சவால்களைத் தாண்டி வந்த பட்டதாரிகள்

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் படிப்பதால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற சமுதாயத்தின் சிந்தனையை உடைத்து எறிந்து மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களுக்கு உதவ உளவியல் துறையில் பட்டப்படிப்பை இவ்வாண்டு முடித்தார் குமாரி கெஜலெட்சுமி நிக்கோல். 

26 வயதான இவர் 2022இல் கப்லான் பயிலகத்தின் வழி எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் சார்ந்த பட்டப்படிப்பை நிக்கோல் மேற்கொண்டார். 

பகுதி நேரமாக படித்துகொண்டே வேலை செய்து வந்த நிக்கோல் குடும்பம், படிப்பு, இணைப்பாட வகுப்புகள் என பல பொறுப்புகளைச் சுமந்ததை கூறினார். எனினும், குடும்பத்தின் ஆதரவால் மனம் தளராமல் சென்ற மாதம் பட்டப்படிப்பை முடித்து தற்போது அரசாங்க வேலையில் உள்ளார்.  

குறிப்பாக தந்தையின் ஆதரவு வாழ்க்கையில் எந்தவிதச் சிக்கல்களையும் கையாள முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாக நிக்கோல் பகிர்ந்து கொண்டார்.   

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்து கணினி தொழில்நுட்பம் சார்ந்த படிப்பை முடித்து தொழில்நுட்பக் கல்விக் கழக உயர் நைடெக்கில் மின்னியல் பொறியியல் படிப்பை மேற்கொண்டார். இத்துறையில் ஈடுபாடு இல்லாததை நிக்கோல் பகிர்ந்துகொண்டார். 

“தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் படிப்பவர்களுக்கு எதிர்காலம் ஒன்றும் இல்லை என்று பலரும் என்னிடம் கூறினர். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எனக்கு பிடித்த துறையில் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை ஊக்குவித்தது. எனினும் சாதிக்க துடிக்கும் எனக்கு சுற்றியிருப்பவர்கள் தொடர்ந்து எதிர்மறையாக பேசியது மனதை புன்படுத்தியது” என்றார் இவர். 

இந்தப் பாகுபாடுகளை எதிர்கொண்ட நிக்கோலின் நண்பர்கள் மனமுடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகியதை பகிர்ந்துகொண்டார். நம் சமுதாயத்தை பாதிக்கும் மன அழுத்தம், நீடிக்கும் கவலை பிரச்சினைகளை ஆராய உளவியல் துறையில் ஈடுபட்டார். 

எம்டிஐஎஸ் பல்கலைக்கழகத்தில் தனது உளவியல் பட்டயத்தை முடித்துவிட்டு கப்லான் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். பட்டப்படிப்பை மேற்கொள்ளும் நேரத்தில் மனநலம் தொடர்பான பல புதிய ஆய்வுகளைச் செய்தது குறித்தும் இத்துறையில் இவருக்கு இருந்த நாட்டம் அதிகமாக இருந்தது குறித்தும் நிக்கோல் பகிர்ந்து கொண்டார். 

நிக்கோலின் சாதனைகளைக் கண்டு அவரின் நண்பர் ஒருவரும் தனது பட்டப்படிப்பை மேற்கொள்கிறார் என்றார் நிக்கோல். 

எதிர்காலத்தில் குற்றவியல் உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பின் போதைப் பொருளுக்கு அடிமையாக உள்ளவர்கள், இளையர்களுக்கிடையே அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகள் போன்ற சமுதாயச் சிக்கல்களைக் கையாள விரும்புகிறார் நிக்கோல். 

வயது ஒரு தடையன்று

நல்ல வேலை , நல்ல பதவி இருந்தும் பட்டப்படிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து தனது 38 வயதில் நிதி தொடர்பான துறையில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்டார் திரு நவின் ஜூட். 

கப்லான் பயிலகத்தின் மூலம் லண்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முழு நேரமாக வேலை செய்துகொண்டே தனது பட்டப்படிப்பை ஹானர்ஸ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

நல்ல வேலையில் இருந்தும் அந்த சான்றிதழ் முக்கியத்துவம் பற்றியும் எதிர்கால வாய்ப்புகள் பற்றியும் பலர் அவரிடம் பகிர்ந்துகொண்டதால் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார். 

