தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோயின் வீழ்ச்சியில் ஓர் அழகனின் எழுச்சி

3 mins read
1751a0fe-4b0b-461b-ba43-4d2b4b7a6bb0
உடற்பயிற்சி மீது அக்கறை செலுத்தும் அருண் - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 5

உடற்கட்டோடு 59 வயதிலும் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் கட்டப் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். தற்போது அந்த கொடிய நோயிலிருந்து மீண்டு மறுவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அருண், ‘பேஷன் ஃபார் கேன்சர்’ எனும் தொண்டு நிகழ்ச்சியின் தொடக்கப் பதிவில் ஆண் அழகனாக பவனி வந்தார்.

சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் தடுப்பு நிலையத்தின் $100,000 நிதி திரட்டும் இலக்கிற்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பவனி வந்த புற்றுநோயால் பாதிப்படைந்த, அதிலிருந்து மீண்ட 16 பேரில் ஒருவரான அருண் மட்டுமே தமிழர்.

ஈராண்டுகளுக்கு முன்னர் ‘மேன்ஹண்ட் சிங்கப்பூர்’ எனும் ஆண் அழகன் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அருண், இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வை அதிகரிக்க ஆவலுடன் காத்திருந்தார். இந்த வயதிலும் பகுதிநேரமாக மாடலிங் செய்து வரும் இவர், உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

28 ஆண்டுகளாக பள்ளிகளில் உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் இவர், அன்றாடம் உடற்பயிற்சிக் கூடங்களில் நேரத்தைச் செலவிடுகிறார். புற்றுநோய் தாக்கியபோதும் இவரது நேர்மறையான மனப்போக்கு மாறவில்லை.

16 வயதில் காசநோயால் இவரது நுரையீரலில் துளை விழுந்தது. மிகவும் மெலிந்த உடலுடன் தோற்றமளித்த இவர், காசநோயிலிருந்து குணமடைந்ததும் உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடல் வலிமையை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

ஒவ்வொரு முறையும் மலம் கழிக்கும் போதெல்லாம் சிவப்புப் புள்ளிகளைக் கண்டதும் அது ரத்தமாக இருக்கும் என்று அஞ்சி மருத்துவரை நாடினார். அது மூன்றாம் கட்ட பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறி என்று அறிய வந்ததும் மனமுடைந்து போனார். எண்ணற்ற கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை அமர்வுகளுக்குச் சென்றார். புற்றுநோய்க் கட்டி, மலக்குடல், பெருங்குடலில் 20 சென்டிமீட்டர் ஆகியன அகற்றப்பட்டன.

சிகிச்சை முடிந்த மறுநாள் கண்ணாடியில் பார்த்தபோது தன்னை அடையாளம் காண முடியாமல் தடுமாறினார் அருண். 20 கிலோ எடை இழந்த அவருக்கு அவரது மனைவியும் மூன்று பிள்ளைகளும் ஆறுதலாக இருந்தனர்.

ஏற்கெனவே உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வந்ததால் அவரால் எளிதில் சிகிச்சையின் பக்கவிளைவுகளைப் பொறுத்துகொள்ள முடிந்தது. வாழ்க்கையைப் புற்றுநோய் புரட்டிப்போட்டபோதிலும் உடற்பயிற்சி மீதான மோகம் இவருக்குக் குறையவில்லை.

மருத்துவமனையில் இருந்தபோதே கைகளையும் கால்களையும் மெதுவாக அசைத்து உடற்பயிற்சி செய்துவந்தார் அருண்.

“துடிப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். எனக்குப் புற்றுநோய் வரும் என்று நான் ஒரு கணம்கூட எதிர்பார்க்கவில்லை. என்னால் இனிமேல் எதுவும் செய்ய முடியாதே என்று கேள்விகளை எழுப்புவதற்குப் பதிலாக, என்னால் இனிமேல் என்ன செய்ய முடியும் என்று துணிச்சலோடு எழுந்தேன்,” என்று கூறினார் அருண்.

நோய் தாக்குவதற்கு முன்னர் இருந்ததுபோலவே மீண்டும் துடிப்புமிக்கவராக மாறிய அருண், உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டிய அவசியத்தை பிள்ளைகளிடம் விதைத்துள்ளார். உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லும்போது தமது இளைய மகனை கூடவே அழைத்துச் செல்லும் இவர், நோய் தமது வாழ்க்கையைச் சிதைத்திருந்தாலும் அது தன்னைச் செதுக்கியுள்ளதாக எண்ணுகிறார்.

குறிப்புச் சொற்கள்