சிங்கப்பூரின் ஆகக் கடைசி ‘கச்சாங் புத்தே’ கடைக்காரர்களில் ஒருவர் அமிர்தலங்காரம் மூர்த்தி. 57 வயதுடைய இவர், கடந்த பத்தாண்டுகளாக பீஸ் சென்டர் கடைத்தொகுதிக்கு வெளியே தமது கடையை வைத்திருந்தார்.
கடைத்தொகுதியின் புதுப்பிப்புப் பணிகள் காரணமாக ஜூலை மாதத்தில் இடம் மாறினார்.
ஏப்ரல் மாதம் எஸ்பிஎஸ் டிரான்சிட் திரு மூர்த்தியை அணுகி, வாடகை தேவைப்படாத ஓர் இடத்தை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். முன்னதாக பீஸ் சென்டர் வெளியே வெயிலில் நின்று கடை நடத்தி வந்த திரு மூர்த்தி, தற்போது குளிரூட்டு வசதியுடைய தோ பாயோ பேருந்து முனையத்தில் வியாபாரம் நடத்தி வருகிறார்.
கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான வகை நொறுக்குச் சாப்பாட்டு வகைகள் ஜாடிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 11 வகைகளை இவரே தயாரிக்கிறார். எஞ்சிய வகைகளைக் கடைகளில் வாங்குகிறார். தாள்களைக் கூர் உருளைகளாகச் சுருட்டி, அவற்றில் கடலைகளை நிரப்பி 1.50 வெள்ளிக்கும் 2 வெள்ளிக்கும் இடைப்பட்ட விலையில் விற்கிறார்.
தஞ்சை மாவட்டத்தின் ஒக்கநாடு கீழையூரில் பிறந்த திரு மூர்த்தி, 2004ல் சிங்கப்பூருக்கு வந்தார். இத்தொழிலை இவர், தம் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார். திரு மூர்த்தியின் தந்தை நாகப்பன் அமிர்தலங்காரம், 90, சிங்கப்பூருக்கு எட்டு வயதில் வந்து பின் கிட்டத்தட்ட இருபது வயதாக இருந்தபோது இங்கு கச்சாங் புத்தே செய்யக் கற்றுக்கொண்டதாக திரு மூர்த்தி கூறினார். முதன்முதலாக ஹவ்காங் கம்பத்தில் தொழில் ஆரம்பித்த திரு அமிர்தலங்காரம், பழைய திரையரங்குகளில் இந்த வியாபாரத்தை நடத்தி வந்தார்.
இரவில் உறங்கும் முன் சுண்டல், கல்லேஜ்ஜு ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் ஆறு மணி எழுந்து அவற்றை வீட்டிலேயே சமைப்பார். கேலாங் பாருவில் தங்கும் இவர், காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை கடை நடத்துவார்.
2000களில் கச்சாங் புத்தே கடைகள் அருகி வந்தபோதும் சுமார் 20 கடைகள் இருந்ததாகக் கூறிய திரு மூர்த்தி, இப்போது தம் கடை மட்டுமே எஞ்சியுள்ளதாகக் கூறினார். கடையில் கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. சீன முதியவர்கள் அதிகம் வாழும் தோ பாயோ பகுதியில் பலர் வரிசையாகக் காத்திருந்து ‘கச்சாங் புத்தே’ வாங்குகின்றனர்.
“ஒவ்வொரு நாளும் இதற்காகக் காலையில் எழுந்து சமைப்பது சிரமமாக இருப்பதால் இதுபோன்ற கடைகளைத் தொடர்ந்து நடத்தப் பலரின் பிள்ளைகளும் விரும்புவதில்லை,” என்று அவர் கூறினார். இதனால் சில உணவு வகைகளுக்கான செய்முறைகளும் மெல்ல மறைந்துவிடுவதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் திரு மூர்த்தியின் கடைகளை நாடுகின்றனர். அவித்த கொண்டைக் கடலையை முதியோர் அதிகம் வாங்குகிறார்கள். இளையர்களுக்குப் அதிகம் பிடித்தது, வெள்ளைச் சர்க்கரையுடைய வேர்க்கடலை என்றார் திரு மூர்த்தி. இந்த சர்க்கரை வேர்க்கடலையைத் தயாரிப்பது, கடலை வகைகளில் ஆகக் கடினம் எனக் குறிப்பிட்ட திரு மூர்த்தி, அதைச் செய்ய ஆறு மணி நேரம் ஆவதாகக் கூறினார். கடலை பருப்பு மசாலா செய்வதும் சிரமம் எனக் குறிப்பிட்ட இவர், அவற்றை முந்தைய நாள் தண்ணீரில் ஊறவைத்து காலையில் மிளகாய்த் தூளையும் உப்பையும் சேர்த்து வறுப்பதாகக் கூறினார்.
வயதான வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வருவதைக் காணும்போது அவர்களுக்காகவே உணவுக் கடையைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என விரும்புகிறார் திரு மூர்த்தி. உருளைக் கிழங்கு ‘சிப்ஸ்’ போன்ற மேற்கத்திய நொறுக்குத் தீனிகளை விற்கும் பல கடைகள் சுற்றியிருந்தும் தம் கடையில் பலர் நீண்ட வரிசையில் நிற்பது, பாரம்பரிய உணவிற்கான வரவேற்பைக் காட்டுவதாகக் கூறினார்.