இதற்கு முன் வணிகம் தொழில்நுட்பம் தொடர்பான துறையில் பலதுறை கல்லூரியில் தனது பட்டயத்தை முடித்த இவர் அத்துறையின் மீது ஆர்வம் இல்லாமல் தனது அக்காவின் ஊக்கத்தினால் வங்கியில் வேலைக்கு சேர்ந்தார். 

ஆனால் பல்கலைக்கழக வாழ்க்கை இவருக்கு ஒன்றும் புதிதல்ல. தனது 25 வயதில் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த இவர் தனது வயதில் உள்ள நண்பர்கள் பணம் சம்பாதிப்பதை பார்த்து தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். 

“எனக்கும் என் நண்பர்களைப் போல பணம் வேண்டும் என்ற ஆசையினால் அந்த முடிவை எடுத்தேன். சிறுவயதில் அதன் விளைவுகள் தெரியவில்லை. விளையாட்டுத்தனம் அதிகம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு படிப்பது சிரமம் என்றாலும் விரைவில் என்னை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டேன்,” என்றார் தற்போது சிங்கப்பூரில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக இருக்கும் இவர். 

தொற்றுநோய்க் காலத்தின்போது கப்லான் பயிலகத்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர முடிவு செய்தார் இவர். முழுக்க முழுக்க வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சலுகை இருந்ததால் வேலை, வீட்டுப் பொறுப்புகள், குழந்தைப் பராமரிப்பு போன்ற அன்றாடப் பொறுப்புகளை அவரால் சமாளிக்க முடிந்தது. தனது வெற்றிக்கு பெரிய காரணம் தனது மனைவி என்பதை அவர் பகிர்ந்துகொண்டார். 

“வீட்டிலிருந்தே வேலை செய்யும் சலுகை என் மனைவிக்கு இருந்ததால் மகனையும் பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டார். எனது தேர்வு நேரங்களில் மன உளைச்சலை புரிந்துகொண்டு எனக்கு உறுதுணையாக இருந்தார்,” என்று தனது மனைவி, மகன் இருவரை பற்றியும் பகிர்ந்துகொண்டார். 

வேலை முடிந்து வீட்டில் இரவு வரை வகுப்புகளையும் வீட்டுப் பாடங்களையும் முடிப்பதற்குள் தனது மகன் உறங்கிவிடுவார் என்ற கவலையையும் அவர் பகிர்ந்து கொண்டார். 

அப்பா வீட்டில் இருந்தும் ஏன் தன்னுடன் விளையாட வரவில்லை என்ற ஏக்கத்தை அவரின் நான்கு வயது மகன் குரல் கொடுத்ததையும் சொன்னார். எனினும் கல்வியின் முக்கியத்துவத்தைத் தனது மகனுக்கு எடுத்துக் கூற இருவரும் அவர்களின் தனிப்பட்ட பள்ளி வாழ்க்கையை கலந்துரையாடி வீட்டுப் பாடங்களை ஒன்றாக செய்வார்கள் என்று திரு நவின் கூறினார். 

“என்னை மேம்படுத்திக் கொள்வதோடு, எதிர்கால வேலை வாய்ப்புகளைத் தேட இந்த பட்டப்படிப்பு உதவும். நான் அனுபவித்த சிரமங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஆனால் இதனால் விளையும் பலன்கள் நீண்ட காலம் உதவும்” என்று பெருமையுடன் கூறினார் திரு நவின். 

வாழ்நாள் கற்றலைக் கடைப்பிடிக்கும் தம்பதி

கிடைக்காத வாய்ப்புகளை எண்ணி வருந்தாமல் கிடைத்த வாய்ப்புகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி வாழ்நாள் கற்றலை ஒரு தம்பதியராக மேற்கொண்டனர் திரு சாக்கியஸ் எலியா சுரேந்திரன் - திருமதி திலகவதி ராமசந்திரன். 

39 வயதான இருவரும் வேலை இடத்தில் புதிய வாய்ப்புகளைப் பெற  ஆசைப்பட்டதோடு தங்களின் 7 வயது மகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று விரும்பினர். 

