இலக்கிய விழுமியங்களை கற்றுத்தந்த பயிலரங்கு

3 mins read
ca942c03-7ab2-4694-8af7-b4b33e9d8f4e
வடக்கு வட்டாரக் குழுமப் பள்ளிகளுக்கான இலக்கியப் பயிலரங்கில் பங்குகொண்ட மாணவர்கள். - படம்: மோனலிசா 

பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் அண்மையில் வடக்கு வட்டாரக் குழுமப் பள்ளிகள் இணைந்து இலக்கியப் பயிலரங்கு ஒன்றை நடத்தியது.

இலக்கியங்களின் வழி தமிழர்களின் திறன்கள், வழிபாட்டு முறை, கலாசாரம், அரசியல், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் விழுமியங்கள் இப்பயிலரங்கில் பங்குகொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

தமிழர்களின் வாழ்வியல் முறைகளை தமிழ் இலக்கியங்கள் வழி எடுத்தியம்பிய இப்பயிலரங்கு இரண்டு அங்கங்களாக நடைபெற்றது. முதல் அங்கத்தில் பல்வேறு தமிழ் இலக்கியங்களின் கதைக்கருக்களையும் அவையுணர்த்தும் வாழ்வியல் நெறிகளையும் ‘இலட்சியமும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் பொதுநல மருத்துவரான திரு சரவணன் சண்முகம்.

மேலும் இவ்வங்கத்தில் ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் ‘பாஞ்சாலி சபதம்’ இலக்கியத்தை நாடக வடிவில் படைத்தனர். மாணவர்களின் நாடகக் கதாபாத்திர தோற்றமும் வசன உச்சரிப்பும் பங்குகொண்டோரின் பாராட்டைப் பெற்றன.

 மாணவர்கள்  இலக்கியப் பயிலரங்கின் வகுப்பு நடவடிக்கைகளில் பங்குகொள்கின்றனர்.
மாணவர்கள் இலக்கியப் பயிலரங்கின் வகுப்பு நடவடிக்கைகளில் பங்குகொள்கின்றனர். - படம்: மோனலிசா 

தொடர்ந்து இப்பயிலரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் திரு விக்ரம் நாயர், “தமிழ் இலக்கியங்களின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது மிகவும் அவசியம். எளிமையான கதைகள் வழியாகவும் மனதில் நிற்கும் கதைமாந்தர்கள் வாயிலாகவும் அவற்றை இளையர்களிடம் கொண்டுசெல்லும் இம்முயற்சி பராட்டுதலுக்குறியது,” என்று கூறினார்.

இப்பயிலரங்கின் இரண்டாவது அங்கத்தில் மாணவர்கள் எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி வகுப்பறைகளில் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு கூறுகளைக் கற்றனர்.

திரைப்பாடல்களில் வாழ்வியல் நெறிகள், சங்கப் பாடல்களில் விழுமியங்கள், சிலப்பதிகாரம், மகாபாரதம், கம்பராமாயணம், மணிமேகலை, புதுக்கவிதை, நாட்டுப்புறப்பாடல் ஆகிய தலைப்புகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.

காணொளி, பாடல்கள், கேள்வி-பதில் அங்கம் என பல சுவாரசிய அங்கங்களுடன் இடம்பெற்ற இவ்வகுப்புகளை திரு க.இராஜகோபாலன், திரு விமலன், திருவாட்டி இன்பா, திரு சந்தன் ராஜ், திரு சே. ரமேஷ் ராஜா, திரு ராம்குமார் சந்தானம், திரு பொன் சசிக்குமார், திரு சரவணபெருமாள் ஆகியோர் வழிநடத்தினர்.

“இலக்கியங்கள் தரும் விழுமியங்கள்” எனும் கருப்பொருளில் ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பயிலரங்கில் 250க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

“மாணவர்களுக்கு இலக்கியங்கள்மீது அதிக நாட்டத்தைத் தூண்டவும் அவற்றிலுள்ள விழுமியங்களைப் பற்றி மாணவர்கள் ஆழமாக அலசி ஆராயும் ஒரு தளத்தை உருவாக்கும் நோக்கத்துடனும் இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்தோம்,” என்று கூறினார் வடக்கு வட்டார குழுமப் பள்ளிகளின் செயற்குழுத் தலைவி திருவாட்டி யோகேஸ்வரி பாலசுப்பிரமணியன்.

“பல பள்ளிகள் இணைந்து பங்குகொள்வது கற்றலை மேம்படுத்தும் அதேநேரம், பிற பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடவும் அவர்களுக்குள் புரிதலை வளர்க்கும் வாய்ப்பையும் அளிக்கிறது,” என்று கூறினார் வடக்கு வட்டார குழுமப் பள்ளிகளின் செயற்குழு துணைத் தலைவி திருவாட்டி சென்னக்கேசவலு ஷீலா.

“தமிழ் இலக்கியங்கள் படிப்பதற்குக் கடினமாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே அதில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தேன். இந்தப் பயிலரங்கின் மூலம் எளிமையான முறையில் பல இலக்கியங்களின் கதைகளையும் அதில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றியும் நிறைய தெரிந்துகொண்டேன்,” என்று கூறினார் விட்லி உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் அமிர்தா திருநாவுக்கரசு, 14.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உட்லண்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் சக்திகணேஷ் செந்தில்குமார், 15, “ஆசிரியர்கள் இலக்கிய கூறுகளை எளிமையாகவும் நகைச்சுவையுடனும் எடுத்துரைத்தது சுவாரசியமாக இருந்தது.

“நண்பர்களுடன் இணைந்து கலந்துகொண்டது மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்