விமானச் சிப்பந்தி திரு வினோத் பாலசுப்ரமணியம், 34, தமது லண்டன் பயணத்துக்காக சாங்கி விமான நிலையத்திற்குத் தனியார் வாடகை காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, வாகன ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வாகனத்தின் ‘ஹேண்ட்பிரேக்’கை இழுத்து வாகனத்தை உடனே நிறுத்தினார் வினோத். அந்த ஓட்டுநருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) செய்தபின் தம் வேலைக்கும் நேரத்தோடு சென்றுவிட்டார் அவர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரு வினோத் புரிந்த நற்செயலுக்காக எஸ்ஐஏ தலைமை நிர்வாகியின் சேவை உன்னத விருது இவருக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
வாகனங்கள் அதிகம் இருந்த சாலையில் ஓட்டுநர் நிலை அறிந்து சமயோசித புத்தியுடன் செயல்பட்ட திரு வினோத், போக்குவரத்தைப் பொருட்படுத்தாமல் வாகனத்தை விட்டு வெளியேறி பாதசாரி ஒருவரின் உதவியோடு ஓட்டுநரை வெளியே தூக்கினார். தமது விமானச் சிப்பந்திப் பயிற்சிகளை நினைவுகூர்ந்து பதற்றமின்றி ஓட்டுநருக்கு சிபிஆர் அளித்து நினைவு தெளிய வைத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் (எஸ்ஐஏ) கடந்த பத்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் வினோத்.
“எனது வேலை தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் விமான நிலையத்திற்குப் புறப்படுவேன். இந்த சம்பவம் நடந்ததும் ஓட்டுநரை மருத்துவ உதவியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றேன். அவசர காலங்களில் பொறுமையுடன் செயல்பட நான் பயிற்சி பெற்றிருக்கிறேன். பதறாமல் ஓட்டுநரின் உயிரைக் காப்பாற்றுவதே எனது நோக்கமாக இருந்தது,” என்றார் திரு வினோத்.
இச்சம்பவம் நடந்த பின்பும் நேரத்துடன் தமது வேலைக்குச் சென்றது முக்கியம் என்றும் இது அவர் தம் பணியிலிருந்து கற்றுக்கொண்ட ஒழுக்கம் சார்ந்த பழக்கம் என்றும் திரு வினோத் கூறினார்.
லண்டனிலிருந்து திரும்பிய திரு வினோத், மாரடைப்பு வந்த அந்த ஓட்டுநர் மருத்துவமனையில் இறந்துவிட்ட செய்தியை ஓட்டுநரின் மனைவியிடமிருந்து அறிந்துகொண்டு மனமுடைந்து போனதை வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் மட்டுமன்றி திரு வினோத்தின் சிறந்த சேவை ஆற்றலை முன்னிட்டும் அவருக்கு விருது வழங்கப்பட்டது. விமானப் பயணிகளுடன் ஒரு நண்பரைப் போல பேசி அவர்களின் பெயரை நினைவில் வைத்துப் பயணத்தின்போது அந்தப் பெயரைக் கொண்டு அவர்களை அழைக்கும் பழக்கத்தை திரு வினோத் கொண்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“பயணிகளின் பெயர், பயணத்திற்கான காரணம், விருப்பமான பானம் போன்ற தகவல்களை அறிந்து பயணிகளுக்குச் சேவை புரிவது அவர்களின் பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியமைக்கிறது. அதனால் எனக்கு மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றன,” என்றார்.
இரு பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், சிறு வயதிலிருந்தே விமானப் பயணத் துறையில் பணிபுரியும் ஆசை கொண்டுள்ளார். முழுமனதுடன் இந்தப் பணியில் சேர்ந்ததால் பயணிகளின் பெயர்களை நினைவில் கொண்டு அவர்களை மீண்டும் சந்திக்கும் நேரத்தில் பெயர் வைத்து அழைப்பது இவருக்கு வழக்கமாகியும் விட்டது.
“எந்தப் பயணம் ஆகட்டும், எந்த இருக்கை வகையாக இருக்கட்டும், பெயரை நினைவில் வைத்து அவர்களை அழைக்கும்போது பயணிகளின் முகத்தில் சிரிப்பு தெரியும். அச்சிரிப்பு என் பணியில் கிடைக்கும் பெரிய சாதனை,” என்று விளக்கினார் திரு வினோத்.
தம் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் இவர், குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் தம் மனைவி தமக்குத் தரும் ஊக்கமும் ஆதரவும் பெரிதும் பக்கபலமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் இவர் தம் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபட, குடும்பம்போல செயல்படும் தமது எஸ்ஐஏ விமானக் குழுவினர் காரணம் என்றார்.
இவ்விருது இவரின் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம் என்பதைவிட தொடர்ந்து மக்களுக்குச் சேவையாற்ற ஊக்குவிக்கிறது என்று திரு வினோத் கூறினார்.

