தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புத்தாக்க முறையில் கதை எழுத முதுகலைப் பட்டம்

2 mins read
7e1a3b96-1d79-410f-8b72-fffffaf3cfba
படைப்பாக்கத்துடன் எழுதும் துறையில் முதுகலை பட்டப்படிப்பை லாசால் கலைக் கல்லூரியிலிருந்து பெற்றுள்ளார் மேரி. - படம்: லாசால் கலைக் கல்லூரி

படைப்பாக்கத்துடன் எழுதும் (creative writing) துறையில் முதுகலை பட்டப்படிப்பை லாசால் கலைக் கல்லூரியிலிருந்து பெற்ற 35 வயது மேரி கிறிஸ்டினா ஸ்டானிஸ்லாஸ், புத்தாக்க முறையில் கலையையும் அறிவியலையும் கலந்து தமது படைப்புகளைச் செதுக்க விரும்புகிறார். 

கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று முதுகலைப் பட்டமளிப்பு விழாவில் சான்றைப் பெற்றுக்கொண்ட மேரிக்கு ஆங்கிலப் படைப்பாக்க எழுத்துத் துறையில் கிடைக்கும் முதல் கல்விச் சான்று இது.

கலை, அறிவியல் என்ற ஈருலகங்களை இணைத்து, தமது இனம், சமயம் தொடர்பான அடையாளத்தையும் தேரி தமது எழுத்துப் படைப்புகளில் அடக்கியுள்ளார். கவிதை, சிறுகதைப் படைப்புகளைப் பல உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் மேரி படைத்துள்ளார். 

இதற்குமுன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவத் துறையில் தமது பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஆங்கிலம், உயிரியல் பாடங்களைப் பள்ளியில் கற்பித்தார். தமது எழுத்துத்திறனை மேலும் வளர்க்க ஆசிரியர் பணியை விட்டு முதுகலைப் பட்டத்தை மேற்கொண்டார் இவர். 

“இதற்கு முன் இந்தத் துறையில் எந்தவித முறையான பயிற்சியும் இல்லாத நிலையில் முதுகலைப் பட்டப்படிப்புக்கான முதல் வகுப்பிலிருந்தே பல சிரமங்களை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. என் சக மாணவர்களுக்குத் தெரிந்த எழுத்து நுணுக்கங்களும் நூல்களும் எனக்குத் தெரியவில்லை,” என்று சந்தித்த சவால்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார் மேரி. 

இதனாலேயே வகுப்பு நேரத்திற்கு அப்பால் தெரியாத பலவற்றை மேரி தானாகத் தேடிக் கற்றுக்கொண்டார். 

தாம் கற்றுக்கொண்ட உத்திகளைக் கொண்டு பல்கலைக்கழக அளவில் மாணவர்களுக்குப் புத்தாக்க முறைகளில் ஆக்கபூர்வமான எழுத்துத்திறனை வளர்க்க ஆசைப்படுகிறார் மேரி.

‘இன்டிகிரேஷன்’ (Integration), ‘டிஃபரென்ஸியேஷன்’ (Differentiation) போன்ற கணக்குப் பாடங்களைப் புத்தாக்க முறையில் தமது கவிதைகளுடன் இணைத்து மேரி படைத்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

“கணக்கு, அறிவியல் பாடங்கள் தெரியாதவர்களுக்குக்கூட இந்தக் கவிதைகளும் சிறுகதைகளும் புரியும் வகையில் எளிமையாக எழுதியுள்ளேன். ‘பைத்தன்’ (Python) போன்ற குறிமுறையாக்க மென்பொருளை வைத்து ஒரு சிறுகதையை எழுதியுள்ளேன். கணக்குப் பாடங்கள் புரியாவிட்டாலும் கதையில் சொல்லவரும் கருத்துகளை நன்கு புரிந்துகொள்ள முடியும்,” என்று நம்புகிறார் மேரி. 

புதிய முறையில் தயாரிக்கப்பட்ட இந்தச் சிறுகதை இவ்வாண்டு இறுதியில் வெளியீடு காணும் என்ற செய்தியை நெகிழ்ந்தவாறு தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார் மேரி. 

“அறிவியல் கணக்குப் பாடங்களை உத்திகளாகப் பயன்படுத்திப் பல்கலைக்கழக மாணவர்களின் எழுத்துத் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் படைக்கச் சொல்லிக்கொடுப்பது என் நீண்ட நாள் கனவு,” என்று கூறினார் அவர்.

ஆசிரியராகப் பணிபுரியும் காலகட்டத்தில் தம் மாணவர்களுக்கு எழுத்தின் அழகையும் நுணுக்கங்களையும் புரியவைக்கப் பல வித்தியாசமான எழுத்து உத்திகளைக் கையாண்டார். 

இவர் எழுதிய சிறுகதை ‘துலிப் ட்ரீ ரிவியூ’ போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றது. மேலும், இவர் 2022ஆம் ஆண்டின் சிங்கப்பூர் கவிதை எழுதும் மாதத்தில் (SingPoWriMo) பங்கேற்றார். 

குறிப்புச் சொற்கள்