ஆனந்தபவன் உணவகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கிவரும் மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு இவ்வாண்டு, கவிமாலைக் காப்பாளர் திரு மா. அன்பழகன் இயற்றிய ‘மேகம் மேயும் வீதிகள்’ என்னும் கவிதை நூலுக்கு வழங்கப்பட்டது.
புத்தகப் பரிசுத் திட்டத்தின் 14வது ஆண்டுப் பரிசளிப்பு விழா ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று சையது ஆல்வி சாலையிலுள்ள ஆனந்த பவன் உணவகத்தின் மேல் மாடியில் நடைபெற்றது.
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் முரு.மணிவண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். சிங்கப்பூரில் கவிதை, சிறுகதை, கட்டுரை நூல்கள் அதிகம் வெளிவருவதாகவும் குழந்தை இலக்கியப் படைப்புகள் குறைவாகவே வெளிவருவதாகவும் அவர் சுட்டினார். எனவே, குழந்தை இலக்கியம் இன்னும் அதிகமாக வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்திய முனைவர் மணிவண்ணன், சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இந்த மண்ணின் மணம் சார்ந்த படைப்புகளைப் படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா ஆண்டியப்பன் இவ்வாண்டு முதல் பரிசுத் தொகையை 3,000 வெள்ளியாக அதிகரித்ததற்கு ஆனந்த பவன் குடும்பத்தைச் சேர்ந்த திருவாட்டி பானுமதி இராமச்சந்திரா, திருவாட்டி பரமேஸ்வரி எட்டிக்கன், திரு வீரா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அத்துடன் பல எழுத்தாளர்களின் வேண்டுகோளை ஏற்று நாவலையும் இந்தப் பரிசுத் திட்டத்தில் சேர்க்க எழுத்தாளர் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் 2025ஆம் ஆண்டு நாவலுக்குப் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
2023ஆம் ஆண்டின் புத்தகப் பரிசுக்கான தேர்வுக் குழுவில், தமிழ் நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி, மலேசியாவின் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கத்தின் தலைவருமான முனைவர் மனோன்மணி தேவி, சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்விக் கழகத்தின் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.ரா. சிவகுமாரன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
அவர்கள் போட்டிக்கு வந்திருந்த 10 கவிதைத் தொகுப்புகளை வாசித்து, ஒருமனதாக ‘மேகம் மேயும் வீதிகள்’ நூலைப் பரிசுக்குரிய நூலாகப் பரிந்துரைத்தனர்.
ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் திரு மா. அன்பழகன், தமது நூல் பரிசு பெறும் எனத் தாம் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறி, நடுவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் வரவேற்புரையாற்ற, கழகத் துணைத் தலைவர் திரு சு. முத்துமாணிக்கம் நன்றியுரை ஆற்றக் கழகச் செயலவை உறுப்பினர் திருவாட்டி பிரதீபா வீரபாண்டியன் நிகழ்ச்சியைச் சிறப்புடன் நெறிப்படுத்தினார்.