சிறுவயதிலிருந்தே சுபாஷ் ஆனந்த், டேவிட் மார்ஷல் போன்ற வழக்கறிஞர்களைக் கண்டு வியந்த திரு சாக்கியஸ் தானும் சட்டத் துறையில் சேர வேண்டும் என்று விரும்பினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கு செல்ல விருப்பப்பட்ட இவர் அது முடியாத போதிலும் ஏ நிலைத் தேர்வுகளுக்குப்பின் கலை மேலாண்மைத் துறையில் தனது பட்டயத்தை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். எனினும் சட்டத்துறையில் சேர்ந்து பயிலவேண்டும் என தனக்குள் இருந்த வெறி அடங்கவில்லை. 

“பிடித்த பள்ளி கிடைக்காவிட்டாலும் அந்த இலக்கை அடைய வேறு என்ன வழிகள் உள்ளன என்பதை ஆராயத் தொடங்கினேன். என் கனவைக் கைவிட விருப்பமில்லை,” என்றார்  திரு சாக்கியஸ். 

இதில் தொற்றுநோய்க் காலத்தில் வேலை இருக்குமா இருக்காதா என்ற குழப்ப நிலையிலும் தன்னை மேம்படுத்த இதுவே சரியான வாய்ப்பு என்று நினைத்தார் திருமதி திலகவதி.

வணிகத் துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த இவர் தனக்கு கிடைத்த அனுபவம் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேவையற்றதாக மாறிவிடக்கூடாது என்ற பயம் இவருக்கு வந்தது. 

“சிங்கப்பூரில் பட்டப் படிப்பு சான்றிதழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அறிந்து பிற்காலத்தில் இதே துறையில் வேலை தேடும் கட்டாயம் வந்தால் இந்த படிப்பு நமக்கு உதவும் என்று நம்பினோம். கையில் இந்தச் சான்றிதழ் கிடைத்தவுடன் இந்நிறுவனத்தில் பல புதிய வாய்ப்புகள் எனக்கு அளிக்கப்பட்டன,” என்று பகிர்ந்துகொண்டார் திருமதி திலகவதி. 

பல கலந்துரையாடல்களுக்குப் பிறகு இருவரும் கப்லான் பயிலகத்தில் 2020இல் இப்பயணத்தைத் தொடங்கினர்.  

இருவரும் முழுநேர வேலைகளை முடித்த பின் அவர்களின் ஏழு வயது மகளையும் பார்த்துக் கொண்டு வீட்டுப் பொறுப்புகளையும் சமாளித்தனர். 

“இந்த ஒன்றரை ஆண்டில் பல சிக்கல்கள், மன உளைச்சல் வந்தாலும் சற்று ஓய்வுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து கலந்துரையாடிய பிறகுதான் முடிவுகளை எடுப்போம். எந்தச் சவால்கள் வந்தாலும் ஒன்றாகச் சமாளிப்போம் என்ற மன உறுதி எங்களிடம் இருந்தது,” என்று சிக்கல்களையும் கடினமான நேரங்களையும் பகிர்ந்துகொண்டார் திருமதி திலகவதி. 

இந்த வயதிலும் எதற்குப் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த சான்று தங்களின் வேலைக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது என்று படிப்பைக் கைவிடவில்லை என்பதை திருமணமாகி 8 ஆண்டுகளான இந்த தம்பதியினர் பகிர்ந்துகொண்டனர். 

“சக மாணவர்கள் ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் என் பிறந்த நாளைக் கண்டறிந்து என்னைச் செல்லமாக ‘அங்கிள்’ என்று கூப்பிட்டார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என் படிப்பில் மீது கவனம் செலுத்தினேன்,” என்றார் திரு சாக்கியஸ். 

பர்மிங்ஹம் சிட்டி பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் படிப்பில் ஹானர்ஸ் பட்டத்தை இவ்வாண்டு ஜூலை மாதத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் திரு சாக்கியஸ் பெற்றார். 

இந்தப் பட்டப் படிப்பினால் சட்டத்துறை தொடர்பான வேலை கிடைத்ததில் பெருமகிழ்ச்சி கொண்டுள்ளார் திரு சாக்கியஸ்.

இதில் திருமதி திலகவதி பர்மிங்ஹம் சிட்டி பல்கலைக்கழகத்திலிருந்து வணிக நிர்வாகம் துறையில் 2021ஆம் ஆண்டு முதல் வகுப்பில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!