தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர்களின் மனநலனில் அக்கறை செலுத்துவது முக்கியம்

3 mins read
29a2db77-9ffa-49d0-990f-9e961c79d7f5
பழனியப்பன் கண்ணன். - படம்: பே.கார்த்திகேயன்
multi-img1 of 3

ஊழியர்களின் மனநலத்தில் அதிக அக்கறை செலுத்தும் பழனியப்பன் கண்ணன், 57, தான் பணிபுரியும் நிறுவனத்தில் அதற்காகப் பல முயற்சிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

கடந்த ஆறாண்டுகளாக திரு கண்ணன் துணைத் திட்ட இயக்குநராகப் பணியாற்றிவரும் ‘பியூர்டெக் என்ஜினியரிங்’ நிறுவனம் அண்மையில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார விருது விழாவில் முதல் முறையாக ‘கேர்’ விருதை வென்றுள்ளது.

இவ்வாண்டு வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார விருது விழாவுக்குக் கிடைத்த 512 விண்ணப்பங்களில் 246 நிறுவனங்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. அதில் ‘கேர்’ விருதுபெற்ற ஏழு நிறுவனங்களில் ஒன்று ‘பியூர்டெக் என்ஜினியரிங்’ நிறுவனம்.

ஊழியர்களின் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் முன்மாதிரி நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

சீரான மனநலத்துடன் இருந்தால்தான் ஊழியர்கள் வேலையில் கவனம் செலுத்தி, உற்பத்தித்திறனை உயர்த்த முடியும் என்பதை உறுதியாக நம்புகிறார் கண்ணன்.

20 ஆண்டுகளுக்கு மேலாக இயந்திர, மின்பொறியியல் சேவைகளை வழங்கிவரும் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பட்டியலில், நிலப்போக்குவரத்து ஆணையம், பொதுப் பயனீட்டுக் கழகம், கப்பற்பட்டறைகள் ஆகியவை அடங்கியுள்ளன.

முன்பு எண்ணெய், எரிவாயுத் துறையில் பணிபுரிந்த திரு கண்ணன், 2001ஆம் ஆண்டு வேலைக்காக சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்தார்.

கொவிட்-19 தொற்றின்போது ஊழியர்கள் எதிர்கொண்ட சவால்களை விளக்கிய அவர், ஊழியர்கள் பெரும்பாலும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்றார்.

கொள்ளை நோய்ச் சூழலாக இருந்தாலும் அவர்களின் வேலை வாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஊழியர்களுக்கு உறுதிதரப்பட்டது.

மேலும், ஊழியர்களின் குடும்பத்தினரின் அத்தியாவசிய செலவுகளுக்காக ஊழியர்களுக்குச் சம்பளம் முன்கூட்டியே வழங்கப்பட்டது.

நோய்ப் பரவல் குறைந்து சில மாதங்களுக்குப் பிறகு ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பிய போது ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கு மறுபயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்தியா, பங்ளாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள் நிறுவனத்தில் புதிதாக சேரும்போது அவர்கள் மூத்த ஊழியர்களுடன் இணைந்து செயல்பட நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அதனுடன், ஊழியர்களின் மனநலனைப் பேணுவதற்காக நிறுவனத்தில் நியமிக்கப்பட்ட மனநலத் தூதர்கள் இருவர் மனநலம் சார்ந்த முயற்சிகளை மேற்பார்வையிட்டு வழிநடத்துவதோடு மனநலப் பயிலரங்குகளுக்கும் ஏற்பாடு செய்கிறார்கள்.

கட்டுமானத் தளங்களுக்குச் சென்று தங்கள் பணிகளில் ஈடுபடும் வெளிநாட்டு ஊழியர்கள் மின்சார ஆபத்து, உயரத்தில் வேலை பார்ப்பது, நிலத்தைத் தோண்டி கம்பிவடங்களைப் பொருத்துவது போன்ற ஆபத்துள்ள வேலையிடச் சூழல்களையும் கொண்டுள்ளனர்.

இதுவரை பணியிட விபத்துச் சம்பவங்கள் பெரிதளவில் நடக்கவில்லை என்றாலும், கம்பிவடங்களைக் கையாளும்போது சிறிய வெட்டுக் காயங்கள் எளிதாக ஏற்படும் சாத்தியம் உள்ளது.

அதனால் இதற்கு முன்பு ஊழியர்கள் பயன்படுத்திய பருத்திக் கையுறைகளுக்கு மாற்றாக வெட்டுகளிலிருந்து பாதுகாக்கும் கையுறைகளுக்கு மாற்றப்பட்டன.

கடும் வெயிலில் பாதுகாப்புச் சாதனங்களை அணிந்துகொண்டு வேலை பார்ப்பது கடினம் என்ற போதிலும் கண்ணன் முடிந்த அளவில் ஊழியர்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்.

உயரமான தளங்களில் வேலை பார்ப்பதற்கு ஊழியர்கள் பாரந்தூக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். நீடித்த நிலைத்தன்மை நடைமுறைகளை கவனத்தில் வைத்துக்கொள்ளும் விதமாக பாரந்தூக்கிகள் டீசல் எரிபொருளுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்குகின்றன. இதனால் உடல்நலனைக் காக்கும் விதத்தில் டீசல் புகையைச் சுவாசிப்பதை மட்டுப்படுத்த முடியும்.

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதால் எழும் அபாயங்கள் குறித்த செய்தி அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வந்தன. அதுகுறித்து கருத்துத் தெரிவித்த கண்ணன், நிறுவனத்தில் ஊழியர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

முடிந்த அளவு அதிலடங்கி உள்ள தளவாடங்களைக் குறைப்பதாலும் ஊழியர்கள் வேலை செய்யும் கட்டுமானத் தளங்கள் அவர்களின் தங்குவிடுதிகளுக்கு அருகில் இருப்பதாலும் ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றார் அவர்.

தங்களின் குடும்பங்களை விட்டு பிழைப்பதற்காக சிங்கப்பூரை நாடி வரும் ஊழியர்களின் பாதுகாப்பில் அதிகக் கவனம் காட்டும் கண்ணன், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை மன உளைச்சலின்றி குடும்ப உறுப்பினர்கள்போலப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

150 வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பாதுகாப்பு அமர்வுகள் நடத்தப்படுகின்றன.

இலவச மருத்துவப் பரிசோதனை, வெளிநாட்டுப் பயணங்கள், ஊழியர்களுக்குச் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள், கிறிஸ்துமஸ் பரிசு , டுரியான் பழப் பண்டிகை, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளும் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன.

நிறுவனத்திற்கு விருது கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கும் கண்ணன், கட்டுமானத் துறை சிங்கப்பூரின் பொருளியலுக்கு அதிகளவில் பங்காற்றுகிறது என்றார். இதனால் ஊழியர்களை கவனமாகப் பார்த்துக்கொள்வது அனைத்து நிறுவனங்களின் கடமை என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்