாலே உடல் முழுவதும் பச்சை குத்தி, முரட்டுத்தனமாகத் தோன்றுவர் என்பது பலரின் பொதுவான எண்ணம். ஆனால், அவர்களும் மனிதர்கள்தான். குற்றம் புரிந்து சிறைக்கு வந்தாலும் அவர்கள் குணத்தில் நல்லவர்கள்,” என்றார் சேகராஜ்.

“தகாத பழக்கத்தினால் விளையும் தவறுகள் காரணமாக பலர் சிறைக்கு வருகின்றனர்,” என்ற சேகராஜ், தொடக்கத்தில் கைதிகளுடன் உரையாடச் சிரமப்பட்டதாகக் கூறினார்.

அதிகாரி என்பதால் குரலை உயர்த்தி அதிகாரத் தோரணையில் அவர்களிடம் பேசுவது முறையல்ல என்ற சேகராஜ், கைதிகளுடன் நல்லுறவு வளர்த்துக்கொண்டு பேசுவதே சிறந்தது என்று கூறினார்.

2002ல் உதயபானு என்ப[Ϟ]வரைக் கைப்பிடித்த சேகராஜ், இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார். சிறைச் சேவையில் இருப்பதால் அவர் நீண்ட நேரம் பணிக்கு ஒதுக்க வேண்டும். இருப்பினும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்துடன் செலவிடுகிறார். இசை அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் இடையிலான பாலமாக இருக்கிறது.

நோய் பாதிப்புக்கு ஆளான தருணத்தை நினைவுகூர்ந்த அவர், “என் குடும்பம் என் அருகில் இல்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்,” என்று நா தழுதழுக்கக் கூறினார்.

ஒரு கட்டத்தில் குணமடையாமல் போய்விட்டால் அப்படியே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்ததாகக் கூறிய சேகராஜ், “எதிர்காலத்தில் என் மகளின் திருமணத்தின்போது அவள் கரம்பிடித்து நடக்க நான் உயிரோடு இருக்கவேண்டும் என்று எண்ணினேன்,” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

வேலையிலிருந்து விடுப்பு எடுத்து வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுறுத்தினாலும் சேகராஜ் அயராமல் உழைக்கிறார். துடிப்பான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கும் இவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

குறிப்புச் சொற்கள்